பொன்னந்திக் கிரணங்கள் படியத் தொடங்கிய மாலையில்
குளிர்ந்த மலையைவிட்டு கீழிறங்கி
தும்பிகள் பறந்து திரிவதும்
தங்க நிறக் கதிர்களாடுவதுமான வயல் நிலங்களையும்
நீரோடைகளையும் தென்னந்தோப்புகளையும் ஊடறுத்து
மனிதர்கள் வடிந்து போன சந்தைக் கட்டிடங்களையும்
மஞ்சள் வண்ணப் பூச்சொரியும் பெரு விருட்சத்தையும்
தாண்டி நீ சந்திக்கு வந்தாய்

பணியை முடித்து
நகரத்தின் நச்சுக் கரும்புகையில் தோய்ந்து
வாகன இரைச்சல் செவியோரம் இரைந்திட வந்திறங்கி
வீடு நோக்கி நடந்த வேளை
திடீரென எதிரே வந்து வேகம் குறைத்தாய்


உன் வானிலொரு சூரியனையும்
என் வானிலொரு சந்திரனையும் கண்டோம்
கதைப்பதற்கு இருந்த எல்லாச் சொற்களும்
கண்களிலேயே தேங்கிடக் கண்டோம்
அன்றும்
தலை திருப்பி நான் பார்க்கும் கணம் வரை காத்திருந்து
புன்னகையை உதடுகளில் மறைத்து
ஏதோ ஒரு இராகத்தை மீட்டிய படியே வேகம் கூட்டிச் சென்றாய்

அன்பு பொங்கிப் பிரவகித்த அபூர்வ நாட்களில்
நிழல் போலப்
பிரிவைச் சொல்லிப் பின் வந்தது காலம்

நான் வரச் சாத்தியமற்ற இடங்களில் நீயும்
நீ வரத் தேவையற்ற இடங்களில் நானும்


வாழ்வின் விதிமுறைகள்
எனதுலகையும் உனதுலகையும் வேறு பிரித்த வேளையில்
விடைபெற்றோம்
ஒன்றித்துப் பறந்த வானத்தையிழந்தோம்
இறுதியாக அன்று தான் அழகாகச் சிரித்தோம்

எனது சூரியனும் தனித்துப் போயிற்று
உனது சந்திரனும் தனித்தே போயிற்று

ஃபஹீமாஜஹான்

பரப்பிவைக்கப் பட்டிருக்கும் பொருட்களெதிலும்
பார்வையைச் செலுத்தாமல்
பாதிமூடப்பட்டுப் பூட்டுடன் தொங்கும்
விசாலமான கதவினை
பார்த்துக் கொண்டிருக்கிறாள்
கடைக்குப் போன சிறுமி

தெருவோரம்
கால் நீட்டியமர்ந்த வண்ணம்
சேகரித்து வந்த
உபயோகமற்ற பொருட்கள் நிரம்பி வழியும்
பொதிகளையே
வெறித்தபடி கிடக்கிறாள்
சிந்தனை பிசகிய மூதாட்டி


ஓடிச் சென்று ஏறிக்கொண்ட
பையன்களை உள்வாங்கி
விரைகிறது பேரூந்து
ஊன்றுகோலுடன் நெடுநேரம் காத்திருந்த
மாற்றுவலுவுள்ள மனிதனை
அந்தத் தரிப்பிடத்தில் விட்டுவிட்டு

ஃபஹீமாஜஹான்
2007