மேசைமீது உருண்டோடும் பென்சிலை
"ஓடாமல் நில்" என அதட்டி நிறுத்தி
என்னுலகத்தைச் சரிசெய்தபின்
எனை அழைத்துக் கொண்டிருக்கும் குரலை
எதிர்கொண்டு தலை நிமிரும் தருணத்தில்
உங்களால் முன்வைக்கப் படுகின்ற
வினாக்களைச் செவியுற்று
வெகுவாகக் குழம்புகிறேன்
கரும்பலகையின் இருண்மைக்குள்
கண்ணெறிந்து தோற்கிறேன்
நான்,
பின்தங்கிவிட்ட சிறுமியாயிற்றே!

ஆசிரியரே..
உங்கள் உயர்மட்ட
அறிவு நிலைகளிலிருந்து
கீழிறங்கி வந்து
எனது இருக்கைதனில் அமருங்கள்
தங்களின் தேர்ச்சி மிகுந்த சொற்களை
தூர எறிந்துவிட்டுத்
திக்கித் திணறுகின்ற குரலொன்றினை
வழிகூட்டிச் செல்லுங்கள்
வளராப் பிள்ளை நான்

வகுப்பறையினுள்
வந்து விழுந்த நட்சத்திரங்கள்
உங்களைச் சூழவே இருப்பதனால்
இருளினுள் அந்தரிக்கும் என்னுலகில்
வீழ்வதேயில்லை
உம் கிரணங்கள்

எனது குறைபாடுகளை நீங்கள்
முன்வைக்கும் வேளை
தூக்கிவிடும் கரமொன்றையிழந்து
வீழ்ந்த கிணற்றினுள்ளேயே தத்தளிக்கிறேன்
ஏறமுனைகையில்
படிவரிசைக் கற்களோடு சரிந்து வீழ்வதுகண்டு
எனைச் சூழும் ஏளனச் சிரிப்பொலிகளைப்
புறந்தள்ளிவிட்டு
எதையுமினிச் சாதிக்க முடியாதெனப்
பற்றியிருக்கும் புத்தகங்களைக் கைநழுவ விடுகிறேன்

நான் என்ன செய்ய வேண்டுமென்றோ
எப்படி உருவாக வேண்டுமென்றோ
அல்லது
உங்களைச் சுற்றிவரும்
ஒரு பிரகாசமான தாரகையாக
மாறுவதெவ்விதமென்றோ தெரியவே இல்லை

கற்றுத் தாருங்களெனக்கு

கொம்புகளும் விசிறிகளுமாகப்
பயங்காட்டுகின்ற சொற்களுக்கும்
பெருக்கலும் வகுத்தலுமாக
இறுக்கமான வாய்ப்பாடுகளுக்குள்
வீற்றிருந்தவாறு
தீராச் சிக்கல் தரும்
எண்களுக்கும் மத்தியில்
முடங்கிக் கிடக்கிறதென்னுலகம்

எனக்கான கெளரவத்தையும்
என் விழிகளுக்கான ஒளியையும்
கண்டடைந்து கொள்ளவே
ஒவ்வொரு காலையிலும் வருகிறேன்
எனினும்
முதுகின் பின்னால் கிடந்த இருளை
என் முன்னே நடக்கவிட்டுப்
பயனேதுமற்ற
பளுமிகுந்த பொதியொன்றைச் சுமந்தவாறு
நிமிர முடியாப் பாதைகளினூடாகத்
தினந்தோறும் திரும்பிச் செல்கிறேன்

நீங்களும் ஒரு தேரோட்டி தான்
விபத்தின்றிக் கழிந்ததில்லை ஒருநாளும்
ஆனால்
மீள மீளக் காயப்படுவதெல்லாம் நான்தானே?

என்மீது குற்றப் பத்திரிகை வாசித்து
தினமும் தண்டனை வழங்கும்
சிறைக்கூடமே எனது வகுப்பறையெனின்
மன்னித்துக் கொள்ளுங்கள்
எப்போது மாறப்போகிறீர்கள் -
நீங்களும் ஒரு ஆசிரியராக ?

-----------
2011.02.21
(நன்றி:கலைமுகம் இதழ் 51)மலையேறியதன் வலி
கால்களைவிட்டு நீங்கிய
காலைப் பொழுதொன்றில்
மலையேறிய ஆடைகளைக்
கழுவத் தொடங்கியிருந்தேன்

வியர்வைபடிந்துபோன
அவ்வாடைகளைத் தொடும் வேளை
மறுபடியும்
கைகளில் தோய்ந்தது
கசந்து போனதொரு வேதனை

அன்று
மலையுச்சியையடைந்த வேளை
மெளனம்.
ஒரு நீள் கோட்டில்
தன்னைத் தொலைத்திருந்தது
பளபளக்கும் மாபெரும் கடல்

ஆகாயத்தின் கீழிலிருந்து ஆழிப்பரப்பு வரை
அளந்தளந்து அலைவதே
தம் ஜீவிதமெனப்
பறந்து கொண்டிருந்தன
அக் கடலின் பறவைகள்

காலங்காலமாய்க்
கடலைப் புறக்கணித்துத்
தானுயர்ந்து நிற்பதான
மலைமுகட்டில் நானிருந்தேன்

கல்லாய்ச் சமைந்த
மலையை இகழ்ந்தவாறு
ஆதியில் தொடங்கிய அதே திமிருடன்
உலகம் சுற்றிவரும்
கடலலைகளில்
நீ தரித்திருந்தாய்

தலைக்கு மேலே
எல்லா இரகசியமும் தாங்கி
ஓங்கி நின்றிருந்தது
கார் கொண்ட ககனம்

மலையிறங்கி வந்த பின்பும்
மலைநோக்கும் கணந்தோறும்
கால்களில் வந்து சேர்கிறது
நகரமுடியா ஒரு வலி

2010.08.22
(நன்றி: கல்குதிரை வேனிற்காலங்களின் இதழ் 2011)
இக்கணத்தில்
உனை விலகிப்போவதைத் தவிர
வேறு மார்க்கம் ஏதுமில்லை


எல்லா அபிமானங்களையும்
ஒதுக்கிவிட்டால்
ஒரு சத்திரத்தைப் போல
எளிமையாக உள்ளது
வாழ்க்கை


உன் வழி அதுதான் எனத்
தேர்ந்தெடுத்து நீ விலகிய பின்
யாரும் பயணித்திராத
துயர்மிகு பாதை இதுவானாலும்
நான் இனிப்
போய்த் தான் ஆகவேண்டும்


கோபம் விளைவித்த துணிச்சல்
என் முன்னே வேகமாக நடக்கிறது
வெகு சீக்கிரத்திலேயே
நான் திரும்பி விடுவேன் என
நீ காத்திருக்கலாம்


ஏளனப் புன்னகை
மெல்ல மெல்ல மறைந்து
உன் முகத்தில் இறுக்கம் வந்தமர்ந்து
விபரீதத்தை உணரும் கணத்தில்.....
நீ வரவே முடியாத வெளியொன்றில்
எனதாத்மா மிதந்து கொண்டிருக்கும்

2010.08.29 இரவு 9 மணி
(நன்றி : கல்குதிரை வேனிற்காலங்களின் இதழ்-2011)