பொன்னந்திக் கிரணங்கள் படியத் தொடங்கிய மாலையில்
குளிர்ந்த மலையைவிட்டு கீழிறங்கி
தும்பிகள் பறந்து திரிவதும்
தங்க நிறக் கதிர்களாடுவதுமான வயல் நிலங்களையும்
நீரோடைகளையும் தென்னந்தோப்புகளையும் ஊடறுத்து
மனிதர்கள் வடிந்து போன சந்தைக் கட்டிடங்களையும்
மஞ்சள் வண்ணப் பூச்சொரியும் பெரு விருட்சத்தையும்
தாண்டி நீ சந்திக்கு வந்தாய்
பணியை முடித்து
நகரத்தின் நச்சுக் கரும்புகையில் தோய்ந்து
வாகன இரைச்சல் செவியோரம் இரைந்திட வந்திறங்கி
வீடு நோக்கி நடந்த வேளை
திடீரென எதிரே வந்து வேகம் குறைத்தாய்
உன் வானிலொரு சூரியனையும்
என் வானிலொரு சந்திரனையும் கண்டோம்
கதைப்பதற்கு இருந்த எல்லாச் சொற்களும்
கண்களிலேயே தேங்கிடக் கண்டோம்
அன்றும்
தலை திருப்பி நான் பார்க்கும் கணம் வரை காத்திருந்து
புன்னகையை உதடுகளில் மறைத்து
ஏதோ ஒரு இராகத்தை மீட்டிய படியே வேகம் கூட்டிச் சென்றாய்
அன்பு பொங்கிப் பிரவகித்த அபூர்வ நாட்களில்
நிழல் போலப்
பிரிவைச் சொல்லிப் பின் வந்தது காலம்
நான் வரச் சாத்தியமற்ற இடங்களில் நீயும்
நீ வரத் தேவையற்ற இடங்களில் நானும்
வாழ்வின் விதிமுறைகள்
எனதுலகையும் உனதுலகையும் வேறு பிரித்த வேளையில்
விடைபெற்றோம்
ஒன்றித்துப் பறந்த வானத்தையிழந்தோம்
இறுதியாக அன்று தான் அழகாகச் சிரித்தோம்
எனது சூரியனும் தனித்துப் போயிற்று
உனது சந்திரனும் தனித்தே போயிற்று
ஃபஹீமாஜஹான்
8 comments:
"அன்பு பொங்கிப் பிரவகித்த அபூர்வ நாட்களில் நிழல் போலப் பிரிவைச் சொல்லிப் பின் வந்தது காலம்
நான் வரச் சாத்தியமற்ற இடங்களில் நீயும் நீ வரத் தேவையற்ற இடங்களில் நானும்"
இந்த வரிகள் எனக்கு பிடித்திருந்தது..நன்றி...
நன்றி அன்னியன்.
அன்புடன்
பஹீமாஜஹான்
கதைப்பதற்கு இருந்த எல்லாச் சொற்களும்
கண்களிலேயே தேங்கிடக் கண்டோம்...
அழகான காதலைச் சொல்லும் வரிகள்.
இரு தரப்புக் கூச்சத்தையும் இரு வரிகளும் அழகாய் சொல்லியிருக்கின்றன.எனவேதான் பின்பு வந்தபிரிவு மனதைக் கனக்கச் செய்கின்றது.
ம்.........
ரிஷான் ஷெரீப்
உங்கள் வருகைக்கு நன்றி
அன்புடன்
பஹீமாஜஹான்
"எனது சூரியனும் தனித்துப் போயிற்று
உனது சந்திரனும் தனித்தே போயிற்று"
நிச்சயமாக...
இன்றைய என் வலிகளுக்கு ஏற்றாற் போல இருக்கிறது இந்த வரிகள்.
உங்களின் இந்த கவிதை அனுபவத்திற்கான காரணங்களை விட அதற்குள் புதைந்துகிடக்கும் அனுபவத்தின் வீச்சினை உணர முடிகிறது.
காலச்சுவடு பதிப்பாய் உங்களின் தொகுதி வர இருப்பதாய் அறிந்தேன் வாழ்த்துகள்.
உங்களைச் சுற்றியுள்ள இன்றைய சூழலின்பால் சற்றுத்திரும்பிப்பார்த்தால் இன்னும் அதிக தளம் யாருமற்று திறந்தே கிடக்கிறது, கவிதைத் தளம் தாண்டிய உங்களின் படைப்புக்கள் முஸ்லிம் சூழலுக்குள் நல்லதொரு மாற்றாய் இருக்கும் என நம்புகிறேன்.
உரையாடுவோம்..
வாருங்கள் பர்சான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
(காலச்சுவடு பதிப்பாய் உங்களின் தொகுதி வர இருப்பதாய் அறிந்தேன்)
"காலச்சுவடு" அல்ல,
"பனிக்குடம்" எனது தொகுப்பை வெளியிட்டுள்ளது.
http://www.agiilankanavu.blogspot.com
http://www.udaru.blogdrive.com
ஆகிய வலைப்பக்கங்களில் தொகுதி பற்றிய விபரத்தைக் காணலாம்.
(இன்னும் அதிக தளம் யாருமற்று திறந்தே கிடக்கிறது, கவிதைத் தளம் தாண்டிய உங்களின் படைப்புக்கள் முஸ்லிம் சூழலுக்குள் நல்லதொரு மாற்றாய் இருக்கும் என நம்புகிறேன்.)
உண்மை தான்.
கவிதையைத் தாண்டி எழுதலாம் என்று தான் நினைக்கிறேன்.நேரமின்மை என்ற வியாதி என்னையும் தொற்றியிருப்பதால் ....எதுவும் செய்யமுடியாமல் உள்ளது.
உரையாடலாம்.
அன்புடன்
பஹீமாஜஹான்
//எனது சூரியனும் தனித்துப் போயிற்று
உனது சந்திரனும் தனித்தே போயிற்று//
மிகவும் பிடித்த கவிதைகளிலொன்று இது
அப்படியா?
நன்றி முபாரக்.
அங்கும்
சூரியனும் தனித்துப் போச்சு
சந்திரனும் தனித்தே போச்சு ..என்ன?
Post a Comment