ஓர் அரசியல்
ஓர் அவ நம்பிக்கை
அகதியாக உனை வெளியேற்றியது


தீராத் துயரம்
பளுமிக்க தனிமை
நெடும் பெரு மூச்சு
உன்னிடம் தேங்கிக் கிடக்கிறது


துரோகத்தின் பழிச் சொல்லும்
மரணத்தின் தீர்ப்பும்
அநியாயமாக உனைப் பின் தொடர்கிறது

கொலையுண்டவர்களை
நீள் வரிசையில் கிடத்தி
நீயும் நிலவும் காவலிருந்த இரவில்
தேசத்தின் மீதிருந்த
இறுதி நம்பிக்கையையும்தொலைத்திருந்தாய்


அலைகளில் தத்தளிக்கும் படகில்-நீ
தப்பித்து ஏறிய இருளில்
எல்லா அடையாளங்களையும்
அழித்திருந்தாய்

இன்று..
நீ அஞ்சிய நரகமொன்றை நோக்கி
நகர்த்தப்பட்டுள்ளாய்


அபயம் தேடித் தவித்த
உன் இறுதிச் சொற்கள்
எனது அறையெங்கும்
எதிரொலித்தபடியழைகின்ற இந்நாளில்
நம்பிக்கையும் ஆறுதலும் தரக்கூடிய
எல்லாச் சொற்களையும் நானிழந்து நிற்கிறேன்


பகல் முழுதும்
மலைகளின் சாம்பல் நிறப் போர்வைக்குள்
தேங்கிக் கிடக்கும் இருள்
மாலையில் பதுங்கிப் பதுங்கி மலையிறங்கி
ஊரின் திசைகளெங்கிலும்
உறைந்திட ஆரம்பிக்கும் கணங்களில்
எனை வழியனுப்பி வைப்பாய்

உன்னையும்
எனது ஆனந்தங்களையும்
அந்த வீட்டுத் தனிமையின்
பசியுற்ற வாய்களிடம்
தின்னக் கொடுத்துவிட்டு
எதிர்க் காற்றில் மோதி மோதி
உற்சாகமிழந்த பாதங்களால்
மிதிவண்டியைச் செலுத்துவேன்

திரும்பித் திரும்பிப் பாராமல்
பக்குவமாய்ப் போய் வருமாறு
உனது பிரார்த்தனைகளையெல்லாம்
வழித்துணையாய்த் தொடரவிட்டு
நெஞ்சின் திரவியத்தை வழியனுப்பிவைப்பாய்

மெளனத்தில் மூழ்கிய
பரந்த வயல் வெளியின் கடைசி வளைவையும்
கடந்து மறையப் போகும் கணத்தில்
ஏக்கத்துடன் திரும்பிப் பார்ப்பேன்
நின்றிருப்பாய் அவ்விடத்தே
நீயொரு புள்ளியென

துயரம் தழுதழுக்கும் பெருமூச்சுக்களை
வீட்டினுள் அலையவிட்டு-நீ
கதவுகளை மூடிக் கொள்ளும் இரவில்
தூரத்து மலைகளில்
ஊமையாய்த் தீயெறியும்

நீ முத்தமிட்ட வாசனையும்
சேலைத் தலைப்பால் போர்த்தி எனைத்
தூங்க வைக்கும் கதகதப்பும்
நினைவில் மேவிட உறங்கி
மறுநாளும் உனக்கான பகல் உணவை
மாலையில் எடுத்து வருவேன்

உனைப் பிரிந்து நான்
நீள் தூரம் சென்ற காலங்களில்
உயிர் வதைபட வாழ்ந்திருந்தாய்
அனாதரவாய் விடப்பட்ட
உனதுயிரின் கரைகளை
அரித்தரித்தே அழித்தது
விதியென்னும் பெருவெள்ளம்

உனது இறுதி உணவுக் கவளமும்
வாந்தியாய்ப் போய்விட்ட இரவு
நீ இழுபட்டுச் சென்ற
தலையெழுத்தின் கதை
தடைப்பட்டு நின்றதா?
கண் மூடி விடமுன்னர்
எனைக் கண்டுவிட வேண்டும் என்பதே
உனதுயிர் கூட்டி உச்சரித்த
இறுதிச் சொற்களாயிற்றா?

உன் கடைசி நிம்மதியும்
நான் தான் என்பதை ஏன் மறந்தேன்?
கைசேதமுற்றுத் தவிக்கும் ஆன்மாவைச்
சாவு வரையும் சுமந்தலைய
ஏன் விதிக்கப் பட்டேன்?

நான் வந்தேன்
பாதையைத் திறந்து
ஆயுதம் தரித்த வீரர்கள்
குண்டுகள் அற்ற
பொதிகளிலும் வாகனங்களிலும்
மனிதர்களிடத்தேயும்
அதனைத் தேடித் தேடி
அனுப்பி வைத்த நாளொன்றில்
நான் வந்தேன்
உனைத் தவித்துச் சாகவிட்டு
எங்கோ பரதேசம் கிடந்தவளாக...
யாருமே அறியாத
இரகசியக் கொலையாளியாக

நீ உறங்கிய கட்டில்
காலியாகக் கிடந்தது
நீ நீரருந்தும் கோப்பை
காணாமற் போயிருந்தது
ஆலய வளவில்
புல்மூடிப் படர்ந்த இடமொன்று
எனக்காகக் காத்திருந்தது

அம்மம்மா...........................................
மலை அத்தனைச் சுமை மோதிடக்
கேவியழும் கண்ணீருடன்
கைகளை ஏந்துகிறேன்
விரலிடுக்கினூடு வழிந்தோடுகிறது
நீ காட்டிய பேரன்பு

பஹீமாஜஹான்

பொன்னந்திக் கிரணங்கள் படியத் தொடங்கிய மாலையில்
குளிர்ந்த மலையைவிட்டு கீழிறங்கி
தும்பிகள் பறந்து திரிவதும்
தங்க நிறக் கதிர்களாடுவதுமான வயல் நிலங்களையும்
நீரோடைகளையும் தென்னந்தோப்புகளையும் ஊடறுத்து
மனிதர்கள் வடிந்து போன சந்தைக் கட்டிடங்களையும்
மஞ்சள் வண்ணப் பூச்சொரியும் பெரு விருட்சத்தையும்
தாண்டி நீ சந்திக்கு வந்தாய்

பணியை முடித்து
நகரத்தின் நச்சுக் கரும்புகையில் தோய்ந்து
வாகன இரைச்சல் செவியோரம் இரைந்திட வந்திறங்கி
வீடு நோக்கி நடந்த வேளை
திடீரென எதிரே வந்து வேகம் குறைத்தாய்


உன் வானிலொரு சூரியனையும்
என் வானிலொரு சந்திரனையும் கண்டோம்
கதைப்பதற்கு இருந்த எல்லாச் சொற்களும்
கண்களிலேயே தேங்கிடக் கண்டோம்
அன்றும்
தலை திருப்பி நான் பார்க்கும் கணம் வரை காத்திருந்து
புன்னகையை உதடுகளில் மறைத்து
ஏதோ ஒரு இராகத்தை மீட்டிய படியே வேகம் கூட்டிச் சென்றாய்

அன்பு பொங்கிப் பிரவகித்த அபூர்வ நாட்களில்
நிழல் போலப்
பிரிவைச் சொல்லிப் பின் வந்தது காலம்

நான் வரச் சாத்தியமற்ற இடங்களில் நீயும்
நீ வரத் தேவையற்ற இடங்களில் நானும்


வாழ்வின் விதிமுறைகள்
எனதுலகையும் உனதுலகையும் வேறு பிரித்த வேளையில்
விடைபெற்றோம்
ஒன்றித்துப் பறந்த வானத்தையிழந்தோம்
இறுதியாக அன்று தான் அழகாகச் சிரித்தோம்

எனது சூரியனும் தனித்துப் போயிற்று
உனது சந்திரனும் தனித்தே போயிற்று

ஃபஹீமாஜஹான்

பரப்பிவைக்கப் பட்டிருக்கும் பொருட்களெதிலும்
பார்வையைச் செலுத்தாமல்
பாதிமூடப்பட்டுப் பூட்டுடன் தொங்கும்
விசாலமான கதவினை
பார்த்துக் கொண்டிருக்கிறாள்
கடைக்குப் போன சிறுமி

தெருவோரம்
கால் நீட்டியமர்ந்த வண்ணம்
சேகரித்து வந்த
உபயோகமற்ற பொருட்கள் நிரம்பி வழியும்
பொதிகளையே
வெறித்தபடி கிடக்கிறாள்
சிந்தனை பிசகிய மூதாட்டி


ஓடிச் சென்று ஏறிக்கொண்ட
பையன்களை உள்வாங்கி
விரைகிறது பேரூந்து
ஊன்றுகோலுடன் நெடுநேரம் காத்திருந்த
மாற்றுவலுவுள்ள மனிதனை
அந்தத் தரிப்பிடத்தில் விட்டுவிட்டு

ஃபஹீமாஜஹான்
2007