ஆழங்காண முடியாக் கிணறொன்றிலிருந்து
அவள்
நீர் மொண்டுவரத் தொடங்கியிருந்தாள்
இருகரங்களிலும் சுமந்து செல்லும்
நீர்க் கலயங்களில் மோதி நனைந்து
தன்னைச் சுதாகரித்துக் கொண்டு
அவளைக் கடந்தது
அந்திப் பொழுதின்
வயல் காற்று
அவளைப் போலவே தேய்ந்து
அவளது ஆன்மாவைப் போல் ஒளிர்விடும்
பாதி நிலவு
வீட்டுக்கும் கிணற்றுக்கும்
அலைந்து கொண்டேயிருந்தது
அவள் முன்னும் பின்னும்
ஆறுதல் மொழிகளையிழந்த அது
கிணற்றின் இருளுக்குள் வீழ்ந்து
ஒளி பாய்ச்சியது
அந்தக் கிணற்றைச் சூழவும்
தேங்கி நின்ற நீரினுள்
கால் நனைத்தவாறு
அவளுக்குத் துணையாகக் காவல் இருந்தது
பின்
அவள் சுமந்து செல்லும்
தண்ணீர்க் குடங்களுக்குள் தத்தளித்தபடி சென்று
என்றுமே நிரப்ப முடியாத பானையொன்றினுள்
வீழ்ந்து துடித்தது
ஆதிக் களைப்புடன்
அவள் துயிலில் வீழ்ந்த நள்ளிரவில்
இரத்தம் கன்றிப் போன இருகரங்களையும்
தன் கிரணங்களால்
ஒற்றியபடியிருந்தது
காயங்களின் வலி
தணிந்து கொண்டு வந்த
அதிகாலைப் பொழுதில்
ஒற்றைக் குயிலொன்றின் குரல்
அவளைத் துயிலெழுப்பியது
காலியாகிப்போன கலயங்களுக்குள்ளிருந்து
நிலவு காணாமற் போயிருந்தது
ஆகாயம் குளிர்ந்து கிடந்தது
வானிலிருந்தும் பூமியிலிருந்தும்
பெருக்கெடுத்துக் கலந்த நீர்
அவள் விழிகளிற் கசியலாயிற்று
2010.02.28
6 comments:
கவிதை நல்லாயிருந்தது...
http://riyasdreams.blogspot.com/2010/08/blog-post_31.html
அழகான கவிதை
உங்கள் கவிதைகளில் வரிகள் சுமக்கும் சொற்களில் கவிதையின் மேண்மையும்,மென்மையும்
மேலோங்கி நிற்ப்பதை உணர முடிகிறது .
எல்லாரையும் போல் என்னுடைய வேண்டுகோளும் கூட
நிறைய எழுதுங்கள் .....
அ .செய்யது அலி
வாருங்கள் Riyas,
உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது.
வாருங்கள் அ.செய்யது அலி,
"எல்லாரையும் போல் என்னுடைய வேண்டுகோளும் கூட
நிறைய எழுதுங்கள் ....."
அது எப்படி முடியும் ?
கவிதை அதுவாகவே வரவேண்டாமா :)
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
காலியாகிப்போன கலயங்களுக்குள்ளிருந்து
நிலவு காணாமற் போயிருந்தது-
அற்புதமான கவிதை.
வாருங்கள் ஒ.நூருல் அமீன்,
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Post a Comment