நிலம்




1)

ஆற்றின் மடியூறிச் சேற்று வெள்ளம்
பாய்ந்தோடும் கார் காலங்களில்
தண்ணீருக்காக அலைந்து நொந்தவள்
தன்னந்தனியாக நிலத்தை அகழ்ந்து
தெள்ளிய நீர்க் கிணறொன்றை உருவாக்கினாள்
அவளாக மண் குலைத்துச் சுமந்து
குளிர்ந்த நிழலை வைத்திருக்கும்
குடிசையொன்றையும் கட்டியெழுப்பினாள்
ஓய்வற்ற காலங்கள் அவள் கரங்களில் வந்தமர்ந்து
நிலமெங்கும் அவளைத் திரிந்து வருந்திடச் செய்தது

2)

கிணற்றிலிருந்து வீடு வரைக்கும்
நிழலைப் பரப்பும் கனி மரங்கள் வரிசையில் நிற்கும்
வெற்றிலையும் மிளகும் ஆங்காங்கே சுற்றிப் படர்ந்திருக்க
இராசவள்ளி, பீர்க்கு, புடோல், பாகல்
கொடிகளில் அசைந்தாடும்
ஒரு வாளித் தண்ணீர் கொடிகளுக்கும்
ஒரு குடம் தண்ணீர் வீட்டுக்கும் என
மர்மக் குரலொன்றுக்குக் கட்டுப்பட்டவளாக
நீர் சுமந்து
நிலத்தின் மேனியை அலங்கரித்தாள்

தனது கட்டளைக்கு இணங்கி வராத நிலத்தைப்
பண்படுத்திப் பண்படுத்திப் பயிர்களை நட்டிருந்தாள்
வசந்த காலங்களில் செந்நிறப் போர்வை போர்த்தும்
முள்முருங்கைகளை நெருக்கமாக நட்டு
பயிர் விளையும் பூமியைப் பாதுகாத்தாள்
வியர்வையையும் நீரையும் பருகிப் பருகி
அவளைச் சூழப் புதிது புதிதாய்
செழித்தது நிலம்



3)

முட்டைகளைக் காவி எறும்புகள்
திட்டையேறும் நாட்களில்
விறகுகளை வெட்டியடுக்கி
மழைக் காலத்தை எதிர் கொள்ளத் தயாராகுவாள்
வெள்ளத்துக்கு அஞ்சும் பொருட்களையெல்லாம்
பரண்மீது பத்திரப்படுத்தியிருப்பாள்
தண்ணீரின் குரலைக் கேட்டவாறு
தலை சாய்த்துக் கிடக்கும் இரவுகளில்
ஆற்றின் கரையேறி வெள்ளம்
அவள் முற்றத்துக்கு வந்துவிட்டதாவென்று
கைவிளக்கையேந்தி நொடிக்கொருதரம்
கதவு திறந்து பார்ப்பாள்
நிலம் அவளது கால்களின் கீழே ஈரலித்துக் கிடக்கும்

4)



மணல் நிறைந்து
மடிகொதித்துக் கொண்டிருக்கும்
கோடை காலங்களில்
அவளது ஆற்றின் ஊற்றுக்கள் வற்றியதேயில்லை
அவள் தோட்டத்துப் பட்சிகள் தொலைபுலம் செல்லவுமில்லை
நிலத்தின் கருணையை நம்பியிருந்தாள்


5)

மணக்க மணக்க வேகும் நெல்லை
வெண்ணிறக் குருத்தோலைப் பாய்களில் காயவிட்டு
பட்சணங்களை அள்ளிக் கொடுத்து
அந்தச் சிறுமியைக் காவலிருத்தியிருப்பாள்
நெல்மணி பொறுக்க வரும் பறவைகளை விரட்டத்
தளவாடியொன்றையும் கொடுத்துவைப்பாள்
நிலத்தின் விளைச்சல்களைக் களஞ்சியங்களில் சேகரித்தாள்

6)

ஆற்றோரத் தோப்பிலே பழுத்த தென்னையோலைகள்
பாடலொன்றை உதிர்த்தவாறு வீழ்வதைக் கேட்டபடி
மதிய உணவை உண்பாள்
அந்தி வேளையில் அவற்றைச் சேகரித்து
ஆற்றிலே ஊறவைத்துத் திரும்புவாள்
பலாமரங்களில் படர்ந்து தொங்கும்
பழுத்துச் சிவந்த மிளகுக் கதிர்களையும்
அடுத்த நாள் சமையலுக்கான காய்களையும் கிழங்குகளையும்
சேலை மடியில் சேகரித்து வருவாள்
நிலத்தை இன்னொரு துணையெனக் கொண்டாள்

7)

இடைவேளைகள் ஏதுமற்ற
நிகழ்ச்சி நிரலொன்றைத் தினந்தோறும் வைத்திருந்தாள்
பன்புல், தென்னை , பனை, தாளை என
ஏதோ ஓரோலை கொண்டு
பாய், தட்டு, கடகங்களில்
தனது படிமங்களை இட்டு நிரப்பி
இரவுகளை இழைத்துக் கொண்டிருப்பாள்
அன்றேல்,
சிரட்டைகளைச் சீவித் துளையிட்டு
சீரான காம்புகளில் பொருத்தி அவற்றால்
இருளை அள்ளிக் கொட்டுவாள்
நிலத்தின் சூழ்ச்சிகளிலிருந்து தன்னை விடுவித்தாள்

8)




சேவல் கண்விழித்துக் கூவும்
அதிகாலையில் எழுந்து
கிணற்றிலிருந்து முதல்வாளித் தண்ணீரை
அள்ளியெடுத்து வருகையில்
சுவர்க்கத்தின் தென்றல் அவளைத் தழுவும்
இரவில் வீழ்ந்த மாங்கனிகள் பரவியிருக்கும்
முற்றத்திலிருந்து இராப் பறவைகள் நீங்கியிருக்கும்
புற்று மண்தேடிப் பூசிமெழுகியிருக்கும்
சமையலறையைப் பரபரவெனக் கூட்டித்
தண்ணீரைக் கொதிக்க வைத்துத்
தேனீர் மணம் வீடெங்கும் பரவிடப்
புதிய நாளைத் தொடங்குவாள்
அதிகாலைத் தொழுகை முடித்து
காலை உணவைத் தயாரிக்கையில்
இரகசியக் கிளைகளில் துயின்ற பறவைகள்
கலகலத்துப் பறக்கும்
நிலத்தின் ஒளி அவளிடமிருந்து உதித்தது

9)

கோப்பிப் பூக்களின் சுகந்தம் படிந்திருக்கும்
அவள் முற்றத்தில்
சூரியக் கதிர்கள் பரவத் தொடங்கும் நேரம்
கால் தடங்கள் ஏதுமின்றி முற்றத்தைப் பெருக்கிவைப்பாள்
அந்தத் தூய முற்றத்தில்
ஓரிரவு முழுதும் ஆற்றில் ஊறிய
ஓலைகளை எடுத்து வந்து பரப்புவாள்
இரண்டாகக் கிழித்து நெய்து
கிடுகுகளை அடுக்கிய பின்
அழுக்கு நீங்கக் குளித்து வருவாள்
புதுத் தெம்புடன்
நிலத்துக்கு நிழல் வழங்கவும் அவளே உழைத்தாள்

10)




சிறுமி விரும்பும் உணவுகளைத் தனது
கைச்சுவையையும் அன்பையும் கலந்து சமைத்துப்
பள்ளிக் கூட மணியோசை கேட்கும் வரைக் காத்திருப்பாள்
உரலிலே மாவிடித்த படியோ
அரிசியைப் புடைத்த படியோ
அவளது நிலம் நகர்ந்து கொண்டேயிருந்தது

11)

அடுக்கடுக்காகக் கிடக்கும் மண்பானைகளுக்குள்
சிறுமிக்கான பட்சணங்களைத் தயாரித்து வைத்திருப்பாள்
‘பிடிஅரிசி”ப் பானை’ தனில்
இரண்டு பிடிகள் சிறுமியின் கையால்
அல்லது
பாட்டியின் கையால் தினமொரு பிடியுமென
வாசல் வரும் யாசகருக்காக
அரிசிபோட்டு வைத்திருப்பாள்
வழங்கும் கரங்களை நிலத்திடமிருந்தே அவள் பெற்றிருந்தாள்


12)

ஆறு தேங்காய்களுக்கு ஒரு போத்தல் எண்ணெய் என்ற
தப்பாத அவள் கணக்கின் படி
காலையிலே தேங்காய்களைத் துருவி வேகவைப்பாள்
பிற்பகலில் பாலைப் பிழிந்து கொதிக்க வைத்து
மிதந்து வரும் எண்ணெய்யை
அகப்பையால் பக்குவமாய்ச் சேகரிப்பாள்
மீண்டும் அதை அடுப்பில் வைத்து
எண்ணெய் கொதித்து மணக்கும் வேளையில்
தென்னங்கீற்றுகளினூடாக நிலவையழைத்துக் கொண்டு
இரவு அவள் வாசலுக்கு வந்துவிடும்

13)



குரக்கன் கதிர்களை அறுத்தெடுக்கும்
குளிர்காலங்களில்
வெண்ணெய்க் கட்டிகள்போல
என்றென்றும் மணம்வீசும் எண்ணெய்
உறைந்து கிடக்கும் அதிசயத்தைச்
சிறுமிக்குக் காண்பிப்பாள்
வயல் வெளிமீது
பனிப்போர்வை மூடிப் பதுங்கியிருக்கும் நிலம்


14)

தனிமையை இழைத்து இழைத்து நெய்தவள்
கடின இருளைத் துளையிட்டு
அகப்பைகளில் பூட்டியவள்
அந்த வீட்டின் மாபெரும் மௌனத்தைக்
கலைக்க முடியாது தவித்தாள்
கணவன், மகள், கடைசியில் சிறுமியும்
திரும்பி வராமற் போன பின்னர்
அவர் தம் நினைவு துலங்கும் பொருட்களையெலாம்
தடவித் தடவித் தினமும்
காலத் தீர்ப்பின் வலியினால் நொந்தாள்

இறுதியில்
ஓயாது அழைத்துக் கொண்டிருந்த
அரூபக் குரலொன்றுக்குப் பதில் அளித்து
அவள் போனாள்
புற்களையும் செடிகளையும் வளரவிட்டு
அந்த நிலம்
அவளைப் பத்திரப் படுத்திக் கொண்டது



2009.08.27
(கலைமுகம் 50 வது மலர் 2010)




ஆழங்காண முடியாக் கிணறொன்றிலிருந்து
அவள்
நீர் மொண்டுவரத் தொடங்கியிருந்தாள்

இருகரங்களிலும் சுமந்து செல்லும்
நீர்க் கலயங்களில் மோதி நனைந்து
தன்னைச் சுதாகரித்துக் கொண்டு
அவளைக் கடந்தது
அந்திப் பொழுதின்
வயல் காற்று

அவளைப் போலவே தேய்ந்து
அவளது ஆன்மாவைப் போல் ஒளிர்விடும்
பாதி நிலவு
வீட்டுக்கும் கிணற்றுக்கும்
அலைந்து கொண்டேயிருந்தது
அவள் முன்னும் பின்னும்

ஆறுதல் மொழிகளையிழந்த அது
கிணற்றின் இருளுக்குள் வீழ்ந்து
ஒளி பாய்ச்சியது
அந்தக் கிணற்றைச் சூழவும்
தேங்கி நின்ற நீரினுள்
கால் நனைத்தவாறு
அவளுக்குத் துணையாகக் காவல் இருந்தது
பின்
அவள் சுமந்து செல்லும்
தண்ணீர்க் குடங்களுக்குள் தத்தளித்தபடி சென்று
என்றுமே நிரப்ப முடியாத பானையொன்றினுள்
வீழ்ந்து துடித்தது

ஆதிக் களைப்புடன்
அவள் துயிலில் வீழ்ந்த நள்ளிரவில்
இரத்தம் கன்றிப் போன இருகரங்களையும்
தன் கிரணங்களால்
ஒற்றியபடியிருந்தது
காயங்களின் வலி
தணிந்து கொண்டு வந்த
அதிகாலைப் பொழுதில்
ஒற்றைக் குயிலொன்றின் குரல்
அவளைத் துயிலெழுப்பியது

காலியாகிப்போன கலயங்களுக்குள்ளிருந்து
நிலவு காணாமற் போயிருந்தது
ஆகாயம் குளிர்ந்து கிடந்தது

வானிலிருந்தும் பூமியிலிருந்தும்
பெருக்கெடுத்துக் கலந்த நீர்
அவள் விழிகளிற் கசியலாயிற்று

2010.02.28







அந்தச் சூரியன்
மூழ்கிவிட்டது

கடல்தாண்டிப்போகவுமில்லை
அடவி வழியே பதுங்கிய படி
நீள்தூரம் கடக்கவுமில்லை

நீரில் மூழ்கியவாறு தீ கரையேறிய நாளில்
நிலத்தில் பதுங்கிக் கொண்டு புயல்
முற்றவெளிக்கு வந்த நாளில்
ஆகாயத்தின் அருகுகளினூடாகப் புறப்பட்ட இடியோசைகள்
தலைக்கு மேலாக மையம் கொண்ட நாளில்
சூரியன் உன்மத்தங்கொண்டு
அலையத் தொடங்கியது

சூரியன் உருவாக்கிய நகரங்கள்
அஞ்சிய படி சிதறியோடத்தொடங்கின
அது வளர்த்த பயிர் நிலங்கள்
கருகத் தொடங்கின
ஆகாயமெங்கும் தீப்பிடித்த பொழுதில்
சூரியனி்ன் பிரகாசம்
மெல்ல மெல்ல
வடியலாயிற்று

யாரும் சென்றடைய முடியாத ஏரியொன்றில்
கடைசியாக அது
மறைந்து கொண்டிருந்தது
நீர்ப்பரப்பில் உதிரத்தைக் கரைத்தபடி

சூரியன் செத்துப்போன நிலத்தை
ஊழியின் பெருமழை நனைத்தது
அது உருவாக்கிய பட்டினங்களில்
நிரந்தர இருள் படியலாயிற்று

2010.02.28
நன்றி: மறுபாதி (இதழ் -4) சித்திரை - ஆனி 2010




நொந்து போன நாட்களைத் தனது
சின்னஞ்சிறு தோள்களில்
சுமந்தலைந்த சிறுமி
காலுடைந்த ஆட்டுக்குட்டியைக்
கீழிறக்கி வைத்துவிட்டு
மண்தெருவில் சிந்திக் கிடக்கும்
நெல் மணிகளைக்
குடிசைக்குள்
காவிச் சென்றிட நினைக்கிறாள்

முன்பெனில்
வயல் வரப்பொன்றில் குந்தியிருந்து
அவளது பிஞ்சுக் குரலெட்டாத்
தொலைவு வரை திரிந்து
உதிரி நெற்கதிர் பொறுக்கி வரும்
அம்மாவுக்காகக் காத்திருப்பாள்.
அம்மா திரும்பி வரும் வேளை
ஒரு முயல் குட்டியை
ஒரு செம்மறியாட்டு மந்தையை
ஒரு அபூர்வப் பறவையை
விழிகளால் துரத்தியவாறு
மாபெரிய வானத்தில் முகில் கூட்டங்களிடையே
அலைந்து கொண்டிருப்பாள்
அல்லது
நாரைக் கூட்டங்களுக்குக்
கையசைத்து விடைகொடுத்தவாறு
அவை சென்று மறையும்
மலைத்தொடர்களின் மறுபுறத்தே
என்ன இருக்குமென்ற
புதிரொன்றால் அலைக்கழிவாள்


சிறுமியின் நினைவுகளிலிருந்து
மெதுவாக நழுவுகின்றன
அந்த நாட்டுப் புறப் பாடல்களும்
பெண்கள் கூடி அறுத்தெடுக்கும் கதிர்களை
பிணையல் மாடுகள் சுற்றிச் சுழன்று
சூடடித்துக் கொடுக்கும் இரவுகளும்


இன்று
வயல்வெளிதனில் இறக்கிவிடப்பட்ட
இயந்திரப் பூதம்
வைக்கோலைத் துகள்களாக்கி
வரிசையாய்ப் பரப்பிய பின்
விதைத்தோர் கைகளில்
நெல் மூடைகளைக்
கொடுத்துப் போன கணப்பொழுதில்
சிறுமியின் அம்மாவிடம்
ஒரு பானை நிரம்பிவழிந்தது
ஏமாற்றம்


பச்சை அலைகளெனப்
பறந்து வந்த கிளிக்கூட்டங்கள்
வான் பரப்பில்
தாளமுடியா ஏமாற்றத்தைத் தீட்டித்
தொலைதூரச் சோலைகளுக்கே
திரும்பலாயின.
பூதத்தின்
பல்வரிசைக்குள்
அரைபட்டுச் சிதைந்தது
நெற் குருவியொன்றின்
கடைசி அலறல்.

உறையொன்றிலிருந்து
சிந்திவிட்டுச் சென்ற
நெல்மணிகளைக் கண்டதும்
சர்க்கரைத் துண்டு கிடைத்த
எறும்பொன்றைப் போல
எப்பாடுபட்டேனும்
எடுத்துச் சென்றிட
மொய்த்துவிட்டாள் சிறுமி.
புது அரிசிச் சோற்றின்
ஆவிபறந்திடும் கனவு
அவளது சின்னப் பீங்கானிலும்.

அள்ளிடும் தருணமெலாம்
மண்ணையும்
குறுணிக்கற்களையும்
அவள் கரங்களில்
எஞ்சவைத்து விட்டு
நெல் மணிகளோடு
நிலத்தில் ஒழுகிக் கொண்டிருந்தது காலம்

வீதி வழியேபோன
முதிய பெண்ணின்
ஆலோசனைக்குக் கட்டுப்பட்டவளாக
குடிசைக்குள் ஓடிப்போய்
சிறிய கரங்களில் நம்பிக்கை அசைந்தாடிடச்
சிரட்டையும் பையுமாக
வந்தாள் சிறுமி


தப்பிக்கமுடியாத நெல்மணிகளெல்லாம்
அவளுடன் போகலாயின
எளிய குடிசை நோக்கி

அவள் பின்னே
நொண்டிய படி செல்கிறது
காலுடைந்த ஆட்டுக்குட்டி.

ஃபஹீமாஜஹான்
2010.03.31

(நன்றி:காலச்சுவடு இதழ் 126)




ஏதுமற்ற வெளியொன்றிலிருந்து
புறப்பட்ட ஒரு புயல்
அவனைச் சூழ வீசுகிறது

அதன் உக்கிரங்களுக்கு அஞ்சி
எல்லா வாசல்களையும்
மூடிக்கொள்கிறான்

செல்லமாய் வளர்த்த
ஆட்டுக்குட்டியொன்றை
எந்தப் பாதுகாப்புமற்ற
புல்வெளியொன்றில்
கைவிட்டு வந்துள்ளான்

நாளை
கைவிடப்பட்டவர்களின் துயரங்களோடு
அந்தப் புல்வெளியில்
மேய்ந்து கொண்டிருக்கக்கூடும்
தனித்துப் போய்
துடிதுடித்துச் செத்த
ஓர் எளிய ஆன்மா




சின்னஞ்சிறு செடியெனச்
சிற்றிலைகள் அசைந்தாடிக் கொண்டிருந்த
செல்லப் பெண்ணின் வாழ்வில்
பதுங்கிப் பதுங்கி உள்நுழைந்தாய்

அவளது பசுமையின் நிறமெடுத்து
அவளுக்குள் ஒன்றித்து
மோனத்தவமிருப்பதாய்
பாசாங்கு செய்தாய்
முழு உலகும் அவளேயென்று
தலையாட்டித் தலையாட்டி வசப்படுத்தினாய்

பின்வந்த நாட்களில்
எழுந்த சிறு சலசலப்பில்
அழகு காட்டி அசைந்தவாறு
உன் காலைச் சுற்றிவந்த
நச்சுக் கொடியொன்றினுள் நீ தாவினாய்
அந்தக் கொடியின் நிறமெடுத்து
மோகித்து முயங்கிக் கிடக்க
நீண்ட பொழுது தேவைப்படவில்லை உனக்கு
உண்டு சுகித்துக் கிடந்து
ஆதியில் தொடங்கிய அதே அரிப்பெடுக்கவே
இன்னுமொரு பெரு மரத்திற்குத் தாவினாய்


இன்று
வெடிப்புக் கண்ட
பெருவிருட்சத்தின் பட்டைகளையே
கோட்டை அரண்களென எண்ணியவாறு
உதிரத் தயாராயிருக்கும்
மரப்பட்டையின் நிறமெடுத்துக்
குந்திக் கிடக்கிறாய்
அற்பப் பதர் உனக்குத்தான்
எத்தகு பவிசுகள்


அழுகிய கனிகள் சொரியும்
பட்சிகளெதும் நாடாத அம் மரத்தை
வட்டமிட்டுப் பறக்கும்
கழுகொன்றின் கூர்ந்த விழிகளில்
உனது தலைவிதியை நான் படிக்கிறேன்
மிகச் சரியான தருணத்தில்
பதறித் துடி துடித்திடக்
கால் நகங்களில் காவிப் பறக்கும்
உனக்கான இறைவனின் தீர்ப்பு


2009.12.07
(நன்றி:கல்குதிரை)




சகோதரனே! நானறியாப் புலன்களையெல்லாம்
உணர்வுகளில் பதித்துச் செல்பவனே
எந்த மனிதன் உனது கீதங்களைத் திருடிச் சென்றான்?
கை கட்டி வாய் பொத்திக் கண்மூடி நின்று சுழலென
எந்த மனிதன் உனை நிறுத்திப் போனான்?

கட்டாயமானதொரு தருணத்தில்
காலம் உனைப் பாலைநிலத்திலிருந்து பெயர்த்துவந்து
போர் ஓய்வுகொண்ட
தாய்நிலந்தன்னில் விட்டுப் போயிற்று
அவர்கள் குழி தோண்டிப் புதைக்கும்
உண்மைகளையெல்லாம்
எடுத்தோதும் பணியொன்றைத்
தெய்வம் உன்னிடம் தந்தகன்றது
எமது எழுதுகோல்களையெல்லாம் உன் வசம் விட்டுத்
திசைகள் எட்டிலும் காத்திருக்கலானோம்

எழுதும் பெயர் எதுவாயினும்
உனதெழுத்து அதுவே என்பதை
மனதின் நாவுகள் அதிர்ந்ததிர்ந்து உள்ளுணர்வில் பறையும்
செம்பிறைக் கொடிகள் என் மனவெளியெங்கும்
படபடத்துப் படபடத்துப் பறந்தோயும்
பிறப்பிலும் இறப்பிலும் வரும் பெருநாட்களிலும்
வானில் பிறையெழுந்து எமைத் திசைப்படுத்தும்
செம்பிறை போல் நீயும் சகீ
எமை வழிகூட்டிச் செல்வாய் என

உலமாக்களும் பெரியோரும்
பல்லாண்டுத் துயில் விட்டு எழுந்திடவே இல்லை
பள்ளிவாயில்களில் கேட்கும் பிரசங்கங்களில்
சிலந்திவலைகள் தொங்கிக் கிடக்கின்றன
நல்லதோ கெட்டதோ எனத் தெரியாத கோபங்களோடு
மரணத்தின் தலைவாயில் வரைக்
கூட்டி வந்து விடப்பட்டவர் நாம்

எனதபிமானத்தை வென்றவனே!
நம் தேச எழுச்சியில் உன் பாடல் கேட்டிடவும்
இளைஞர் அணியோடு உன் பாதம் பயணித்திடவுமாய்
நண்பர்களோடு நானும் அவாவி நிற்கிறேன்

நன்றி: எங்கள் தேசம்




தூறலாய் சாரலாய்
பெரும் துளிகளாய் மாறித்
தன்னை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருந்தது
அந்தி மழை

தாளம் தப்பாத பாடல்களை
அதனதன் குரல்களில் இசைத்தபடி
களிகூர்ந்து பறக்கத் தொடங்கியிருந்தன
வானில் வந்து கூடிய மழைப்பறவைகள்

தனது கவிதைப் பொருள்களெலாம்
சிறகடித்து நனைவதை
இரசித்தவாறு
மெய்மறந்து கிடக்கிறாள் அவள்

அகப்பட்ட பசிய மரங்களையெலாம்
பூவோடும் பிஞ்சோடும் எரித்தவாறு
வழமையான தனது வழியொன்றால்
தெறித்து வந்ததொரு மின்னற் தீ
அவளைச் சூழ வீழ்ந்தோய்ந்ததும்
அக்கணத்தில் தான்

கவிதைகளை வாரிச் சுருட்டிக்கொண்டு
கண்ணெட்டாத் தொலைவுக்கப்பால்
போய் மறைந்தன மழைப் பறவைகள்

செல்லப் பறவைகள்
விடைபெற்ற இருண்ட வானத்தை
வலுக்கத்தொடங்கிய மழையில் கை விட்டுவிட்டு
அவளும் காணாமற் போயிருந்தாள்

ஃபஹீமாஜஹான்
2009.12.07

நன்றி: கல் குதிரை

Powered by Blogger.

தொகுப்புகள்

தொகுப்புகள்


About Me

My Photo
ஃபஹீமாஜஹான்
View my complete profile

Search

About