பச்சை மரங்களிடையே
ஒளிந்தும் தெரிந்தும் –தன்
மொழியறிந்த விழியெறிந்து
அக்காட்டின் பரப்பெங்கும்
தனக்கென்றதோர் வழியமைத்துத்
தன்பாட்டில் திரிந்ததம் மான்குட்டி
விட்டு நகரக்கூடிய கருணையெதனையும்
காவி வந்தவனல்ல,
தீர்க்கமான முடிவோடு
வனம் புகுந்த வேட்டைக்காரன்
அதனைத் துரத்தலானான்
கொடும் பசியை
சிறு குட்டி தீர்க்காதெனத் தெரிந்தும்
அபயம் தேடும் வழிகளினூடே
கணத்துக்கொரு திசையில்
ஓடிக் களைத்த மான்குட்டி
சற்றே ஓய்ந்து ஓடத் தண்ணீரருந்தியது,
மரணத்தின் காலடித்தடங்கள் படிந்த
தண்ணீர் அருகே
தரித்து நின்ற அதனையே
குறிபார்த்தான் வேட்டைக்காரன்
அன்பை உதாசீனம் செய்த
கூரம்பு கொண்டு
தப்பித்திட முடியா விதியொன்றின்
கொடும் வலியைத்
தன் உடலில் சகித்தவாறு
கண்மூடிக் கொண்டது மான்குட்டி
எந்த ஓசையுமின்றி
எதிர்ப்புமின்றி
வேட்டைக்காரனின் பாதத்தடியில்
மாபெரும் காடு தன் பிணத்தைக் கிடத்தி
மெளனமாகப் பார்த்திருந்தது
**(யாத்ரா இதழுக்காக எழுதப்பட்டது)
10 comments:
வாழ்த்துக்கள் சகோதரி..மிகவும் அழகான கவிதை.. வாசிக்கும்போது அச் சித்திரம் மனதிலும் வரையப்படுகிறது. அடுத்தது என்ன கவிதை? :-)
வாருங்கள் ரிஷான்,
"அடுத்தது என்ன கவிதை? :-)"
அதை இன்னும் சில மாதங்களின் பின் தீர்மானிக்கலாம் :-)
வருகைக்கு நன்றி.
அருமை
வாருங்கள் நஜி,
உங்கள் வருகை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.
நன்றி.
காட்சி விவரணை போல் விரியும் கவிதை ”வேட்டைக்காரனின் பாதத்தடியில்
மாபெரும் காடு தன் பிணத்தைக் கிடத்தி
மெளனமாகப் பார்த்திருந்தது” என முடியும்போது முழுமையாய் கவிதையை உணர்ந்தேன். நன்றி சகோதரி
வாருங்கள் பூங்குன்ற பாண்டியன்,
முதன் முதலாக வந்திருக்கிறீர்கள். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி அவர்களே!
உங்களுடைய கவிதைகள் ஆழமானதாகவும்
பாலை நிலத்தின் ஊற்றாகவும் இருக்கிறது.
மீள்பார்வை , வைகரை போன்றவற்றில் உங்களுடைய கவிதைகளை
பார்த்திருக்கின்றேன். அண்மையில் தெரிந்த ககோதரரிடம்
உங்களைப் பற்றி வினவிய போது இந்தத் தளத்தைப் பற்றி தெரிந்து கொண்டேன்.
நான் எதிர் பார்த்ததை விட சிறந்தவையே
உங்களுடைய கவிதைகள். அல்ஹம்துலில்லாஹ். இந்தப் பயணம் தொடர்வதற்கு
என்னுடைய நெஞ்சார்ந்த பிரார்த்தனைகளுடன்.
உங்கள் கவிதையின் வாசகனாய்.
வாருங்கள் Ramzeen Nizam,
"மீள்பார்வை , வைகரை போன்றவற்றில் உங்களுடைய கவிதைகளை
பார்த்திருக்கின்றேன்" அவற்றில் எவ்வெக்கவிதைகள் வெளி வந்தன என்பது குறித்த விபரங்கள் எனக்குத் தெரியாது.
"இந்தப் பயணம் தொடர்வதற்கு
என்னுடைய நெஞ்சார்ந்த பிரார்த்தனைகளுடன்"
உங்கள் கருத்துக்கும் பிரார்த்தனைகளுக்கும் வருகைக்கும் எனது நன்றிகள் சகோதரனே.
alakaana varikal vaalththukkal
execellent thinking
Post a Comment