தான் மாத்திரம் உணரக் கூடிய மொழியில்
கதைத்துக் கொண்டிருந்த
சின்னஞ்சிறு நாற்றுக்களைச்
சிறுமி
குழந்தையைத் தூளியில் கிடத்தும் பக்குவத்தோடு
குழிகளில் நட்டிருந்தாள்
ஆற்றோர மூங்கில்களின் கீதங்களைக் கேட்டவாறு
கதை பேசிப் பேசி அவளுடன்
அவைகள் வளர்ந்தன"காலையில் வா
அற்புதமொன்றுடன் காத்திருப்போம்'
எனக் கூறி
ஒவ்வொரு மாலையிலும்
அவளை வழியனுப்பி வைத்தனசூரியனுக்கு முன்னால் அவள் எழுவாள்
பின்னர்
நீள நீள நிழல்களை விழவிடும்
மஞ்சள் வண்ணக் கிரணங்களுடன்
தோப்பினுள் நுழைவாள்
தூர வரும் போதே கண்டு கொள்ளும்
மூங்கில் புதர்களெல்லாம்
தாளத்துடன் அசைந்தாடி
அவளை வரவேற்கும்
ஒரு தளிரையோ
பூவையோ பிஞ்சையோ
அவளுக்குக் காட்டிடவே
செடிகளெலாம் காத்திருக்கும்தாள முடியாத இன்பம் பொங்கிட
ஆற்றை நோக்கி ஓடுவாள் சிறுமி
சலசலத்தோடும் தெள்ளிய நீரைச்
சிறிய வாளிக்குள் பிடித்து வருவாள்
வாளி கொள்ளா உற்சாகத்துடன்
துள்ளிப் பாயும் தண்ணீர்
மீன்கள் நிரம்பிய அவளது
சின்னச் சட்டையை
நனைத்து நனைத்துக் கூத்தாடும்


செடிகளின் வேரடியில் அவள்
தண்ணீரைப் பாய்ச்சும் வேளை
இசையுடன் பாய்ந்தோடும்
வரும் வழி நீள
நதி நனைத்துச் சுமந்து வந்த
பல்லாயிரம் வேர்களின் மொழிகள்பின் அவை
பூக்களில் கவிதைகளை வரைந்தவாறு
அவள் போலவே வளரும்
(நன்றி: அம்ருதா)