இனிய குரலெடுத்துப் பாடும் உன் பாடலுடன்
வசந்த காலமொன்று என் அடவிகளில் வந்து விழும்
துயரங்கள் நிரம்பித் தாக்கும் வேளைகளில்
வேதனையில் உன் சிரிப்பொலி எழும்போது
அகால இடி முழக்கத்தில் என் வானம் அதிரும்
ஏதோ ஒரு ஆறுதலில் நீ
என் கிளைகளில் தாவிக் குரலெழுப்பும் போது
கார்காலமொன்று எனது வேர்களைச் சூழும்
மரணத்தைப் பற்றியும்
நிலையற்ற வாழ்வின் நியதிகள் பற்றியும்
மகானைப் போல நீ போதிக்கும் தருணங்களில்
கடும் கோடை காலமொன்று என்
கால்களைச் சுற்றி வந்து பெருமூச்செறியும்
ஆனாலும் அன்பே...
இலையுதிர் காலத்தில் விக்கித்து நின்றபோது
ஓராயிரம் இலைகளும் உதிர்ந்து போகையில்
என்னிடம் புன்னகைக்கக் கெஞ்சிய
உன் கீச்சிடலுடன்
பனித்துளிகள் சொரிந்திடலாயின
வாழ்வளித்த நிழலை நின் புலன்களில் தேக்கி
இனிய குஞ்சுடன் தொலை தூரம் பறந்து போகையில்
எனது உயிர்க் குரல் ஓய்ந்து போயிற்று
நீ வாழ்ந்த கூட்டைக் குரங்குகள் பிய்த்தெறிந்தன
நான் மரமென நின்றிருக்கிறேன்:
துயரங்களையும் எதிர்ப்பையும் கூறிட
எனக்கொரு மொழியின்றி...
அவளை உடனடியாக வந்து பார்த்திடுமாறு செய்தி கிடைத்தது:
பதற்றம் நிரம்பியவராய் மக்கள் ஆங்காங்கே குழுமி நின்று
அவள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தியைக்
கதைத்துக் கொண்டிருந்தனர்!
மனிதர்கள் அழுக்கையும் நாற்றத்தையும் மாத்திரமே
விட்டுச் செல்லும் நகரமொன்றில் அந்த வைத்தியசாலையிருந்தது!
தோளுரசிச் செல்லும் வாகனங்களும் நச்சுப் புகை நாற்றமும்
சனக் கூட்டமும் நெரியும் சாலைகளைக் கடந்து செல்லும்
பயணமே ஒரு போர்க்களமாய் விரிந்தது!
விரைவாகச் சென்றடையக் கூடிய
எல்லாச் சந்துகள் கடந்தும் அவற்றின் அசுப காட்சிகள் கடந்தும்
வைத்தியசாலைக்குள் நுழைந்தேன்:
நுழைவாயில் வரை உள்ளிருக்கும் வீச்சம் பரவி
ஆன்மாவைப் பிராண்டியது:
காற்றுமற்ற இடங்களில்
ஈரலிப்பையும் அழுக்கையும் நாற்றத்தையும்
நரக வதைகளாகச் சகித்திருந்தனர் நோயாளிகள்!
சகித்திட முடியாத இடமொன்றை
அவளுக்குக் கொடுத்திருக்கக் கூடாதென்ற
நெஞ்சுருகும் பிரார்த்தனையைக் கேட்டுக் கேட்டு
இருண்ட விறாந்தை வளைவுகள் தாண்டித் தேடியழைந்தேன்.
சற்றே தூய்மையான அறையொன்றைக் கடந்த வேளை,
கறுப்பு அங்கியணிந்திருந்த பெண்ணின் அசைவு தெரிந்தது:
அடையாளம் கண்டு கொண்டோம்!
உடலெங்கும் இணைக்கப் பட்டிருந்த குழாய்களுடன்
எழ முயன்றவளைத் தடுத்த போதும்
அனைத்தும் கழன்று விழ
பீறிட்டழும் விம்மலுடன் எழுந்து எனைத் தழுவினாள்!
-உனைச் சிதைத்தவர் யார்?ஆமினாவும் ஆயிஷாவும் எங்கே?-
எனது கேள்விகளுக்கு
ஒவ்வொரு வார்த்தையாக உயிர்கூட்டி உச்சரித்தாள்:
-துப்பாக்கிகளை நீட்டியவாறு குதித்திறங்கிய அவர்களது
வாகனத்திற் சின்னமிருந்தது.
ஆமினாவும் ஆயிஷாவும் துடிதுடித்து வீழ்ந்தனர்.
எனைச் சித்திரவதைப் படுத்திடவென்றே
அனேக ரவைகளைப் பாய்ச்சினர் உடலில்:
அவர்களின் கேள்விகளுக்கு என்னிடம் பதிலில்லை-
எனைச் சல்லடையாக்கிச் சத்தியத்தின் குரலைச்
சாத்தான்களால் பறித்தெடுக்க முடியாது-
சொற்களுக்கு உயிர் கூட்டி முடித்தாள்.
எனைப் பற்றியிருந்த பிடி தளர்ந்தது:
அவள் வசமிருந்த இறுதி வாக்குமூலமும் அழிந்தது!
அந்தக் கனவையும் அதிகாலைத் துயிலையும் உதறி எழுந்தேன்!
மக்கள் சூழ்ந்து நின்றிட அவளை மருத்துவ மனைக்குத்
தூக்கிச் செல்வதை அல் ஜஸீரா காட்டியது!
இறுதி வாக்குமூலத்தை அறிந்திருந்த உலகம்
கொலைகாரர்கள் பெற்றுக் கொண்ட பாராட்டுதல்களையும் பார்த்திருந்தது:
ஏமாற்றப் பட்டோம் அம்மூன்று ஆன்மாக்களும் நானும்!
அவரவர் வேலைகளில் வீடு மூழ்கியிருந்த
மழைக்கால இரவொன்றில்
நிசப்தத்தையும் இருளையம்
உள் நிறுத்திப் போயிற்று மின்சாரம்!
வழமை போலவே அம்மாவின் அருட்கரங்களில்
ஒளி காழும் உத்தியாக மின் சூள் அகப்பட்டிருந்தது!
இரவுச் சாப்பாட்டின் ஒரு கவளம்
மீதியாயிருந்ததென் பீங்கானில்:
கையில் தேடியெடுத்திருந்த மெழுகுவர்த்திக்குத்
தீச்சுடரொன்று தேவைப் பட்டிருந்தது இளையவளக்கு:
எழுதிக் கொண்டிருந்த மூத்தவளுக்கோ
இறுதிச் சொல்லில் ஓரெழுத்து எஞ்சியிருந்ததப்போது:
அவரவர் தேவை கூறி அம்மாவைக்
கூப்பிட்ட கூச்சலில்
இருண்ட இல்லம் ஒலியலைகளால் நிரம்பிற்று!
முதலில் எனது பீங்கானில் விழுந்து தெறித்த
ஓளிக்கற்றைகளின் துணையுடன்
இளையவளின் மெழுகுதிரி சுடர்விடடெரிந்தது:
மூத்தவளின் கடைசி எழுத்துக்கும் அம்மா
ஒளி காவி நடந்த பின்னர்
சட்டென நுழைந்தது வீட்டினுள் மின்சாரம்!
மறுபடியும் இருளினுள் வீடமிழ்ந்த பொழுது
சமையலறையினுள் சிக்கியிருந்த அம்மாவுக்கு
ஒளிச் சுடரொன்றினை ஏந்தி யாருமே நடக்க வில்லை:
எவரின் உதவியும் இன்றி
இருளினுள்ளேயிருந்து
எல்லோருக்குமான உணவைத் தயாரித்தாள் எனத
எல்லைப் படுத்தாத அன்புடன்
இரு திசைவழி நடந்தோம்
உன் மனதிலும் என் மனதிலும்
அன்பின் நிழல்கள் காவி...
தங்கைக்கேற்ற அண்ணனாயிருந்து
பிரிந்து செல்லும் வரை என்
பிறவிக் கடன் தீர்த்தாய்!
என் மனதிலிருந்து துயர அலைகள் எழுந்து
ஆர்ப்பரித்துப் பொங்கும் வேளைத்
தூர நிலம் கடந்து
உனக்குள்ளும் அலைகள் எழுமோ?
மனதை விட்டு
உன் நினைவு தொலைந்து போயிருக்கும்
அவ்விருண்ட பொழுதுகளில்
தொலைபுலத்துக்கப்பாலிருந்து வரும்
உனதழைப்புக்கு நன்றி.
என் துயரின் காரணங்களைத்
தேடியறியத் துடித்ததில்லை நீ என்றும்:
புன்னகை கலந்த உனதுரையாடல்
மனதின் அலைகளை ஓய வைக்கும்.
நான் ஏற்ற தெய்வ தீர்ப்புகளால் அதிர்ந்தாயெனினும்
எந்த ஆறதலையோ சமாதானங்களையோ
நீ இருந்த வரை எனக்குச் சொன்னதேயில்லை:
ஆழ்ந்து ஊடுறுவும் உன் பார்வை தரும் அமைதியை விட
வார்த்தைகளின் ஒத்தடம் எனக்குத் தேவைப் படவுமில்லை!
நமது பிரிவெழுதியிருந்த காலத்தைப் பின்னகர்த்தப்
பஞ்சாங்கமோ பரிதவிப்புக்களோ உதவிடவில்லை:
எல்லைப் படுத்தாத அன்புடன்
இரு திசை வழி நடந்தோம்:
எமதிருமனங்களிலும் அன்பின் நிழல்கள் காவி !
வீடென்ற சிறைக்குள் சிக்குண்டவள்
மீளவும் மீளவம் நரகத்துழல்கிறேனடா!
இங்கு தினமும் நான் காணும்
பல்லாயிரம் மனிதரிடையேயிருந்து
எப்போது நீ தோன்றி மீண்டும் புன்னகைப்பாய்?
என்ன சொல்கிறாய்?
எமது முற்றவெளி மீது
யுத்தத்தின் கரு நிழல்கள் நெளிந்து
வரத் தொடங்கிய வேளை
எமது வாழ்வின் துயர் மிகு அத்தியாயம் எழுதப் படலாயிற்று!
திடீரென ஊரின் எல்லை கடந்து-நீ
தொலை தூரமேகியதன் பின் வந்த நாட்களில்
இருளடர்ந்த இரவுகள் யாவிலும்
எமது வாழிடமெங்கும் உனைத்தேடி
ஏமாந்து திரும்பினார்கள்!
அதன் பின் நிகழ்ந்த பிரளயப் பொழுதில்
எங்கள் குடிமனைகளுக்கு மேலாகப் பறந்த
இயந்திரப் பிசாசுகள்
அதிரும் ஓசையுடன் அச்சத்தைப் பொழிந்தன.
மரக்கிளைகள் சுழன்று அசைந்ததில்
சிதறுண்டு பறந்த பறவைக் கூட்டங்களோடு
எமதினிய இளைஞர்களும் காணாமற் போயினர்.
துன்பம் பல சுமந்து
முன்னோர்கள் தேடி வைத்தவையாவும்
எம்மிடமிருந்து பறிக்கப் பட்டு நாசமாக்கப் பட்டன.
ஆனந்த அலை பாய்ந்த இல்லங்களுக்குள்ளிருந்து
எமது பெண்களின்
அவலக் குரல்கள் எழுந்தன.
எங்கள் குழந்தைகளைக் காத்திட
எந்தத் தேவதைகளும் வரவேயில்லை.
ஏங்கோ தூரத்தில் துப்பாக்கிகள் வெடிக்கின்றன.
ஈனக்குரலெடுத்துக் கதறும் ஓசை காற்றிலேறி வருகிறது.
தினந்தோரும் சாவு எமது வாசல் வந்து
திரும்பிய தடயங்களைக் காண்கிறோம்
எப்போதும் கதவு தட்டப் படலாம்!
நீ தேடியழைந்த எதுவுமுனக்கு ஈடேற்றம் தரவில்லை.
தோற்றுப் போன அரசியலின் பின்னர்
அமைதியைத் தேடித் தூரத்தேசம் ஒன்றில்
அடைக்கலம் புகுந்தாய்
மனச்சுமைகள் அனைத்தையும் மௌனமாக
அஞ்ஞாத வாசத்திற் கரைத்தாய்
ஐரோப்பாவில் எங்கோ அடர்ந்த மூங்கிற் காட்டினிடையே
இராணுவ வீரர்களுக்கு மத்தியில் இருந்து
தொழுகைத் தழும்பேறிய நெற்றியுடன்
நீ எடுத்தனுப்பியிருந்த நிழற்படம்
சொல்லாத சேதிகள் பலவற்றை எனக்குச் சொன்னது
அதில் ஆனந்த மின்னல் பளிச்சிடும் உன்முகம்
எத்துணை அழகாக உள்ளது.
அன்பானவனே!
எந்த விடிவுமற்ற தேசத்தின் தலைவிதியை நொந்த வண்ணம்
இங்கு எனது இருப்புப் பற்றியும் நம்பிக்கைகள் பற்றியும்
ஓயாது விமர்சிக்கின்றாய்!
தினமும் வாழ்வு சூனியத்தில் விடிந்திட…
உயிர்கள் எந்தப் பெறுமதியுமற்று அழிந்திட
யாருக்கும் யாருமற்ற சாபம் பிடித்த வாழ்வைச்
சபித்தவளாக நான் வாழ்ந்த போதும்
எனது தேசம் எனக்கு வேண்டும்!
நீ என்ன சொல்கிறாய்?
நிம்மதி குடியிருந்த கிராமத்தின் மீது
வந்து விழுந்தன கோர நகமுடைய கரங்கள்;;:
எங்களைக் குதறிடக் குறி பார்த்தவாறே.....
எமது கல்லூரி வளவினுள்ளே
வன விலங்குகள் ஒளிந்திருக்கவில்லை:
எமது நூலகத்தின் புத்தக அடுக்குகளை
ஓநாய்களும் கழுகுகளும் தம் வாழிடங்களாய்க் கொண்டதில்லை:
நிலாக்கால இரவுகளில் உப்புக் காற்று மேனி தழுவிட
விவாதங்கள் அரங்கேறிடும் கடற்கரை மணற்றிடலில்
பாம்புப் புற்றுகளேதும் இருக்கவில்லை:
மாலைகளில் ஆரவாரம் விண்ணளாவிட எமதிளைஞர்
உதைபந்தையன்றி வேறெதையும் உதைத்ததுமில்லை:
பக்திப் பரவசத்தில் ஊர் திளைக்கும் நாட்களில்
எமதன்னையர்
நிவேதனத்தையன்றி வேறெதனையும்
இருகரமேந்தி ஆலயமேகவுமில்லை!
இங்கெல்லாம்
புரியாத மொழி பேசியவாறு துப்பாக்கி மனிதர்கள்
ஊடுறுவத் தொடங்கிய வேளை விக்கித்துப் போனோம்:
வார்த்தைகள் மறந்தோம்.
எமது கல்லூரி,நூலகம்,கடற்கரை,
விளையாட்டுத்திடல்,ஆலயமெங்கிலும்
அச்சம் விதைக்கப் பட்டு ஆனந்தம் பிடுங்கப் பட்டதை
விழித்துவாரங்களினூடே மௌனமாய்ப் பார்த்திருந்தோம்!
அறிமுகமற்ற பேய் பிசாசுகளையெல்லாம்
அழைத்துக் கொண்டு இரவுகள் வந்தடைந்தன.
எமது வானவெளியை அவசரப்பட்டு அந்தகாரம் ஆக்கிரமித்தது.
அடர்ந்து கிளைவிரித்துக் காற்றைத் துழாவிய படி
எம்மீது பூச்சொறிந்த வேம்பின்
கிளைகள் முறிந்து தொங்கிட அதனிடையே
அட்டுப் பிடித்த கவச வாகனங்கள்
யாரையோ எதிர் கொள்ளக் காத்திருந்தன.
எமதண்ணன்மார் அடிக்கடி காணாமல் போயினர்:
எமது பெண்களில் வாழ்வில்கிரகணம் பிடித்திட
எதிர்காலப் பலாபலன்கள் யாவும் சூனியத்தில்கரைந்தன.
தற்போதெல்லாம் குழந்தைகள் இருளை வெறுத்துவிட்டு
சூரியனைப் பற்றியே அதிகம் கதைக்கிறார்கள்:
அவர் தம் பாடக் கொப்பிகளில் துப்பாக்கிகளை வரைகிறார்கள்:
பூக்களும் பொம்மைகளும் பட்டாம் பூச்சிகளும்
அவர்களைவிட்டும் தூரமாய்ப் போயின:
எங்கள் தேசத்தின் இனிய கதைகளைப் பற்றி
-பாட்டிமார் கதைக்கிறார்கள்:
அந்த வரலாறு இனி எமது ஆனந்தங்களை மீட்டெடுக்கட்டும்!
உனது தேவதைக் கனவுகளில்
அவளுக்குக் கிரீடங்கள் வேண்டாம்:
உனது இதயக் கோவிலில்
அவளுக்குப் பூஜைப் பீடம்வேண்டாம்:
உனது ஆபாசத் தளங்களில்
அவளது நிழலைக் கூட
நிறுத்தி வைக்க வேண்டாம்:
வாழ்க்கைப் பாதையில்
அவளை நிந்தனை செய்திட
உனது கரங்கள் நீளவே வேண்டாம்!
அவளது விழிகளில் உனதுலகத்தின்
சூரிய சந்திரர்கள் இல்லை :
அவளது நடையில்
தென்றல் தவழ்ந்து வருவதில்லை:
அவளது சொற்களில்
சங்கீதம் எழுவதும் இல்லை:
அவள் பூவாகவோ தளிராகவோ
இல்லவே இல்லை!
காலங்காலமாக நீ வகுத்த
விதிமுறைகளின் வார்ப்பாக
அவள் இருக்க வேண்டுமென்றே
இப்போதும் எதிர்பார்க்கிறாய்
உனது வாழ்வை வசீகரமாக்கிக் கொள்ள
விலங்குகளுக்குள் அவளை வசப்படுத்தினாய்:
நான்கு குணங்களுக்குள் அவள்
வலம் வர வேண்டுமென வேலிகள் போட்டாய்:
அந்த வேலிகளுக்கு அப்பாலுள்ள
எல்லையற்ற உலகை
உனக்காக எடுத்துக் கொண்டாய்!
எல்லா இடங்களிலும்
அவளது கழுத்தை நெரித்திடவே
நெருங்கி வருகிறது உனது ஆதிக்கம்!
அவள் அவளாக வாழ வேண்டும்
வழி விடு!
ஆண்களை மயக்கும்மாய வித்தைகளை
நீ அறிந்திருக்கவில்லை:
ஓர விழிப் பார்வைகளோ...
தலை குனியும் தந்திரங்களோ... உன்னிடமிருக்கவில்லை!
தெளிவும் தீட்சணியமும் உன் பார்வையிலிருந்தது:
உறுதியும் தைரியமும் உன் நடையிலிருந்தது:
அலங்காரமும் ஒப்பனையும் உன்னிடமில்லாதிருந்தது:
எளிமையும் பரிசுத்தமும் நிரம்பியதாய் உன் வாழ்க்கையிருந்தது!
இளம் பெண்ணாக அப்பொழுது
வயல் வெளிகளில் மந்தைகளோட்டீச் செல்வாய்:
அடர்ந்த காடுகளிலும்...
வெள்ளம் வழிந்தோடிய ஆற்றங்கரைகளிலும்...
விறகு வெட்டித் தலைமேல் சுமந்து திரும்புவாய்!
அப்போதந்தக் காடுகளில் வாழ்ந்த பேய்,பிசாசுகள்
தூர இருந்து கனைத்துப் பார்த்துப் பின்
மறைந்து போவதாய் கதைகள் சொல்வாய்!
வீட்டிலும் வெளியிலும் உன் குரலே ஓங்கியொலித்தது!
காலப் பெருஞ் சுழியில்-நீ
திரிந்து வளர்ந்த அடவிகள் யாவும் மெல்ல அழிந்தன:
பளிங்கு போல் நீரோடிய அருவிகள் யாவும்
அசுத்தமாகிப் பின் தூர்ந்து போயின:
கடந்த காலம் பற்றிய உன் கதைகளிலெல்லாம்
கசப்பான சோகம் படியலாயிற்று!
உன் பொழுதின் பெரும் பகுதி
படுக்கையில் முடங்கிப் போனது!
ஓய்வற்றுத் திரிந்த உனது பாதங்கள்
பயணிக்க முடியாத் திசைகள் பார்த்துப் பெருமூச்செறிந்தன:
வேலைகளை எண்ணி
உனது கரங்கள் துடிக்கும் பொழுதுகளில்
இயலாமைகள் கொண்டு புலம்பத் தொடங்குவாய்!
நோய் தீர்க்கவென
சந்தடிகள் நிரம்பிய நகரக்குக் கூட்டிவரப் பட்டாய்!
உன் காற்றும் நீரும் மண்ணும் ஆன்மாவுமிழந்து...
நகரடைந்தாய் நீ மட்டும்!
உணர்வுகள் அடங்கி ஓய்ந்த பின் ஒரு நாள்
உறவுகள் கூடி உனைத் தூக்கிச் சென்றனர்...
உனக்கான மண்ணெடுத்த பூமி நோக்கி!
அம்மையே!
இப்போது நாம் வாழ்கிறோம்
எல்லோர் கையிலும் பொம்மைகளாக...!