தூர தேசப் பறவையொன்று
தங்கிச் சென்ற மரம்
மீளவும்
அந்தப் பறவைக்காகக்
காத்துக் கிடக்கிறது
தன் கிளைகள் எறிந்து தேடும்
வான் பரப்பில் பறவை
அதன் பாடலைப்
பதித்துச் செல்லவில்லை.
வேர்கள் ஊர்ந்து பரவும் மண்ணில்
அது
எந்த நிழலையும்
விட்டுச் செல்லவும் இல்லை
மலைகளிடமோ நதிகளிடமோ
பறவை தனது
பயணப்பாதை பற்றிய
செய்தி எதனையும்
பகன்றிடவே இல்லை
சூரிய சந்திரரும்
தாரகைக் கூட்டங்களும்
குருவியின் சேதிகளை
உரைத்திட மொழியின்றி மறையும்
வேர்களும் கிளைகளும்
நீளமுடியாமலொரு பெருங்கடல்
மெளனத்தில் உறைந்த
மரத்தைச் சூழ்ந்திருந்து
ஆர்ப்பரிக்கிறது நிதமும்
பஹீமாஜஹான்
(நன்றி:புதியபார்வை)
22 comments:
பெண்மொழியில் எழுதப்பட்டுள்ள கவிதையாகக் கொள்ளலாம்.ஒரு பெருவிருட்சத்தை பெண்ணுக்கு ஒப்பிட்டுக் கவிதை சொல்வது உலகிலேயே இதுவே முதன்முறை என எண்ணுகிறேன்.
தூர தேசப் பறவையொன்று
தங்கிச் சென்ற மரம்
மீளவும்
அந்தப் பறவைக்காகக்
காத்துக் கிடக்கிறது
தனது கிளைகளில் வசந்தங்கள் பூத்திருந்த அதன் காதல் காலத்தை நினைவாய்ச் சொல்கின்றன இவ்வரிகள்..
தன் கிளைகள் எறிந்து தேடும்
வான் பரப்பில் பறவை
அதன் பாடலைப்
பதித்துச் செல்லவில்லை.
வேர்கள் ஊர்ந்து பரவும் மண்ணில்
அது
எந்த நிழலையும்
விட்டுச் செல்லவும் இல்லை
மலைகளிடமோ நதிகளிடமோ
பறவை தனது
பயணப்பாதை பற்றிய
செய்தி எதனையும்
பகன்றிடவே இல்லை
பிரிந்து சென்ற பறவை ஆணை ஒப்பிடுகிறது.தனது ஆதாரங்களெதனையும் விட்டுச் செல்லாப் பறவை குறித்த காதல் துயர் நிறைந்த அழகிய கவிதை இது..
வேர்களும் கிளைகளும்
நீளமுடியாமலொரு பெருங்கடல்
மெளனத்தில் உறைந்த
மரத்தைச் சூழ்ந்திருந்து
ஆர்ப்பரிக்கிறது நிதமும்
காலங்காலமாய் பெண் சமூகத்தைச் சூழ்ந்திருக்கும் அழிக்கவியலா மௌனத்தையும்,அசைக்கவியலாப் பெருந்துயரத்தையும் முழுமையாய்ச் சொல்கின்றன இவ்வரிகள்..!
அன்பின் ரிஷான்
உங்கள் கருத்துக்கு நன்றி.
காதலைச் சொல்லும் கவிதை தான்.
இன்னும் பெண் மண்ணில் வேர் பிடித்த மரமாகத் தானே வாழ வேண்டியுள்ளது :(
அஸ்ஸலாமு அலைக்கும் பஹிமா,
ஒரு மிகப் பெரிய அனுபவத்தினையும் அதன் வேதனை தரும் பொழுதினையும் சில சொற்களில் கூறிவிட்டீர்கள். தங்கிச்சென்ற பறவைக்காக காத்துக்கிடப்பதும் இன்பமல்லவா..? என்றாலும் அதன் வலிகளை எப்படி தாங்குகிறார்களோ தெரியவில்லை.
மனிதப் படைப்புகளிற்கு விதிக்கப்பட்ட அதிசய செயற்பாடுகளில் மனதின் ஆட்டம் இன்னும் விசித்திரமாகவே இருக்கிறது.இன்னொருத்தரிடம் மன இயங்கியல் கதைத்துவிட்டு நாமே அதற்குள் விதிக்கப்படுகிறோமல்லவா.? மனம் இன்பம் அடைவது போல அது அடையும் துன்பம், வலிகளை வரிசைப்படுத்த நிச்சயமாக எந்த முறைசார்ந்த அமைப்பாக்கமும் இல்லைதானே..
பஹிமா உங்கள் கணிதவியலில் மனதின் எண்ணங்க் கோலங்களை ஆராய்ந்து அதனை வகைப்படுத்த ஏதாவது வழியுண்டா?
சில பறவைகள் மலைகளிடம் நதிகளிடம் பயணப்பாதளை சொல்வதே இல்லை,இப்படி ஒரு நண்பனல்ல பல தோழர்கள் பறந்தேவிட்டார்கள். அவரிகளைப்பற்றி எதுவும் தெரியாவிட்டாலூம் சில காலமாவது தங்கிச்செல்ல நாம் இடம் கொடுத்துள்ளோம் தானே அது போதும். இன்னும் மெளனதுக்குள் புதைந்து கிடக்காமல் வெளிவருவோம்.
எம்.ரிஷான் ஷெரிப் பார்ப்பது போல் பார்த்தாலும் ஒரு பெண்னுடைய படைப்பின் மீது ஏன் காதல் பார்வை முன் வைக்கப்பட வேண்டும். இன்னும் அந்த பயங்கர நிலைகள் மாறவில்லை போலவே தெரிகிறது.
-------------
"சிறந்தது", "நல்லது", "அருமையானது" என்பவையும் அவற்றின் எதிர்பதமும் தரும் ""மதீப்பீடு""" என்ற அதிகாரச் சொல்லின் மீதுள்ள அச்சம் காரணமாக எதைப்பற்றியும் இறுதி வார்த்தை கூறமுடியாதுள்ளது. எனினும் எதிர்பதம் கொண்டதாக இருந்தாலும் கூட "அழகாக" இருக்கிறது என்று கூறலாம்தானே பஹிமா..
இன்னும் உரையாடலாம் இதைவிட பலமாக..
www.farzanpirathihal.blogspot.com
zanfar.myzar@gmail.com
வ.ஸலாம் பர்ஸான்
வாருங்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அதிக வலிகளை நீங்களும் தாங்கி வாழ்வதால் இன்னொரு மனதின் அனுபவத்துடன் விரைவில் ஒன்றித்துப் போவது சாத்தியமாகியுள்ளது.
(இன்னொருத்தரிடம் மன இயங்கியல் கதைத்துவிட்டு நாமே அதற்குள் விதிக்கப்படுகிறோமல்லவா.? )
ஆமாம் .நம்மீது விதிக்கப் பட்டவற்றினின்றும் நம்மால் மீள முடியாதுள்ளது தான்.
(பஹிமா உங்கள் கணிதவியலில் மனதின் எண்ணங்க் கோலங்களை ஆராய்ந்து அதனை வகைப்படுத்த ஏதாவது வழியுண்டா?)
அப்படி ஏதாவது இருந்திருந்தால் கணித மேதை உமர்கையாம் அதைச் செய்திருப்பார்.
"எழுதிச் செல்லும் விதியின் கை
எழுதி எழுதி மேற் செல்லும்
தொழுது கெஞ்சி நின்றாலும்
சூழ்ச்சி பலவும் செய்தாலும்
வழுவிப் பின்னால் நீங்கியொரு
வார்த்தையேனும் மாற்றிடுமோ
அழுத கண்ணீராறெல்லாம்
அதிலோர் எழுத்தை அழித்திடுமோ?"
என்று பாடத் தானே அவராலும் முடிந்தது.
பர்ஸான் உங்களிடம் நிறைய ஆற்றல் உள்ளது.உங்களிடமிருந்து எனது கவிதைகள் மீதான
பாராட்டுக்களை மட்டுமல்ல எதிர்வினைகளையும் வரவேற்கிறேன்.
உங்களிடமிருந்து எனது கவிதைகள் மீதான
பாராட்டுக்களை மட்டுமல்ல எதிர்வினைகளையும் வரவேற்கிறேன்.
எழுந்து வாருங்கள்...
பாராட்டுக்களை முன்வைப்பது அதிக பிரசங்கித்தனமல்லவா?அது சிறிய கொலையும் கூட தோழரே..
உணர்வுகளின் மீது எதிர்வினையாற்றல் எவ்வாறு சாத்தியப்படும்? அந்த பொழுதுகள் உங்களுக்கே சொந்தமானதல்லவா?.
ஆனால் அரசியல், பொதுவிடயம் என்று வாருங்கள் மூக்கு வரை மோதிப்பார்ப்போம்.
www.farzanpirathihal.blogspot.com
எல்லா நேரங்களிலும் நம் முழு உணர்வும் கவிதையாகாது.அத்தகைய ஒரு பூரணத்தை இந்தக் கவிதை கொண்டிருப்பதால்தான் அது நம்மில் இந்தளவு தூரத்துக்கு செயற்பட்டுக் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன்.
//காலங்காலமாய் பெண் சமூகத்தைச் சூழ்ந்திருக்கும் அழிக்கவியலா மௌனத்தையும்,அசைக்கவியலாப் பெருந்துயரத்தையும் முழுமையாய்ச் சொல்கின்றன இவ்வரிகள்..!//
இந்தக் கவிதை மீதான இத்தகைய கருத்தானது ஒரு பெண்ணின் படைப்பின் மீது வழமையாக எல்லோரும் செய்யும் மேதாவித்தனமான வெறும் விமர்னமாகவே எனக்குப்படுகிறது.
//"சிறந்தது", "நல்லது", "அருமையானது" என்பவையும் அவற்றின் எதிர்பதமும் தரும் ""மதீப்பீடு""" என்ற அதிகாரச் சொல்லின் மீதுள்ள அச்சம் காரணமாக எதைப்பற்றியும் இறுதி வார்த்தை கூறமுடியாதுள்ளது.//
""மதீப்பீடு""" என்பதை அதிகாரத்தின் மொழிக்கு மட்டுமே உரியதானதாக பர்சான் முடிவெடுத்துக் கொண்டதற்கான நியாயம் என்னவென்பதுதான் புரியாமலிருக்கிறது.
உங்கள் நூல் வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள் பஹீமாஜஹான்.
பர்ஸான்
"உணர்வுகளின் மீது எதிர்வினையாற்றல் எவ்வாறு சாத்தியப்படும்? அந்த பொழுதுகள் உங்களுக்கே சொந்தமானதல்லவா?."
கவிதையின் இயங்கு தளம் குறித்தே சொன்னேன்.
"ஆனால் அரசியல், பொதுவிடயம் என்று வாருங்கள் மூக்கு வரை மோதிப்பார்ப்போம்."
மூக்குடைபடும் வேலையெல்லாம் எனக்குச் சரிப்பட்டுவராது பர்ஸான் :)
உங்கள் கருத்துக்கு நன்றி.
வாருங்கள் அசரீரி
நீண்ட நாட்களின் பிறகு...
//காலங்காலமாய் பெண் சமூகத்தைச் சூழ்ந்திருக்கும் அழிக்கவியலா மௌனத்தையும்,அசைக்கவியலாப் பெருந்துயரத்தையும் முழுமையாய்ச் சொல்கின்றன இவ்வரிகள்..!//
இந்தக் கவிதை மீதான இத்தகைய கருத்தானது ஒரு பெண்ணின் படைப்பின் மீது வழமையாக எல்லோரும் செய்யும் மேதாவித்தனமான வெறும் விமர்னமாகவே எனக்குப்படுகிறது.
இதற்கான பதிலை ரிஷான் தான் சொல்லவேண்டும்
(அப்படியா ரிஷான்?)
""மதீப்பீடு""" என்பதை அதிகாரத்தின் மொழிக்கு மட்டுமே உரியதானதாக பர்சான் முடிவெடுத்துக் கொண்டதற்கான நியாயம் என்னவென்பதுதான் புரியாமலிருக்கிறது."
பர்ஸான் மோதிப் பார்ப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது :)
"உங்கள் நூல் வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள் பஹீமாஜஹான்."
நன்றி அசரீரி.
//காலங்காலமாய் பெண் சமூகத்தைச் சூழ்ந்திருக்கும் அழிக்கவியலா மௌனத்தையும்,அசைக்கவியலாப் பெருந்துயரத்தையும் முழுமையாய்ச் சொல்கின்றன இவ்வரிகள்..!//
///இந்தக் கவிதை மீதான இத்தகைய கருத்தானது ஒரு பெண்ணின் படைப்பின் மீது வழமையாக எல்லோரும் செய்யும் மேதாவித்தனமான வெறும் விமர்னமாகவே எனக்குப்படுகிறது.///
இல்லவே இல்லை அசரீரி.
இங்கு எழுதியது யாரெனப் பார்ப்பதை விட படைப்பை மட்டுமே பார்க்கலாமே.ஒரு பெரு விருட்சத்தை பெண்ணுக்கு இணையாக்கிய மொழியில் கவிதை சொல்லப்பட்டிருப்பதை ஆரம்பக் கருத்தினிலேயே சொல்லியிருக்கிறேன்.
வேர்களும் கிளைகளும்
நீளமுடியாமலொரு பெருங்கடல்
மெளனத்தில் உறைந்த
மரத்தைச் சூழ்ந்திருந்து
ஆர்ப்பரிக்கிறது நிதமும்
நீங்களே சொல்லுங்கள்.சமூகத்தில் எந்தத் துணைகளுமற்று தனித் தீவாய் ஒரு பெண் வாழ்ந்திட முடியுமா?
அவள் மௌனத்தை ஆடையாக்கி எவர்க்கும் தொந்தரவின்றி தன் பாட்டில் வாழ்ந்தாலும் அலையடித்து ஆர்ப்பரிக்கும் பெருங்கடலாய் நம் சமூகம்.
அது வேறு யாரோவல்ல அசரீரி.
நீங்களும்,நானும் கூடத்தான்.
இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் காலங்காலமாய் அவளுகளைச் சூழ்ந்திருக்கும் மௌனங்களை அழிக்கவியலாததாகவும், பெருந்துயரங்களை அசைக்க முடியாததாகவும் ஏற்றுக் கொண்டதைச் சொல்லி ஏமாற்றியே நம் இலக்கியங்களைக் கடத்தப் போகிறோம் ரிஷான்? //அது வேறு யாரோவல்ல அசரீரி.
நீங்களும்,நானும் கூடத்தான்.// அதை நாமே ஏற்றுக் கொள்கிறோம் என்பதுதான் வேதனை.
அதைத்தாண்டிய அடுத்த நிலையிலிருந்துதான் நாம் இயங்கவே தொடங்க வேண்டும் என்று நினைக்கிறேன்.அதனால்தான் இப்படியொரு கருத்தைச் சொன்னேன்
\\இங்கு எழுதியது யாரெனப் பார்ப்பதை விட\\ அதை யார் எழுதியிருப்பினும் சரியே..
//சமூகத்தில் எந்தத் துணைகளுமற்று தனித் தீவாய் ஒரு பெண் வாழ்ந்திட முடியுமா?//
இந்தக் கேள்வி மிகவும் நியாயமானது ரிஷான் இதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
என்னைப் பொறுத்த வரை இது ஒரு பெண்மொழிக் கவிதை என்பதில் பெருமளவு ஏற்பில்லை.
ஒரு பெண்ணின் முழுமையை வெளிக் கொண்டுவர அவள் அவளது படைப்பு எந்தக் கொள்கையின் பின்னாலும்தான் வரவேண்டும் என்பதில்லை, அது பெண்ணியம் என்றாலும் சரி பெண்மொழி என்றாலும் சரி.
அப்படி ஒன்றின் விரலைப்பிடித்துக் கொண்டு வழிதெரியாமல் பின்னால் வந்த ஒரு வெறும் சட்டகக் கவிதையாக இந்தக் கவிதையுமில்லை.
அப்படியிருந்தும் அதற்கப்பால் நின்று நம்மைப் பேச வைக்கிறதல்லவா...
ரிஷான்
"அவள் மௌனத்தை ஆடையாக்கி எவர்க்கும் தொந்தரவின்றி தன் பாட்டில் வாழ்ந்தாலும் அலையடித்து ஆர்ப்பரிக்கும் பெருங்கடலாய் நம் சமூகம்.
அது வேறு யாரோவல்ல அசரீரி.
நீங்களும்,நானும் கூடத்தான்."
இப்படியாகச் சிந்திக்கக் கூடியதாக வீட்டுக்கு ஒரு ஒரு சகோதரன் இல்லை ஊருக்கு ஒரு சகோதரன் இருந்தாலே போதும்
பஹீமா ஜஹானின் வலையோலையில்தான் உங்களை முதன் முதலாக சந்தித்தேன் (வேற யாரோ எண்டு சந்தேகப்படுவது போல தெரிகிறது!!)
எனது வலையோலைக்கு வரலாமே..
அசரீரி
"ஒரு பெண்ணின் முழுமையை வெளிக் கொண்டுவர அவள் அவளது படைப்பு எந்தக் கொள்கையின் பின்னாலும்தான் வரவேண்டும் என்பதில்லை,"
சரியாகச் சொன்னீர்கள்.
உங்கள் கருத்தை நான் ஆதரிக்கிறேன்.
//இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் காலங்காலமாய் அவளுகளைச் சூழ்ந்திருக்கும் மௌனங்களை அழிக்கவியலாததாகவும், பெருந்துயரங்களை அசைக்க முடியாததாகவும் ஏற்றுக் கொண்டதைச் சொல்லி ஏமாற்றியே நம் இலக்கியங்களைக் கடத்தப் போகிறோம் ரிஷான்? //
இதுவரைக்கும் எந்த இலக்கியம் பெண்களின் மனத்துயரை முழுமையாக எடுத்துரைத்திருக்கிறது எனக் கூற முடியுமா அசரீரி...?
இப்பொழுதுதான் அவர்களாகவே கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர ஆரம்பித்திருக்கிறார்கள்.
அவர்கள் கடந்து வந்த துயரத்தையும்,கன்னங்களில் காய்ந்து போன கண்ணீரையும் எழூதட்டுமே.
இதில் என்ன ஏமாற்றுதல்கள்?பாதிப்புகள்?
பெண்கள் காதலையும்,காமத்தையும் மட்டுமே தான் தன்மொழியில் எழுத வேண்டுமெனக் கட்டாயமிருக்கிறதா என்ன?
அவர்களது பேனையை அவர்களது விரல்களிலேயே விட்டுவிடுவோம்.எழுத்துக்கள் எந்தத் தடையுமின்றி சுதந்திரமாக வெளிவரட்டும்.
அவர்களது எழுத்துக்களின் வீரியம் தாக்கிப் புது மொழி உருவானதன் பிற்பாடு அசரீரி,அன்று கேளுங்கள் இதை...
"இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் காலங்காலமாய் அவளுகளைச் சூழ்ந்திருக்கும் மௌனங்களை அழிக்கவியலாததாகவும், பெருந்துயரங்களை அசைக்க முடியாததாகவும் ஏற்றுக் கொண்டதைச் சொல்லி ஏமாற்றியே நம் இலக்கியங்களைக் கடத்தப் போகிறோம் ரிஷான்?"
//அது வேறு யாரோவல்ல அசரீரி.
நீங்களும்,நானும் கூடத்தான்.//
என்பதனால்தான் உங்களிடமும் என்னிடமும் அந்தக் கேள்வியை நான் கேட்டேன் ரிஷான்.
//அவர்களது எழுத்துக்களின் வீரியம் தாக்கிப் புது மொழி உருவானதன் பிற்பாடு..//
பெண்ணுக்கான மொழி உருவாக்கமொன்றிலிருந்துதான் அவளின் குரல் தனியாக ஒலிக்கத்தொடங்குவது என்பது இயற்கைக்கு முரணானது என நினைக்கிறேன்.
அப்படியொன்றுக்காகப் போராட இப்போதிருந்துதான் ஒன்றைத் தொடங்குவது என்பது பெண்ணுக்கென இயங்கிவந்திருக்கின்ற வரலாற்றின் மறுபாதியையே அர்த்தமில்லாமல் செய்யும் ஒன்றாகிவிடுமே..
அதனால்தான் இந்தக் கவிதையை "பெண்மொழி" என்று ஏதோ நடக்கப் பழகும் ஆட்டுக்குட்டியைப் பார்ப்பது போல கூறியதோடு நான் முரண்பட்டேன்
பெண்ணுக்கான புதிய ஒரு மொழியின் உருவாக்கமல்ல ரிஷான் இங்கு அவசியப்படுவது..
அப்படிச்சொல்வது முழுமொழியையும் ஆணுக்கு மட்டுமானதாய் உரித்தெடுக்கின்ற அதிகாரமாகிவிடும்.
//இப்பொழுதுதான் அவர்களாகவே கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர ஆரம்பித்திருக்கிறார்கள்.//
மொழியின் மீது நீங்கள் கொண்டுள்ள மிதமிஞ்சிய அதிகாரமாகவும் இதைப் பார்க்க முடியுமே ரிஷான்...!
அவர்களுக்குரிய சமாந்தர உரிமையையும் நீங்களே எடுத்து ஆண்டுவருவது போல இக்கருத்து தெரியவில்லையா??
நான் நினைக்கிறேன் மௌனப்பட்டிருக்கும், மௌனப்படுத்தப்பட்டிருக்கும் பெண்ணின் மொழியின் மீதான அதிகாரத்தைக் கட்டவிழ்ப்பதுதான் பெண்ணியத்தை வீரியப்படுத்துமேயொழிய,
மாறான ஒரு வெறும் வர்க்க எதிர்ப்பு செயற்பாடாக மாறுமாக இருந்தால் அது கம்யூனிஸம் போல வெறும் எழுத்தளவோடு நின்று போகும், அத்தோடு யதார்த்தத்திலிருந்து விலகி ஒரு சட்டகத்துக்குள்ளேயே சுற்றுவதாகிவிடும்.
அத்தகைய தீவிரத்தின் விளைவு ஆண்என்பவனின் மீதான முழு மொத்த எதிர்ப்புச் செயற்பாடுதான் பெண்ணிலைவாதத்தின் சாரம் எனச்சொல்லும் பெண் படைப்பாளிகள் பலரை உருவாக்கிவிட்டிருக்கிறது.., அதன் இன்னொரு படி மேலே சென்று விபச்சாரத்திற்கும் பெண்ணுரிமைச்சாயம் பூசியிருக்கிறது. (இன்னும் பச்சையாக பலதைச் சொல்ல முடியும் ஒரு சகோதரியின் முன்னால் அது நாகரிகமாயிருக்காது என நினைக்கிறேன்).
ஆக மொத்தத்தில் ஆணின் எழுத்துக்கு சமாந்தரமாகத் தனக்கிருக்கும் மொழி நிலையை நிறுவாமல் தடுக்கும் மௌனத்தையே பெண் கட்டவிழ்த்தாக வேண்டியிருக்கிறது. அந்தச்சமாந்தரத்தை ஆண் ஏற்றேயாக வேண்டியிருக்கிறது.
ரிஷான்,அசரீரி
உங்கள் இருவருடைய விவாதமும் சிந்தனையின் புதிய கதவுகளைத் திறக்கின்றன.
"பெண்கள் காதலையும்,காமத்தையும் மட்டுமே தான் தன்மொழியில் எழுத வேண்டுமெனக் கட்டாயமிருக்கிறதா என்ன?"
அது தான் பெண் மொழி என்று சிலர் புரிந்து வைத்துக் கொண்டு எழுதுவதையும் சில ஆண்களால் அவர்களின் எழுத்து உற்சாகப் படுத்தப் படுவதையும் காண முடிகிறது.
இது பெண் எழுத்துக்கான மிகப் பெரும் கெளரவம் என்று சம்பந்தப்பட்ட பெண்கள் கருதினால் அதைவிடவும் மடமை வேறெதுவாக இருக்கமுடியும்? பெண் எழுத்துக்கான மற்றுமொரு படு குழியாகவே நான் இதனைக் காண்கிறேன்.
"பெண்ணுக்கான மொழி உருவாக்கமொன்றிலிருந்துதான் அவளின் குரல் தனியாக ஒலிக்கத்தொடங்குவது என்பது இயற்கைக்கு முரணானது என நினைக்கிறேன்.
அப்படியொன்றுக்காகப் போராட இப்போதிருந்துதான் ஒன்றைத் தொடங்குவது என்பது பெண்ணுக்கென இயங்கிவந்திருக்கின்ற வரலாற்றின் மறுபாதியையே அர்த்தமில்லாமல் செய்யும் ஒன்றாகிவிடுமே.."
ஆமாம் அசரீரி.
அன்றைய பெண் இக்காலத்தைய பெண்ணை விடவும் அதிக ஆற்றல்களோடு இருந்திருக்கிறாள்.
நவீன நாகரிகம் வரலாற்றைத் மறக்கடித்துப் பெண்ணைப் பதுமையாக மாற்றிவைத்துள்ளது.
பெண் மிக மோசமாக ஏமாந்து போய் வாழ்கிறாள்-பெண் உரிமைவாதிகளின் சில தவறான வழி நடத்தல்களால் கூட.
//பெண் மிக மோசமாக ஏமாந்து போய் வாழ்கிறாள்-பெண் உரிமைவாதிகளின் சில தவறான வழி நடத்தல்களால் கூட.//
இந்த யதார்த்தத்தை உங்களைப் போல ஒரு பெண்ணிடமிருந்து கேட்கும் போது ஒரு நம்பிக்கை வருகிறது பஹீமாஜஹான்.
அசரீரி
"இந்த யதார்த்தத்தை உங்களைப் போல ஒரு பெண்ணிடமிருந்து கேட்கும் போது ஒரு நம்பிக்கை வருகிறது"
வாழ்வின் விழுமியங்களை நாசப்படுத்தும் படியான சுதந்திரங்கள் பெண்விடுதலைச் சிந்தனைகளாகுமா?
மேற்குலகில் தோல்வியுற்று கைவிடப் பட்ட சிந்தனைகளைக் கிழக்குலகு கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
Post a Comment