நம்மெதிரே வீழ்ந்து கிடக்கிறது
காலத்தின் பிறிதொரு முகம்
இன்று
மீளவும் பழைய ஆரோக்கியத்திடம்
மீண்டுள்ளேன்
முதன் முறையாக
நிறைவு செய்யப்பட்ட வசனமொன்றை
உன்னிடம் ஒப்பிக்கிறேன்
அதே புன்னகையை மறுபடியும்
எடுத்து வைக்க முடியாமல்
விலகிச் செல்கிறேன்
மகத்தான பொறுமையொன்றின்
காத்திருப்பைக் கண்டு கண்டே
புறக்கணிப்புக்களை வளர விட்டிருந்தாய்
மனதில் பதிந்த உனது நிழல்
சிதறிய வாசனைத் திரவியம் போல
மெல்ல மெல்ல மறைந்தே போயிற்று
நீ உரிமை கொண்டாடிய
எல்லாவற்றிலிருந்தும்
எனை விடுவித்துக் கொண்டேன்
துயரத்தில் பதை பதைத்த சொற்களையும்
துரோகத்தால் நசுங்குண்ட சத்தியங்களையும்
உனது சுவர்களக்குள்ளேயே விட்டு விட்டு
வெளியேறிப் போகிறேன்
இப்பொழுதும்
ஆதித்திமிர் தடுத்திட உன்னிடம் எஞ்சியுள்ளது
ஒரு சொல்
விதி தனது கண்ணீரை வழிய விட்டசொல்
நாம் நமக்குக் கிடைத்திடக் காத்திருந்த
கடைசிச் சொல்
19 comments:
கடைசிச் சொற்கள்.. சிலவேளை. களிப்பூட்டும்... சிலவேளை. மனசுக்குள் தேங்கி நின்று சங்கடப்படுத்தும்.. (கவிதையில சொல்லியிருக்கிறதை விட்டிட்டு வேறஏதோ பேசுறனா..)
அந்த ஆதித்திமிர் தானே பலரது வாழ்க்கையயை பழுதாக்கி கொண்டிருப்பது...
\\
மகத்தான பொறுமையொன்றின்
காத்திருப்பைக் கண்டு கண்டே
புறக்கணிப்புக்களை வளர விட்டிருந்தாய்
மனதில் பதிந்த உனது நிழல்
சிதறிய வாசனைத் திரவியம் போல
மெல்ல மெல்ல மறைந்தே போயிற்று
\\
உங்களுக்கு மட்டும் எப்படி இப்படி சொல்லாட முடிகிறது...
இந்தத் திமிரின் இயல்புகள் என்னையும் பாதித்திருக்கிறது தோழி...!
எங்கோ படித்த கவிதை !
ஆயுள் முழுவதும்...
ஆழமாய் மிக ஆழமாய்
காதல் நினைவுகளை...
அசைபோடுவதற்காகவேனும்
காதல் பிரிவு அவசியம்தானோ?
அன்பின் ஃபஹீமா ஜஹான்,
அத்தி பூத்தால் போல்..என உங்களுக்குச் சொல்வது மிகச்சரியாக இருக்கும். நீண்ட நாளைக்குப் பின்னர் கவிதை இடுகிறீர்கள்..அடிக்கடி எழுதினால் என்ன?
//மனதில் பதிந்த உனது நிழல்
சிதறிய வாசனைத் திரவியம் போல
மெல்ல மெல்ல மறைந்தே போயிற்று//
அழகான வரிகள்.
//இப்பொழுதும்
ஆதித்திமிர் தடுத்திட உன்னிடம் எஞ்சியுள்ளது
ஒரு சொல்
விதி தனது கண்ணீரை வழிய விட்டசொல்
நாம் நமக்குக் கிடைத்திடக் காத்திருந்த
கடைசிச் சொல்//
அது என்ன சொல்லென அறிவும் ஆவல் மிகுகிறது :)
அடிக்கடி எழுதுங்கள் சகோதரி !
உங்கள் பதிவுக்கு மாதவராஜ் பதிவிலிருந்து வழி காட்டிய ரிஷானுக்கு நன்றி.
உங்கள் பதிவுகளை ஒவ்வொன்றாய்ப் படிக்கிறேன்; ரீடரிலும் இப்போது.
//துயரத்தில் பதை பதைத்த சொற்க//ள் படித்த எங்களிடம் ஒட்டிக் கொண்டு!
//நாம் நமக்குக் கிடைத்திடக் காத்திருந்த
கடைசிச் சொல்// அற்புதம்.
கவித்துவமான வார்த்தைகளில் உணர்வுபூர்வமாய் பயணித்தது போன்ற அனுபவம். நன்று!
வாருங்கள் அகிலன்
"கடைசிச் சொற்கள்.. சிலவேளை. களிப்பூட்டும்... சிலவேளை. மனசுக்குள் தேங்கி நின்று சங்கடப்படுத்தும்.."
மனதுக்குள் தேக்கிவைத்த கடைசிச் சொல்லும் உண்டு. அவரவரை வதைத்தபடி
வாருங்கள் தமிழன்-கறுப்பி
"அந்த ஆதித்திமிர் தானே பலரது வாழ்க்கையயை பழுதாக்கி கொண்டிருப்பது..."
ஆமாம். வாழ்வை மட்டுமல்ல. ஒரு சந்ததியின் மகிழ்வையும் கூட.
"இந்தத் திமிரின் இயல்புகள் என்னையும் பாதித்திருக்கிறது தோழி...!"
அப்படியா?
ஆண்களின் திமிர் தான் பெண்களைப் பாதிக்கும் என்று நம்பியிருந்தேன்..
வாருங்கள் உதயம்
"ஆயுள் முழுவதும்...
ஆழமாய் மிக ஆழமாய்
காதல் நினைவுகளை...
அசைபோடுவதற்காகவேனும்
காதல் பிரிவு அவசியம்தானோ?"
உண்மைதான்.
ஆனால் அது தான் பெரும் சித்திரவதையாச்சே?
வாருங்கள் ரிஷான்
"அது என்ன சொல்லென அறிவும் ஆவல் மிகுகிறது :)"
அதையறிந்து கொள்ள கண்ணீரையும் துயரங்களையும் விலையாகக் கொடுக்க வேண்டிவரும்.
வாருங்கள் கெக்கே பிக்குணி
"உங்கள் பதிவுக்கு மாதவராஜ் பதிவிலிருந்து வழி காட்டிய ரிஷானுக்கு நன்றி."
ஓஹ் ரிஷானுக்கு என் சார்பாகவும் நன்றி.
உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது.
வாருங்கள் Sai Ram
"உணர்வுபூர்வமாய் பயணித்தது போன்ற அனுபவம்'
ம்.
நன்றி.
//மனதில் பதிந்த உனது நிழல்
சிதறிய வாசனைத் திரவியம் போல
மெல்ல மெல்ல மறைந்தே போயிற்று//
எனக்கும் பிடித்த வரிகள். உங்கள் கவிதைகள் காதருகே கிசுகிசுப்பாய் சோகத்தை பகிர்ந்து கொள்ளும் தோழியைப் போல மனதுக்கு நெருக்கமாய் இருக்கின்றன...
ம்ம்ம்ம்....
எந்த வார்த்தை சரியாக இருக்கும்.
நன்றி.
ம்
மிகச் சரியான வார்த்தை.அதையே வைத்துக் கொள்ளுவோம்.
அன்புடன்
ஜகதீஸ்வரன்
http://jackpoem.blogspot.com
வாருங்கள் ஜகதீஸ்வரன்
"ம்ம்ம்ம்....
எந்த வார்த்தை சரியாக இருக்கும்.
நன்றி.
ம்
மிகச் சரியான வார்த்தை.அதையே வைத்துக் கொள்ளுவோம்."
"நன்றி" என்ற சொல்லுக்காக விதி தனது கண்ணீரை வழியவிட்டுக் காத்திருக்குமா?
கவிதையும் அதனோடிணைந்த நிழற்படமும் அழகுக்கு அழகு சேர்க்கிறது.
உங்கள் மொழியாடல் அற்புதம். கடைசிச் சொல் அழகு!
இனிய புன்னகையுடன்,
உதய தாரகை
வாருங்கள் உதய தாரகை,
உங்கள் வருகை குறித்த மகிழ்ச்சியடைகிறேன்.
நன்றி
Post a Comment