நீ திணித்து விட்டுப் போன
துயரத்தின் குழந்தையை
தாங்க முடியாத ஏமாற்றத்தின் பளுவுடன்
தோள் மீது உறங்க வைத்துள்ளேன்
அது துயில் கலைந்து வீரிட்டு அழாதிருந்திட
எப்பொழுதும்
ஆறுதல் மொழிகளற்ற
ஆழமான மெளனத்தை
எனைச் சுற்றி எழுப்பியுள்ளேன்
நான் அழைக்கப் படும்
அரங்குகளில்
எல்லா வரவேற்புக்களோடும்
எனக்கான இருக்கைதனில் அமர்த்தப்படுகிறேன்
பக்குவமாகக்
குழந்தையைத் தோள்மீது சாய்த்தவாறு
தயாரித்து வைத்திருக்கும் வாசகங்களைத்
தணிந்த குரலில் ஒப்புவித்துவிட்டு
ஊர்மெச்சிடும் மகளாகப்
படியிறங்கிப் போகிறேன்
உனைக் கடந்து செல்லும் கணத்தில்
எனது தோளிலிருந்து நழுவும் குழந்தை
உன் மீது
ஒரு கொடி போலப்
படர்ந்திடச் சாயும் வேளை மீண்டும்
அடுத்த தோள்மீது தூங்க வைக்கிறேன்
திரும்பித் திரும்பி
உனையே பார்த்தவாறு தேம்பும் குழந்தையை
எனது கை மாற்றி ஏந்திக் கொள்ளும்
எல்லா உரிமைகளும் உனக்கிருந்தும்
உன் கரங்கள் ஒரு போதும் நீளவும் இல்லை
வேறு எவரிடமும் கொடுத்திட
நான் விரும்பவும் இல்லை
(நன்றி:வடக்குவாசல்)