ஓர் அரசியல்
ஓர் அவ நம்பிக்கை
அகதியாக உனை வெளியேற்றியது
தீராத் துயரம்
பளுமிக்க தனிமை
நெடும் பெரு மூச்சு
உன்னிடம் தேங்கிக் கிடக்கிறது
துரோகத்தின் பழிச் சொல்லும்
மரணத்தின் தீர்ப்பும்
அநியாயமாக உனைப் பின் தொடர்கிறது
கொலையுண்டவர்களை
நீள் வரிசையில் கிடத்தி
நீயும் நிலவும் காவலிருந்த இரவில்
தேசத்தின் மீதிருந்த
இறுதி நம்பிக்கையையும்தொலைத்திருந்தாய்
அலைகளில் தத்தளிக்கும் படகில்-நீ
தப்பித்து ஏறிய இருளில்
எல்லா அடையாளங்களையும்
அழித்திருந்தாய்
இன்று..
நீ அஞ்சிய நரகமொன்றை நோக்கி
நகர்த்தப்பட்டுள்ளாய்
அபயம் தேடித் தவித்த
உன் இறுதிச் சொற்கள்
எனது அறையெங்கும்
எதிரொலித்தபடியழைகின்ற இந்நாளில்
நம்பிக்கையும் ஆறுதலும் தரக்கூடிய
எல்லாச் சொற்களையும் நானிழந்து நிற்கிறேன்
7 comments:
தீராத் துயரம்
பளுமிக்க தனிமை
நெடும் பெரு மூச்சு
உன்னிடம் தேங்கிக் கிடக்கிறது
எனக்கான கவிதையாய் எண்ணச்செய்கிறது. முற்றுப்பெறாச் சோகமும், மூடிக்கிடக்கும் இருளறையின் தனிமையும் , நுரையீரல் நிரப்பி நகரும் நீள்நெடும் மூச்சுக்களும் இப்படித் தேங்கிக் கிடக்க இயல்பாய்ச் சுவாசிப்பது எவ்வாறு?
அழகான வரிகள்.அடிக்கடி எழுதுங்கள்.மிக நீண்ட நாளைக்குப்பின் ஒரு பதிவு.இனிமேல் இடைவெளி வேண்டாம்.
ம்
நன்றி ரிஷான்.
"தீராத் துயரம்
பளுமிக்க தனிமை
நெடும் பெரு மூச்சு
உன்னிடம் தேங்கிக் கிடக்கிறது"
இந்த வரிகளின் வலியை நீங்கள் அனுபவத்தில் அறிந்திருக்கிறீர்கள்.
இக்கவிதையில் உள்ள எல்லாவரிகளுக்கும் பாத்திரமானவனின் வலி மிக மோசமானது.
வேறு வழிதெரியாமல் பிதற்றிய வரிகள் இவை.வேறென்ன சொல்ல?
வாங்க முபாரக்
மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வந்து மிக நீளமாகவே எழுதி இருக்கிறீர்கள்.
இவ்வளவு....நேரமெடுத்து எழுதியதற்கு மிக்க நன்றி :)
அஸ்ஸலாமு அலைக்கும் பஹிமா..
தம்பிக்கு மாத்திரமல்ல எனது உம்மா+வாப்பாவின் குடும்பங்களுக்கும் இதுதான் விதியாகிவிட்டது.என்ன செய்யமுடியும் என்ற மெளனமான நிலைப்பாடே இந்த வலிகளை அதிகரிக்க காரணம். ஆனால் யாரும் இந்த வலிகளை அழித்துவிட இன்னும் முயலவில்லயே.. அனைத்து சமாதான+யுத்த நடவடிக்கைகளுக்கும் பின்னால் வணிகம் தாராளமாக, செகுசாக அமர்ந்து இருக்கிறது. இந்த வணிகம் இருக்கும் வரை வெளியேற்றம்+அகதி+அவலம்+ஏமாற்றப்படுதல் என்பவையும் அவையுடன் இணைந்த துணைக்காரணிகளும் இருக்கதான் போகிறது. இவையற்ற உலகம் இல்லயா என்ற கேள்விக்கு என்ன பதில்...
வஅலைக்குமுஸ்ஸலாம்
வாருங்கள் பர்ஸான்.
வடக்கு, கிழக்கில் பிறந்தவர்களுக்கும் வாழ்பவர்களுக்கும் விதிக்கப் பட்டிருக்கும் சாபம் இது.
'சமாதான+யுத்த நடவடிக்கைகளுக்கும் பின்னால் வணிகம் தாராளமாக, செகுசாக அமர்ந்து இருக்கிறது. இந்த வணிகம் இருக்கும் வரை வெளியேற்றம்+அகதி+அவலம்+ஏமாற்றப்படுதல் என்பவையும் அவையுடன் இணைந்த துணைக்காரணிகளும் இருக்கதான் போகிறது'
உண்மை தான் பர்ஸான்.
துயரப் படும் மக்களின் வலிகளை விபரிக்க எங்களிடம் வார்த்தைகள் இல்லை.துயரத்தில் நாமும் கல்லாகி நிற்பதைத் தவிர.வலுவற்ற மனிதர்கள் மலையத்தனை துயரங்களையும் சுமந்தலைய அவர்களை வீதியில் விட்ட மனிதர்களோ.....ராஜமரியாதைகளோடு
அன்புடன்
பஹீமாஜஹான்
.
//நம்பிக்கையும் ஆறுதலும் தரக்கூடிய
எல்லாச் சொற்களையும் நானிழந்து நிற்கிறேன்//
இந்த உணர்வு ரொம்பக் கொடூரமானது, பஹீமா :(
//முற்றுப்பெறாச் சோகமும், மூடிக்கிடக்கும் இருளறையின் தனிமையும் , நுரையீரல் நிரப்பி நகரும் நீள்நெடும் மூச்சுக்களும் இப்படித் தேங்கிக் கிடக்க இயல்பாய்ச் சுவாசிப்பது எவ்வாறு?//
கவிதைக்குக் கவிதைதானே சகோதரனாக முடியும்? :)
நீண்டு வரும் பெருமூச்சு, தனிமையைக் கிழித்து, துயரத்தை எரித்து, தென்றலாகி தாலாட்டட்டும், சீக்கிரத்தில்...
Post a Comment