பச்சை மரங்களிடையே
ஒளிந்தும் தெரிந்தும் –தன்
மொழியறிந்த விழியெறிந்து
அக்காட்டின் பரப்பெங்கும்
தனக்கென்றதோர் வழியமைத்துத்
தன்பாட்டில் திரிந்ததம் மான்குட்டி

விட்டு நகரக்கூடிய கருணையெதனையும்
காவி வந்தவனல்ல,
தீர்க்கமான முடிவோடு
வனம் புகுந்த வேட்டைக்காரன்
அதனைத் துரத்தலானான்
கொடும் பசியை
சிறு குட்டி தீர்க்காதெனத் தெரிந்தும்

அபயம் தேடும் வழிகளினூடே
கணத்துக்கொரு திசையில்
ஓடிக் களைத்த மான்குட்டி
சற்றே ஓய்ந்து ஓடத் தண்ணீரருந்தியது,
மரணத்தின் காலடித்தடங்கள் படிந்த
தண்ணீர் அருகே

தரித்து நின்ற அதனையே
குறிபார்த்தான் வேட்டைக்காரன்
அன்பை உதாசீனம் செய்த
கூரம்பு கொண்டு

தப்பித்திட முடியா விதியொன்றின்
கொடும் வலியைத்
தன் உடலில் சகித்தவாறு
கண்மூடிக் கொண்டது மான்குட்டி
எந்த ஓசையுமின்றி
எதிர்ப்புமின்றி

வேட்டைக்காரனின் பாதத்தடியில்
மாபெரும் காடு தன் பிணத்தைக் கிடத்தி
மெளனமாகப் பார்த்திருந்தது

**(யாத்ரா இதழுக்காக எழுதப்பட்டது)