நோய்
காற்றில் திரிதலாகா
தண்ணீர் அலைதலாகா
ஓயந்திருக்க வேண்டுமன்றி ஓடிவிளையாடலாகா
காய்ச்சலின் உச்சகட்டத்தில்
டாக்டர் தாத்தாவின் கட்டளைகள் நீளும்
நாடு கொளுத்தும் ராசாவுக்கு நெருப்பெடுக்கும் மந்திரியாக
நின்றிருப்பாள் அருகே அன்னை
நிறைவேற்றவியலாக் கட்டளைகளைக் கேட்டவாறு
சின்னஞ் சிறுமி மௌனமாக அமர்ந்திருப்பேன்
ஆணை மீறல்
விளையாட்டும் முற்றமுமெனை
வந்தனங்கள் கூறியழைக்க
வயல் காற்றுலவும் வெளியெங்கும்
அலைந்து திரிவேன்
இசைவானதொரு தருணம் வாய்ப்பின்
காகித ஓடங்களை
வயலோர வாய்க்காலில்
மிதந்து போகவிட்டு மீள்வேன்
மருந்துண்ணும் வேளையதில்
பெரியம்மா, அண்ணன்மார்களெனும்
அயல்வீட்டு இராணுவமெனைக் கைப் பற்றிக்
கொண்டுவரும் அம்மாவினெதிரே
மருந்துண்ணல்
மாத்திரைத் துண்டொன்றையும் சீனியையும்
கரண்டியில் இட்டுக்
கரைத்தெடுத்துவரும் கொடுமை கண்டு
எனதழுகை உரக்கத் தொடங்கும்
கை, கால், தலையெனப் பற்றி
அசையவிடாது எனையமர்த்திச்
சூழ்ந்து நிற்கும் சக்கரவியூகம்
காவல் தேவதையாம் அம்மம்மாவையும்
தூர நிறுத்தி வைத்திருக்கும்
அக்கணத்தின் அதிகாரம்
தெரு முனைவையும் தாண்டி எனதார்ப்பாட்டம்
பாதையில் போவோரைத் திரட்டிவரும் வீட்டருகே
கசக்கும் பிசாசு வாய் நோக்கி வரும் போது
தாரை தாரையாய் வழிந்தோடக் கண்ணீர்
இறுக மூடிக் கொள்வேன் உதடுகளை
கடும் பிரயத்தனத்துடன் அம்மா
கரைசலை வாய்க்குள் இடச்
சிந்தியதும் உமிழ்ந்ததும் போக
ஒரு துளியை விழுங்கிய பின்
அனைத்துக்குமாக
ஆரம்பத்திலிருந்து அழத்தொடங்குவேன்
துயரிலிருந்து மீள்தல்
அப்போது வருமென் காவல் தேவதை
தூக்கி அணைத்திடுவாள்
வாய் கொப்பளிக்க வைத்துக்
கசந்த நாவில் வெல்லமிட்டு
ஆறாகப் பெருகுமென் கண்ணீர் துடைத்திடுவாள்
தோளிலே படுக்க வைத்துச்
சேலைத் தலைப்பைப் போர்வையாக்கித்
தோட்டமெங்கும் சுமந்தலைவாள்
கதைகள் நூறு சொல்லி
அழ வைத்தவர்களைப் பேசி
அழுகையை ஓய வைப்பாள்
நானுமொரு பறவையென
மாமரக் கிளைகளில் தத்திப் பாயும்
புள்ளினங்களில் இலயித்திருக்கையில்
மீண்டுமெனைப் படுக்கையில் கிடத்திக்
காவலிருப்பாள்
நோயிலிருந்து மீளும் நிகழ்காலம்
விழிகளைத் திறக்க முடியாத களைப்பும்
வலுவிழந்த உடலும் சற்றே தேறிட
எழுந்தமர்ந்துள்ளேன்
இளைத்த இவ்வந்தியில்
துடைத்தழித்திட முடியாமல்
நோயின் வலியைத் தாங்கி நிற்கும் முகத்தை
விசாரிக்க வருவோரிடமிருந்து
மறைப்பது பற்றிச் சிந்திக்கிறேன்
மின் கம்பியில் குந்தியவாறு
எனதறையையே பார்த்திருந்த வெண் பறவைக்கு
மரணத்தின் துர்க்குறிகள் கிட்டவில்லை
ஓய்வற்று உலன்றிடப் போகும்
நாளைய தினத்திலிருந்து
கசிந்து வருகிறது
நொந்த உடலுக்கான நஞ்சு
பஹீமாஜஹான்
3 comments:
பால்யத்தின் பருவங்களில் நோய்கண்டு வாய்கசக்கும் சிறுமியாகக் கவிதை.
அத்தனை மனிதருக்கும் இவ்வனுபவம் தவறாமல் வாய்த்திருக்கும்.
அம்மம்மாக்களின் அன்பும்,அவர்களது சேலை வாசங்களும் இன்னும் இனிய நினைவாய் நெஞ்சுக்குள் உறைந்திட அக்காலம் பொற்காலமென்போம்.
கவிதை அழகாகவும்,ஆழமாகவும் உள்ளது.இறுதிப் பகுதிதான் புரியவில்லை.அது நிகழ்காலத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா?இறந்த காலப் பால்யமா?
உங்கள் வருகைக்கு நன்றி ரிஷான்.
கவிதையின் இறுதிப் பகுதி நிகழ்காலத்தையே குறிக்கிறது.
நோய்மீண்டு செல்லும் போது காத்திருக்கும் வேலைப் பளு வலுவிழந்த உடலுக்கு நஞ்சைத் தானே புகட்டும்?
பஹீமா, என்னவாய் எழுதியுள்ளீர்கள்!!
இத்தகைய சின்ன விசயத்தையும் இவ்வளவு சுவாரஸ்யமாக எழுதமுடியும் எனக் காட்டியுள்ளீர்கள்..
நான் உங்கள் கவிதையிலிருந்து நிறைய கற்றுக்கொள்கிறேன்..
உங்கள் கவிதை வாசித்ததில் எனக்கும் ஒருமுறை காய்ச்சல் வரவேண்டும் போல ஆசையாய் உள்ளது.. :))
Post a Comment