தான் மாத்திரம் உணரக் கூடிய மொழியில்
கதைத்துக் கொண்டிருந்த
சின்னஞ்சிறு நாற்றுக்களைச்
சிறுமி
குழந்தையைத் தூளியில் கிடத்தும் பக்குவத்தோடு
குழிகளில் நட்டிருந்தாள்
ஆற்றோர மூங்கில்களின் கீதங்களைக் கேட்டவாறு
கதை பேசிப் பேசி அவளுடன்
அவைகள் வளர்ந்தன
"காலையில் வா
அற்புதமொன்றுடன் காத்திருப்போம்'
எனக் கூறி
ஒவ்வொரு மாலையிலும்
அவளை வழியனுப்பி வைத்தன
சூரியனுக்கு முன்னால் அவள் எழுவாள்
பின்னர்
நீள நீள நிழல்களை விழவிடும்
மஞ்சள் வண்ணக் கிரணங்களுடன்
தோப்பினுள் நுழைவாள்
தூர வரும் போதே கண்டு கொள்ளும்
மூங்கில் புதர்களெல்லாம்
தாளத்துடன் அசைந்தாடி
அவளை வரவேற்கும்
ஒரு தளிரையோ
பூவையோ பிஞ்சையோ
அவளுக்குக் காட்டிடவே
செடிகளெலாம் காத்திருக்கும்
தாள முடியாத இன்பம் பொங்கிட
ஆற்றை நோக்கி ஓடுவாள் சிறுமி
சலசலத்தோடும் தெள்ளிய நீரைச்
சிறிய வாளிக்குள் பிடித்து வருவாள்
வாளி கொள்ளா உற்சாகத்துடன்
துள்ளிப் பாயும் தண்ணீர்
மீன்கள் நிரம்பிய அவளது
சின்னச் சட்டையை
நனைத்து நனைத்துக் கூத்தாடும்
செடிகளின் வேரடியில் அவள்
தண்ணீரைப் பாய்ச்சும் வேளை
இசையுடன் பாய்ந்தோடும்
வரும் வழி நீள
நதி நனைத்துச் சுமந்து வந்த
பல்லாயிரம் வேர்களின் மொழிகள்
பின் அவை
பூக்களில் கவிதைகளை வரைந்தவாறு
அவள் போலவே வளரும்
(நன்றி: அம்ருதா)
14 comments:
சூரியொளி குன்ற தொடங்கிய நேரத்தில் தென்றல் பனி போர்த்தி கொண்ட கணத்தில் கண்களை மூடி பெருமூச்செறிந்து அனுபவிக்கும் இன்பத்தினை போலிருந்தது உங்களது இந்த கவிதை.
வாருங்கள் Sai Ram
(சூரியொளி குன்ற தொடங்கிய நேரத்தில் தென்றல் பனி போர்த்தி கொண்ட கணத்தில் கண்களை மூடி பெருமூச்செறிந்து அனுபவிக்கும் இன்பத்தினை போலிருந்தது உங்களது இந்த கவிதை.)
உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது.
நன்றி.
உண்மையிலேயே எனக்கு பயங்கரமாப்பிடிச்சிருக்கு இந்த கவிதை. சிலவேளை ஒரு குட்டிப் பெண் உள்ளே உலவுவதால் இருக்கலாம்..
பஹீமாக்காவின் கவிதைகளைப் பட்டியலிடச் சொன்னால் இரண்டாவது இடம் இதுக்குத்தான். முதலாம் இடம் எதுக்கெண்டு தெரியும்தானே..
அன்பின் ஃபஹீமா ஜஹான்,
மனம் மகிழ்ச்சியில் துள்ளிச் சாரலில் நனையும் விதமான அழகிய கவிதையொன்றினைத் தந்திருக்கிறீர்கள்.
//செடிகளின் வேரடியில் அவள்
தண்ணீரைப் பாய்ச்சும் வேளை
இசையுடன் பாய்ந்தோடும்
வரும் வழி நீள
நதி நனைத்துச் சுமந்து வந்த
பல்லாயிரம் வேர்களின் மொழிகள் //
பல்லாயிரம் வேர்களின் மொழிகளை, நீர்ச் சொட்டுக்கள் கண்டறிந்து பயணிக்கும் இவ் வரிகளை மிகவும் ரசித்தேன்.
பாராட்டுக்கள் !
தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி :)
வாருங்கள் அகிலன்
நீண்ட நாட்களுக்குப் பின்னர் உங்களைக் கவரக் கூடிய ஒரு கவிதையை எழுத முடிந்ததையிட்டு மகிழ்வடைகிறேன்.
"பஹீமாக்காவின் கவிதைகளைப் பட்டியலிடச் சொன்னால் இரண்டாவது இடம் இதுக்குத்தான். முதலாம் இடம் எதுக்கெண்டு தெரியும்தானே."
ஆமாம்.தெரியும்.
அந்தக் கவிதையை மிகப் பெரிய அளவில் பலருக்கும் அறிமுகம் செய்து வைத்ததும் நீங்கள் தான் என்பதும் தெரியும்.
வாருங்கள் ரிஷான்
((மனம் மகிழ்ச்சியில் துள்ளிச் சாரலில் நனையும் விதமான அழகிய கவிதையொன்றினைத் தந்திருக்கிறீர்கள்))
அப்பாடா இப்பவாவது ஒரு மகிழ்ச்சியான கவிதை எழுதியிருக்கிறேன் என்று சொன்னதற்கு மிகவும் நன்றி.
உங்கள் மகிழ்ச்சியான கவிதை படிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது பஹீமா :) சிறுமிக்கும் செடிகளுக்குமான நட்பினை உங்களுக்கே உரிய மொழியில் அழகுபடச் சொல்லியிருக்கிறீர்கள்.
வாருங்கள் கவிநயா
"உங்கள் மகிழ்ச்சியான கவிதை படிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது "
எனக்கும் மகிழ்ச்சியான கவிதை எழுத முடியும் என்பது இப்பொழுதாவது நிறைவேறியிருக்கிறதல்லவா?
நான் எழுத நினைத்த கவிதைகளை நீங்கள் எழுதிவிட்டிர்கள் என்று தோன்றுகிறது . என்னுடைய உணர்வுகள். வொவ்வொரு வரியோடும் இணைத்து போகிறது ரிஷான் காக உங்க தளத்தின் முகவரியை இன்றுதான் தந்தார்கள். மேலும் உங்களை பற்றி எஸ்.ர அவர்களின் கடுரையில் படித்து இருக்கிறேன்
வாருங்கள் ஹாரிஸ்,
முதன் முதலாக வந்திருக்கிறீர்கள்.
உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது.
நன்றி
சில்லென்று ஓர் உணர்ச்சி.மிக அழகான ஆழமான பதிவு.
அதிலும் மிகவும் கொண்டாடிய வரிகள்
//வாளி கொள்ளா உற்சாகத்துடன்
துள்ளிப் பாயும் தண்ணீர்
மீன்கள் நிரம்பிய அவளது
சின்னச் சட்டையை
நனைத்து நனைத்துக் கூத்தாடும்//
இவை.அழகிலும் அழகு
சில்லென்று ஓர் உணர்ச்சி.மிக அழகான ஆழமான பதிவு.
அதிலும் மிகவும் கொண்டாடிய வரிகள்
//வாளி கொள்ளா உற்சாகத்துடன்
துள்ளிப் பாயும் தண்ணீர்
மீன்கள் நிரம்பிய அவளது
சின்னச் சட்டையை
நனைத்து நனைத்துக் கூத்தாடும்//
இவை.அழகிலும் அழகு
வாருங்கள் இராவணன்,
"சில்லென்று ஓர் உணர்ச்சி."
உங்கள் வருகைக்கு நன்றி.
SAIYAF:
VERY VERY INTRESTFULLY POEM.
I LOVE POEM......
Post a Comment