சூரியன் தனது வெக்கை மிகு கதிர்களால்
இலைகளை வீழ்த்திக் கொண்டிருந்த
மரமொன்றில் வந்தமர்ந்தது
பிரளயத்திலிருந்து தப்பித்து வந்த பறவை


கனிகளோ வித்துக்களோ இன்றி
ஒரு சத்திரம் போல
நின்றிருந்த மரத்திடம்
சின்னஞ்சிறு பறவைக்குக் கொடுத்திட
எதுவுமே இருக்கவில்லை


குருவி குந்தியிருந்த மரத்தின் கீழே
வீழ்ந்து கிடந்தது
இற்றுப் போன ஒரு நிழல்
தொலை தூர ஆற்றுப் படுகையில்
மறைந்து கொண்டிருந்தது கடைசிச் சூரியன்

அசைந்து வரும் கரிய யானைகளைப்
பார்த்தவாறு
கைவிடப்பட்ட தனது கூட்டை எண்ணிக்
கண்ணீர் உகுத்திடலாயிற்று


அடைகாத்த முட்டைகளைப்
பெருங்காற்றில் போட்டுடைத்த கரங்களில்
எல்லா அதிகாரங்களும் இருந்தது
“ஏன் செய்தாய்” எனக் கேட்க முடியாத
அடக்கு முறையில் காலம் சிக்கியிருந்தது


குருவியை உறங்க வைத்திட முடியாமல்
கிளைகளினூடே
பதுங்கிப் பதுங்கி அசைந்து கொண்டிருந்தது
இருண்ட இரவு


உள்ளேயொரு சூனியத்தை வைத்து
உயிர் வேலியொன்றைச் சுமந்தவாறு
முடிவற்ற இருளொன்றினூடாக
அந்தச் சிறு பறவை
பறந்து போயிற்று