நெடுங்காலத் தாமதத்தின் பின்
இப்போது அழைக்கிறாய்
எந்த மன்னிப்புமற்ற வியாக்கியானங்களோடு
பதுங்கிப் பதுங்கி வந்திருக்கிறாய்
முதன் முறையாக உன்னை எறிந்தேன்
இதயத்திலிருந்து சாக்கடைக்கு
மாசுற்றவைகளைத் தூக்கியெறிந்திட
இரு தடவைகள் சிந்தித்ததேயில்லை நான்
தூமகேது மறைந்து போன இடத்தில்
இருள் கவிகிறது
ஆதியில் இடப்பட்ட வழியொன்றினூடாக
தேடிப் போக முடியாத நிலவு
தேய்ந்து தேய்ந்து நகர்கிறது
இருளொன்றின் உள்ளேயிருந்து
அன்பானவளே என்கிறாயா?
எந்த அறிமுகமுமற்றவளாக
இக்கணத்தில் உனைக் கடக்கிறேன்
சொல்
அன்பானவனாக இருந்தாயா?
வேலிகளையுடைத்து
உனது ஓடைகளில்
அவமான நீர் புகட்டிட அழைத்தபோதும்
தாரை வார்த்துத் தந்திட
எவருமே முன்வராத வாசலொன்றில்
தாகித்துக் கிடந்தவளைக்
கைவிட்டுச் சென்ற போதும்
அன்பானவனாக இருந்தாயா?
எனக்கும் உனக்குமான உலகின்
கடைசிவாசலையும் மூடி
முத்திரையிட்டாயிற்று
அந்தப் பிசாசை இருகூறாக்கி
நெஞ்சத்து சீசாக்களில் அடைத்தாயிற்று
இனி நடந்தேறும் படியான
மங்களங்கள் எதுவுமற்ற இந்நாளில்
எழுதிமுடித்திடாத பாடலொன்றை
நினைவு படுத்துகிறாய்
இறுதி வரிகளுக்கான இசையை மாத்திரம்
உன்னிடம் தருகிறேன்
உன்னால் நான் நனைந்த மழை
அது தான் இறுதியில்
நோயையும் விட்டகன்றது