1)

ஆற்றின் மடியூறிச் சேற்று வெள்ளம்
பாய்ந்தோடும் கார் காலங்களில்
தண்ணீருக்காக அலைந்து நொந்தவள்
தன்னந்தனியாக நிலத்தை அகழ்ந்து
தெள்ளிய நீர்க் கிணறொன்றை உருவாக்கினாள்
அவளாக மண் குலைத்துச் சுமந்து
குளிர்ந்த நிழலை வைத்திருக்கும்
குடிசையொன்றையும் கட்டியெழுப்பினாள்
ஓய்வற்ற காலங்கள் அவள் கரங்களில் வந்தமர்ந்து
நிலமெங்கும் அவளைத் திரிந்து வருந்திடச் செய்தது

2)

கிணற்றிலிருந்து வீடு வரைக்கும்
நிழலைப் பரப்பும் கனி மரங்கள் வரிசையில் நிற்கும்
வெற்றிலையும் மிளகும் ஆங்காங்கே சுற்றிப் படர்ந்திருக்க
இராசவள்ளி, பீர்க்கு, புடோல், பாகல்
கொடிகளில் அசைந்தாடும்
ஒரு வாளித் தண்ணீர் கொடிகளுக்கும்
ஒரு குடம் தண்ணீர் வீட்டுக்கும் என
மர்மக் குரலொன்றுக்குக் கட்டுப்பட்டவளாக
நீர் சுமந்து
நிலத்தின் மேனியை அலங்கரித்தாள்

தனது கட்டளைக்கு இணங்கி வராத நிலத்தைப்
பண்படுத்திப் பண்படுத்திப் பயிர்களை நட்டிருந்தாள்
வசந்த காலங்களில் செந்நிறப் போர்வை போர்த்தும்
முள்முருங்கைகளை நெருக்கமாக நட்டு
பயிர் விளையும் பூமியைப் பாதுகாத்தாள்
வியர்வையையும் நீரையும் பருகிப் பருகி
அவளைச் சூழப் புதிது புதிதாய்
செழித்தது நிலம்3)

முட்டைகளைக் காவி எறும்புகள்
திட்டையேறும் நாட்களில்
விறகுகளை வெட்டியடுக்கி
மழைக் காலத்தை எதிர் கொள்ளத் தயாராகுவாள்
வெள்ளத்துக்கு அஞ்சும் பொருட்களையெல்லாம்
பரண்மீது பத்திரப்படுத்தியிருப்பாள்
தண்ணீரின் குரலைக் கேட்டவாறு
தலை சாய்த்துக் கிடக்கும் இரவுகளில்
ஆற்றின் கரையேறி வெள்ளம்
அவள் முற்றத்துக்கு வந்துவிட்டதாவென்று
கைவிளக்கையேந்தி நொடிக்கொருதரம்
கதவு திறந்து பார்ப்பாள்
நிலம் அவளது கால்களின் கீழே ஈரலித்துக் கிடக்கும்

4)மணல் நிறைந்து
மடிகொதித்துக் கொண்டிருக்கும்
கோடை காலங்களில்
அவளது ஆற்றின் ஊற்றுக்கள் வற்றியதேயில்லை
அவள் தோட்டத்துப் பட்சிகள் தொலைபுலம் செல்லவுமில்லை
நிலத்தின் கருணையை நம்பியிருந்தாள்


5)

மணக்க மணக்க வேகும் நெல்லை
வெண்ணிறக் குருத்தோலைப் பாய்களில் காயவிட்டு
பட்சணங்களை அள்ளிக் கொடுத்து
அந்தச் சிறுமியைக் காவலிருத்தியிருப்பாள்
நெல்மணி பொறுக்க வரும் பறவைகளை விரட்டத்
தளவாடியொன்றையும் கொடுத்துவைப்பாள்
நிலத்தின் விளைச்சல்களைக் களஞ்சியங்களில் சேகரித்தாள்

6)

ஆற்றோரத் தோப்பிலே பழுத்த தென்னையோலைகள்
பாடலொன்றை உதிர்த்தவாறு வீழ்வதைக் கேட்டபடி
மதிய உணவை உண்பாள்
அந்தி வேளையில் அவற்றைச் சேகரித்து
ஆற்றிலே ஊறவைத்துத் திரும்புவாள்
பலாமரங்களில் படர்ந்து தொங்கும்
பழுத்துச் சிவந்த மிளகுக் கதிர்களையும்
அடுத்த நாள் சமையலுக்கான காய்களையும் கிழங்குகளையும்
சேலை மடியில் சேகரித்து வருவாள்
நிலத்தை இன்னொரு துணையெனக் கொண்டாள்

7)

இடைவேளைகள் ஏதுமற்ற
நிகழ்ச்சி நிரலொன்றைத் தினந்தோறும் வைத்திருந்தாள்
பன்புல், தென்னை , பனை, தாளை என
ஏதோ ஓரோலை கொண்டு
பாய், தட்டு, கடகங்களில்
தனது படிமங்களை இட்டு நிரப்பி
இரவுகளை இழைத்துக் கொண்டிருப்பாள்
அன்றேல்,
சிரட்டைகளைச் சீவித் துளையிட்டு
சீரான காம்புகளில் பொருத்தி அவற்றால்
இருளை அள்ளிக் கொட்டுவாள்
நிலத்தின் சூழ்ச்சிகளிலிருந்து தன்னை விடுவித்தாள்

8)
சேவல் கண்விழித்துக் கூவும்
அதிகாலையில் எழுந்து
கிணற்றிலிருந்து முதல்வாளித் தண்ணீரை
அள்ளியெடுத்து வருகையில்
சுவர்க்கத்தின் தென்றல் அவளைத் தழுவும்
இரவில் வீழ்ந்த மாங்கனிகள் பரவியிருக்கும்
முற்றத்திலிருந்து இராப் பறவைகள் நீங்கியிருக்கும்
புற்று மண்தேடிப் பூசிமெழுகியிருக்கும்
சமையலறையைப் பரபரவெனக் கூட்டித்
தண்ணீரைக் கொதிக்க வைத்துத்
தேனீர் மணம் வீடெங்கும் பரவிடப்
புதிய நாளைத் தொடங்குவாள்
அதிகாலைத் தொழுகை முடித்து
காலை உணவைத் தயாரிக்கையில்
இரகசியக் கிளைகளில் துயின்ற பறவைகள்
கலகலத்துப் பறக்கும்
நிலத்தின் ஒளி அவளிடமிருந்து உதித்தது

9)

கோப்பிப் பூக்களின் சுகந்தம் படிந்திருக்கும்
அவள் முற்றத்தில்
சூரியக் கதிர்கள் பரவத் தொடங்கும் நேரம்
கால் தடங்கள் ஏதுமின்றி முற்றத்தைப் பெருக்கிவைப்பாள்
அந்தத் தூய முற்றத்தில்
ஓரிரவு முழுதும் ஆற்றில் ஊறிய
ஓலைகளை எடுத்து வந்து பரப்புவாள்
இரண்டாகக் கிழித்து நெய்து
கிடுகுகளை அடுக்கிய பின்
அழுக்கு நீங்கக் குளித்து வருவாள்
புதுத் தெம்புடன்
நிலத்துக்கு நிழல் வழங்கவும் அவளே உழைத்தாள்

10)
சிறுமி விரும்பும் உணவுகளைத் தனது
கைச்சுவையையும் அன்பையும் கலந்து சமைத்துப்
பள்ளிக் கூட மணியோசை கேட்கும் வரைக் காத்திருப்பாள்
உரலிலே மாவிடித்த படியோ
அரிசியைப் புடைத்த படியோ
அவளது நிலம் நகர்ந்து கொண்டேயிருந்தது

11)

அடுக்கடுக்காகக் கிடக்கும் மண்பானைகளுக்குள்
சிறுமிக்கான பட்சணங்களைத் தயாரித்து வைத்திருப்பாள்
‘பிடிஅரிசி”ப் பானை’ தனில்
இரண்டு பிடிகள் சிறுமியின் கையால்
அல்லது
பாட்டியின் கையால் தினமொரு பிடியுமென
வாசல் வரும் யாசகருக்காக
அரிசிபோட்டு வைத்திருப்பாள்
வழங்கும் கரங்களை நிலத்திடமிருந்தே அவள் பெற்றிருந்தாள்


12)

ஆறு தேங்காய்களுக்கு ஒரு போத்தல் எண்ணெய் என்ற
தப்பாத அவள் கணக்கின் படி
காலையிலே தேங்காய்களைத் துருவி வேகவைப்பாள்
பிற்பகலில் பாலைப் பிழிந்து கொதிக்க வைத்து
மிதந்து வரும் எண்ணெய்யை
அகப்பையால் பக்குவமாய்ச் சேகரிப்பாள்
மீண்டும் அதை அடுப்பில் வைத்து
எண்ணெய் கொதித்து மணக்கும் வேளையில்
தென்னங்கீற்றுகளினூடாக நிலவையழைத்துக் கொண்டு
இரவு அவள் வாசலுக்கு வந்துவிடும்

13)குரக்கன் கதிர்களை அறுத்தெடுக்கும்
குளிர்காலங்களில்
வெண்ணெய்க் கட்டிகள்போல
என்றென்றும் மணம்வீசும் எண்ணெய்
உறைந்து கிடக்கும் அதிசயத்தைச்
சிறுமிக்குக் காண்பிப்பாள்
வயல் வெளிமீது
பனிப்போர்வை மூடிப் பதுங்கியிருக்கும் நிலம்


14)

தனிமையை இழைத்து இழைத்து நெய்தவள்
கடின இருளைத் துளையிட்டு
அகப்பைகளில் பூட்டியவள்
அந்த வீட்டின் மாபெரும் மௌனத்தைக்
கலைக்க முடியாது தவித்தாள்
கணவன், மகள், கடைசியில் சிறுமியும்
திரும்பி வராமற் போன பின்னர்
அவர் தம் நினைவு துலங்கும் பொருட்களையெலாம்
தடவித் தடவித் தினமும்
காலத் தீர்ப்பின் வலியினால் நொந்தாள்

இறுதியில்
ஓயாது அழைத்துக் கொண்டிருந்த
அரூபக் குரலொன்றுக்குப் பதில் அளித்து
அவள் போனாள்
புற்களையும் செடிகளையும் வளரவிட்டு
அந்த நிலம்
அவளைப் பத்திரப் படுத்திக் கொண்டது2009.08.27
(கலைமுகம் 50 வது மலர் 2010)