நிழல் மரங்களற்றுச்
சூரியன் தவிதவிக்கும்
நெடுஞ்சாலையோரம்
வெய்யிலை
உதறி எறிந்தவாறு
நடக்கிறாள் மூதாட்டி
குதி கால்களால்
நெடுங்களைப்பை
நசுக்கித் தேய்த்தவாறு
காற்றைப் பின் தள்ளிக்
கைகளை வீசுகிறாள்
வெய்யில்
மிகப் பெரும் தண்டனையை
வழி நீளப் பரவவிட்டுள்ளது.
வேட்டை நாய் போல
அவள் முன்னே
ஓடிச் செல்கிறது நிழல்
பதிந்தெழும் ஒவ்வொரு சுவட்டிலும்
தேங்கி நடுநடுங்குகிறது
ஆதியிலிருந்து தொடரும் துயரம்.
பஹீமாஜஹான்
13 comments:
நீண்ட அனுபவத்தில் வெடிப்புக்கண்ட பாதங்களின் அடிச்சுவட்டில் தொடரும் ஆதித் துயர்.
கவிதை அருமை.
ஒவ்வொரு கவிதைக்கும் தவறாது பின்னூட்டமிடுகிறீர்கள்.
உங்கள் வருகைக்கு நன்றி ரிஷான்.
சிறப்பாக எழுதுகிறீர்கள்.அதனால்தான் பின்னூட்டங்கள் என்னிடமிருந்து தவறாது வருகின்றன... :)
தொடர்ந்து எழுதுங்கள்.
நண்பர் முபாரக் உங்களது ஒரு கடல் நீரூற்றி தந்தார். அதை படித்துக் கொண்டிருக்கிறேன். எளிய வர்த்தைகளில் துயரைச் சொல்லும் உங்கள் கவிதைகள் ஈர்ப்புடன் உள்ளன.
நிழல் மற்றும் வெயில் என்கிற முரணை பின்னிச் செல்லும் இக்கவிதை ஆதித்துயர் என்பதை துரத்திச் செல்லும் நிழல் என்கிற வேட்டை நாயாக முன்வைக்கிறது. பெண்ணுக்கு கையளிக்கப்படுவது நிழல்கள்தான். அந்த நிழல் வெயில் என்கிற தண்டனையிலிருந்து தப்பிச் செல்ல முனையும்போது அவளை விட்டு விலகி போய்க்கொண்டே உள்ளது. ஆதித்துயர் நுட்பமான கவிதை.
தலைப்பே அருமையாக உள்ளது.
அன்புடன்
ஜமாலன்.
வாருங்கள் ஜமாலன் அவர்களே.
"நண்பர் முபாரக் உங்களது ஒரு கடல் நீரூற்றி தந்தார்"
நண்பர் முபாரக் இற்குத் தொகுப்பு
கிடைத்திருப்பதும் உங்களுக்குத் தந்ததும் மகிழ்ச்சிக்குரிய விடயங்கள்.
(நாடு திரும்பும் வழியில் எங்கள் விமானநிலையத்தைக் கடந்து செல்லும் வேளையிலாவது அதைப் பற்றி அவர் சொல்லக் கூடும் :) )
"பெண்ணுக்கு கையளிக்கப்படுவது நிழல்கள்தான். அந்த நிழல் வெயில் என்கிற தண்டனையிலிருந்து தப்பிச் செல்ல முனையும்போது அவளை விட்டு விலகி போய்க்கொண்டே உள்ளது"
கவிதையின் நுட்பங்களைக் கண்டறிந்து சொல்லும் உங்கள் வருகைக்கு நன்றி.
பஹீமா..
இதனை பின்னூட்டமிடுவதிறகு அனுமதிக்கவும்.
மதீப்பீட்டு அதிகாரத்திற்கெதிரான Zero பதிவின் முன்னுரை
||“சிறந்தது” “நல்லது” “அருமையானது” என்பவையும் அவற்றின் எதிர்பதமும்
தரும் “மதீப்பீடு” என்ற அதிகாரச் சொல்லின் மீதுள்ள அச்சம் காரணமாக
எதைப்பற்றியும் இறுதி வார்த்தை கூறமுடியாதுள்ளது.|| என பஹீமா ஜஹானின் “தீவில் தனித்தமரம்” என்ற கவிதைக்கு பின்னூட்டமிடும் போது கூறியிருந்தேன். அதற்குப் பின் நண்பர் அசரீரி பஹீமாவின் கவிதைக்குப் பின்னூட்டமிட்டு போது | மதீப்பீடு என்பதை அதிகாரத்தின் மொழிக்கு மட்டுமே உரியதானதாக பர்சான் முடிவெடுத்துக் கொண்டதற்கான நியாயம் என்னவென்பதுதான் புரியாமலிருக்கின்றது | என்று எழுதியிருந்தார். பின்னர் பஹீமா இது தொடர்பாக கதைப்பதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் சொன்னார். மதீப்பீட்டு அதிகாரத்திற்கெதிரான Zero பதிவு எழுதப்பட இந்த விடயங்களே காரணமாகவிருந்தன. இரண்டு நண்பர்களிற்கும் எனதுலம் நன்றி தெரிவிக்கிறது. இதனுடன் அனைத்து நண்பர்களும் உரையாடமுடியும். தனித்த பிரதிகள் என்றிருப்பின் Email செய்யுங்கள். இல்லாதவிடத்தில் பின்னூட்டாய் இடுங்கள்.
Click
http://yenathulakam.blogspot.com
வாருங்கள் பர்ஸான்
உங்கள் கருத்தை மதிக்கிறேன்.
"சிறந்தது" "அருமையானது" இந்தப் பதங்கள் ஆரோக்கியமான விமர்சனத்துக்கு உதவப் போவதில்லை.
இன்றைய பெண்களின் கவிதை வெளி தொடர்பாகப் பலவித கருத்துக்கள் தெரிவிக்கப் படுகின்றன.அதிலும் சில ஆண்கள்அதைத் தீர்மானிக்கும் உரிமையும் தமக்கே உண்டென்ற அதிகாரத்துடன் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
பெண் தன் உடலைக் கொண்டாடுதல்,காமத்தைப் பாடுதல்,உடலின் இரகசியங்களைக் கண்டறிந்து கொடுத்தல் எனப் பலவித போதைகளில் சிக்குண்டு பெண்ணியம் என்ற பெயரில் கவிதைகளை எழுதுவது ஆரோக்கியமான போக்கென்று நான் கருதவில்லை.
இன்றைய எமது கவிதைகளின் இயங்குதளம் குறித்த ஆரோக்கியமான விவாதங்கள் தேவைப் படுகின்றன.எமது மூத்தவர்கள் எந்தக் கருத்தையும் முன்வைக்காமல் மெளனம் பூண்டு வாழ்கின்றனர்.
இந்தப் பதிவின் பக்கம் வரும் நண்பர்களின் உரையாடல்களை நான் வரவேற்கிறேன்.
//பெண் தன் உடலைக் கொண்டாடுதல்,காமத்தைப் பாடுதல்,உடலின் இரகசியங்களைக் கண்டறிந்து கொடுத்தல் எனப் பலவித போதைகளில் சிக்குண்டு பெண்ணியம் என்ற பெயரில் கவிதைகளை எழுதுவது ஆரோக்கியமான போக்கென்று நான் கருதவில்லை//
நண்பர் பஹிமாவிற்கு...
இதேபோன்ற வேறொரு இடத்திலும் நீங்கள் கருத்துக் கூறியுள்ளீர்கள். அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. பெண்ணியம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ள பல வார்த்தைகளில் ஒன்று என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. இன்று பெண்ணியம் என்பது எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு கோட்பாடாகத்தான் நான் கருதுகிறென். ஆண் எனகிற கட்டமைப்பே பெண்ணை மையமாக வைத்துதான் கட்டப்பட்டுள்ளது. அல்லது ஒரு உடலுக்கு ஆண் என்கிற அந்தஸ்த்தை அளிப்பது பெண்தான். நிற்க.
'பெண் தன் உடலைக் கொண்டாடுதல்,காமத்தைப் பாடுதல்,உடலின் இரகசியங்களைக் கண்டறிந்து கொடுத்தல்' என்பது அவசியமான ஒன்று. இவை பேசப்படவேண்டியவைதான். அதனை பெண்கள்தான் ஆண்களைவிட வலிமையாக பேசமுடியும். பேசுவதற்கு தகுதியானது தகுதியற்றது என்றெல்லாம் ஒன்றும் இல்லை. மொழிக்குள் வந்துவிட்ட எல்லாமே பேசப்பட்டவைதான், பேசக் கூடியவைதான். உடலைக் கொண்டாடுதல் என்பது இன்றைய அதிகாரத்தால் ஒடுக்கப்பட்டிருக்கும் நிலையில் அவசியமானதும்கூட. உடலை புணிதப்படுத்ததல் எப்படி தவறோ அதேபோல் உடலை அலட்சியப்டுத்துதல் இரண்டாந்தரமானதாக ஆக்குதலும் தவறுதான்.
காமம் என்பதும் உடலின் ரகசியங்களும் மதிப்பற்றதாக ஆக்கப்பட்டுள்ள ஒரு சமூகத்தில்தான் இதனை பேச வேண்டிய அவசியம் உள்ளது. இவை நாம்தான் பேச தயங்குகிறோமே தவிர பண்டைய சமூகங்களில் இவை பேசப்பட்டே வந்துள்ளன. சங்ககாலம் துவங்கி ஏன் கடுமையான பெண் ஒடுக்குமுறை உள்ளதாக சொல்லப்படும் இஸ்லாமிய சமூகங்களில் உருவான 1001அரேபிய இரவுகள் கதைகளில் கொண்டாடப்படாத உடல்களா? (ஒப்பீட்டளவில் இஸ்லாம் உடல்களை துறவறம் என்பதான புணித உடல்களாக கட்டமைப்பதில்லை. ஆனால், திருமணம் செய்து கொள்வதை கட்டாயப்படுத்துகிறது. திருமண்ம் என்பது உடலை ஒழுங்கமைப்பதற்கான மற்றொரு எந்திரம் என்பது உடல்குறித்த இஸ்லாமிய அரசியல் பற்றியது. அந்த விவாதம் இங்கு வேண்டாம்..) அல்லது கிறித்துவ மேலண்மை உள்ள மேற்கத்தியத்தில் உருவான டெக்கமரான் கதைகள் மற்றும் இந்து சமூகமாக இன்று சொல்லப்படம் இந்தியாவி்ல் உள்ள அஜந்தா துவங்கி காம சாஸ்திரம் கொக்கோகம் உள்ளிட்டவை எல்லாம் உடல்களை கொண்டாடுபவைதான்.
உடலை அசிங்கமானதாகவும் காமத்தை அறுவறுப்பானதாகவும் அதிகாரம் ஒதுக்கி அதனை ரகசியமானதாக ஆக்குவதன் மூலம் அதன் மீதான ஆர்வத்தை பெருக்குகிறது. அதிகாரத்தின் இந்த தொழில் நுட்பத்தை உடைத்தெறிய அதனை வெளிப்படுத்தி அதன் மீதான ரகசியங்களை அம்பப்படுத்துவது அவசியமானது. ஒரு உடலின் உட்செறிக்கப்பட்டுள்ள ஆற்றலை முறையாக கண்டறிவதற்கான களமே இல்லை. எனவே இவற்றை பேசுபொருளாக கொள்வது பெண்ணிய நொக்கில் ம்ட்டுமல்ல ஆரோக்கியமான சமூகத்திற்கே அடிப்படையானது. கவிஞரான நீங்கள் இதை கொஞ்சம் ஆழ்ந்து யோசித்துப் பாருங்குள். இது அறிவுரை அல்ல ஒரு ஆலொசனைதான்.
அன்புடன்
ஜமாலன்.
இப்டியானதொரு பின்னூட்டத்திற்கு பதிலளிப்பதை விடவும் வேறு பிரயோசனமாக செயற்படலாம் என்கின்ற யதார்த்தத்துக்கு அடுத்தபடியாக இக்கருத்தின் மீது மௌனம் சாதிப்பது இதை ஏற்றுக்கொணடதாக ஆகிவிடும் என்பதால் இதை சொல்லாம் என நினைக்கிறேன்.
சகோதரர் ஜமாலன் பெண்ணியம் என்ற எல்லைப்படுத்தப்பட்ட சடவாத சிந்தனையின் அதிகாரத்தை விட்டும் வெளியே வராத கவனத்துடன் இப்பின்னூட்டத்தை எழுதியிருக்கிறார்.
மிகத் தெளிவான திட்டமோ இலக்கோ இல்லாத சில சிந்தனைகள் பற்றிய தெளிவை, சில சந்தேக நிவர்த்திகளை அவற்றின் ஆதரவாளர்களின் எழுத்துப்பிரதிகளிலிருந்தே பெறமுடியும்.
பாசிசமும் அப்படிப் புரிந்து கொள்ளப்பட்டதுதான்.
அத்தகைய பெண்ணியம் என்று சொல்லப்படுவதன் மீதான சில கேள்விகளுக்கான பதில்களை நண்பர் ஜமாலனின் இப்பின்னூட்டத்திலிருந்தும் பெறமுடியுமானதாக இருக்கிறது.
பெண்ணியம் சார்ந்த எழுத்து என்பதன் இலக்கு எதை நேக்கியது?
அதன் தீவிர செயற்பாட்டின் விளைவால் உலக ஒழுங்கில் என்ன நிகழ்ந்திருக்கிறது??
ஒரு பெரும் கொள்கை முக்கியத்துவம் கொடுக்க முயலப்படும் இக் கொள்கையின் இறுதி அடைவு எதுவாக இருக்கப் போகிறது???
இக் கொள்கை வாதிகளான பெண்ணிலை வாதிகளின் வாழ்வு முறைமை, பெண்ணிலைவாதச் சிந்தனை தெரியாத அல்லது அதைப்பின்பற்றாதவர்களின வாழ்வொழுங்கிலிருந்தும் என்ன வகையில் உயர்ந்ததாகிறது????
உண்மையில் மேற்கிடம்
கடன்வாங்கப்பட்டு இன்றைய இலக்கியங்களில் பெரும் போராட்டத்துக்குரிய கொள்கை முக்கியத்துவத்துடன் செயற்பட வைப்பதற்கு முயற்சிக்கப்படும் இந்தப் பெண்ணியமானது மிகவும் முழுமையான ஒன்றின் சரிபாதிகளாக இருக்கும் ஆண் பெண் என்ற ஒன்றையொன்று முரண்பட்டு வாழ முடியாததான மனிதப்பிரிவுகளின் யதார்த்தம் பற்றிய எவ்வித அறிவோட்டமும் இல்லாத படி பெண்முதன்மையொன்றுக்கான போராட்டமாகவே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
குடும்பம், ஒழுங்கு என்வற்றின் சிதைவிலிருந்தே தனது சிந்தனைப் பருப்புகளை உலகில் வேக வைக்கமுடியும் என்ற மேற்கின் சதியை இப் பெண்ணிலைவாதம் தன்னையறியாமலேயே வெல்ல வைப்பதற்காகவே ஆண்மறுப்புச் சிந்தனையை தனது கொள்கைத் தோலாகப் போர்த்தியிருக்கிறது. இதைத்தான்
//ஆண் எனகிற கட்டமைப்பே பெண்ணை மையமாக வைத்துதான் கட்டப்பட்டுள்ளது. அல்லது ஒரு உடலுக்கு ஆண் என்கிற அந்தஸ்த்தை அளிப்பது பெண்தான்.//
என்பது உண்மைப்படுத்துகிறது.
இது பெண்ணுரிமைவாதமாக இல்லை பெண் முதன்மை வாதமாகவே வெளிப்படுகிறது.
இத்தகைய பெண்முதன்மையின் உச்சக்கட்டம்தான் சகோதரரை இத்தகைய கருத்துக்குள் கொண்டு வருகிறது
//பேசுவதற்கு தகுதியானது தகுதியற்றது என்றெல்லாம் ஒன்றும் இல்லை. மொழிக்குள் வந்துவிட்ட எல்லாமே பேசப்பட்டவைதான், பேசக் கூடியவைதான் //
நளினி ஜமீலா என்கின்ற பாலியல் தொழிலாளி (இவர் இந்தியாவில் பாலியல் தொழிலாளர் சங்கத் தலைவியும் தீவிர பெண்ணிலைவாதியும்) தனது சுயசரிதையை எழுதியிருக்கிறார்.
அவர் சுயசரிதை எழுதியதை நான் கவனத்தில் கொண்டுவரவில்லை மாறாக தன்னைப் போர்த்திக் கொள்ளவும் பெண்ணிலைவாதத்தைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்.
ஏனெனில் தன்னை நியாயப்படுத்த அப் புத்தகத்தில் அவர் சொல்லும் எந்தக்காரணமுமே அறிவுக்கு அப்பாற்பட்டது என்பது மட்டுமன்றி தான் அத்தீங்கிலிருந்து விடுபடக்கிடைத்த எந்தவொரு சந்தர்ப்பத்தையும் இச்சையால் அல்லது முறைகேடான காமத்தால் தட்டிவிடுவதையும் அவரே சொல்வது தீவிரமான பெண்ணெழுத்தின் விளைவை கவலைக்குள்ளாக்குகிறது. இதற்குக்காரணமும் மேலே குறித்தது போன்ற கருத்துநிலைகள் திறந்து விடும் எல்லை மீறலுக்கான பாதைகள்தான் என்பது மறுக்கமுடியாதது.
//ஒரு உடலின் உட்செறிக்கப்பட்டுள்ள ஆற்றலை முறையாக கண்டறிவதற்கான களமே இல்லை. எனவே இவற்றை பேசுபொருளாக கொள்வது பெண்ணிய நொக்கில் ம்ட்டுமல்ல ஆரோக்கியமான சமூகத்திற்கே அடிப்படையானது.//
மனிதத்திடம் ஒரு பெரும் ஒழுக்க அத்துமீறலைத்தான் பெண்ணியம் என்பது விரும்புகிறதா என்ற கேள்வியை என்ற கேள்வியைக் கேட்கவைப்பதோடு மட்டுமன்றி இத்தகையதொரு சமூக ஆரோக்கியம் எவ்வாறிருக்கும் என்பதை நகைப்புக்குள்ளாக்குகிறது, உண்மையில் ஜமாலன் ஒரு சமூகத்தின் ஆரோக்கியமான அடிப்படை என்பது அச்சமூகத்தை முற்போக்கானதாகத்தான் ஆக்கவேண்டுமேயொழிய அதை ஆடைகளில்லாத பிற்பேக்குக்குள் அழைத்துச் சென்றுவிடக்கூடாது, பெண்ணியத்தின் எல்லாவற்றையும் திறந்து காட்டச் சொல்லும் கொள்கை அப்படியொரு நிலைக்குள்தான் கொண்டு போய் விடும் போலிருக்கிறது.
இங்கே மனிதம் என்பதன் ஒழுங்கு நிலையை பெண்ணும் சரி ஆணும் சரி அதிகாரமாகப் பார்ப்பது முட்டாள்த்தனமானது.
அத்தகைய மனிதத்தின் ஓழுங்கோடு இக் கருத்து நிலை முரண்படுவதுதான் அறவே ஏற்க முடியாதது.
மிகச்சிறிய ஒரு உதாரணத்துக்காக ஒரு கேள்வி கேட்கிறேன்..
ஒரு தாய் தனது உடலின் உட்செறிக்கப்பட்டுள்ள ஆற்றல்களை முழுமையாக வெளிப்படுத்தும் களமாகத் தன் வெளிப்படையான எழுத்தைப் பயன்படுத்தியதை வாசிக்கும் வாலிப மகனுக்கு பெண்ணியத்தின் இந்த எழுத்துக் கொள்கை எதனைக் கற்பிக்கும் என்று நினைக்கிறீர்கள் ஜமாலன்?
//பெண்ணியம் என்பது எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு கோட்பாடாகத்தான் நான் கருதுகிறென்//
அதன் உள்ளடக்கத்தைக் கொஞ்சம் விரிவாகக் கூற முடியுமா ஜமாலன்!!!
இன்னும் நிறைய இருக்கின்றன தொடர்ந்தும் கதைப்போம்..
ஜமாலன் அவர்களே நான் அசரீரியின் கருத்துக்களுடன் உடன்படுகிறேன்.
இந்தப் பெண்ணியக்கருத்துக்களைத் தோற்றுவித்த மேற்கின் சமுக கட்டமைப்பு என்னவானது? என்பதன் நிதர்சனத்தை நாம் காண்கிறோம் அல்லவா?
பண்டைய சமுகங்கள் பேசியவற்றை இன்னுமின்னும் நாமும் ஏன் எடுத்தாளவேண்டும்?
ஒரு எழுத்து அதை வாசிப்பவனிடம் கீழ்மட்ட உணர்வுகளைக் கிளர்த்திவிடும் எனில் அந்த எழுத்து பெண்ணுக்கு எதற்கு?
ஆண்தான் இப்படியெல்லாம் பெண் எழுத வேண்டும் என்று எதிர்பார்க்கிறான்.பெண்களில் அதிகமானோர் இத்தகைய எழுத்துக்களைப் படிப்பதில்லை.
உலக வரலாற்றில் இன்று வரை மக்களின் மனங்களில் அபிமானத்துடன் வீற்றிருப்பவை ஒரு சிலரின் மனவிகாரங்களில் விளைந்த எழுத்துக்கள் அல்லவே.
சகோதரி பஹிமாவிற்கு..
நண்பர் அசிரீரியின் உடன் எனது விவாதத்தை தனிப்பதிவாக இட்டுள்ளென். இங்கே பார்க்கவும்.
http://jamalantamil.blogspot.com/2008/01/blog-post_28.html
------------
பெண் தன் உடலைக் கொண்டாடுதல்,காமத்தைப் பாடுதல்,உடலின் இரகசியங்களைக் கண்டறிந்து கொடுத்தல் எனப் பலவித போதைகளில் சிக்குண்டு பெண்ணியம் என்ற பெயரில் கவிதைகளை எழுதுவது ஆரோக்கியமான போக்கென்று நான் கருதவில்லை.
----------
அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் பஹீமா
இதைத் தொடர்ந்த விவாதங்களும் செரிவுள்ளனவாய் இருக்கின்றன.
ஜெர்மனியில் நிர்வாண விமானம் விடப்போகிறார்களாம். அனைத்துப் பிரயாணிகளும் நிர்வாணமாகப் பிரயாணம் செய்வார்களாம். ஊர் வந்ததும் உடையுடைத்திக்கொண்டு விமான நிலையத்தில் இறங்குவார்களாம். அது மட்டும் ஏனென்று தெரியவில்லை :)
அந்தக் காலத்திலேயே பயன்படுத்தினார்கள் என்று சொல்வது வலுவான கருத்தல்ல. அதற்கும் முந்திய நாகரிகமற்ற காலத்தில் மனிதர்கள் எப்படியெல்லாம் வாழ்ந்தார்களோ அப்படியா இன்று மீண்டும் வாழவேண்டும்?
பெண்கள் பெயர் இட்டு ஒரு கவிதை வெளிவந்தால், சட்டென ஊறும் எச்சில் நாக்குடன் அலையும் கிளர்ச்சிக் கண்களுக்குத் தீனி தருவோர் சீக்கிரமாகவே தீர்ந்துபோவார்கள்.
உங்களைப்போன்று கவிதையின் உண்மையான ஊற்றுகளை மட்டும் இறுகப்பற்றிக்கொண்டு எழுதும் இன்றைய பல பெண் கவிஞர்களால்தான் இந்தக் கேடு அழிந்துபோகடிக்கப்படும் என்று நம்புகின்றேன்.
"அந்தக் காலத்திலேயே பயன்படுத்தினார்கள் என்று சொல்வது வலுவான கருத்தல்ல. அதற்கும் முந்திய நாகரிகமற்ற காலத்தில் மனிதர்கள் எப்படியெல்லாம் வாழ்ந்தார்களோ அப்படியா இன்று மீண்டும் வாழவேண்டும்?"
உங்கள் கருத்துக்கு நன்றி புஹாரி அவர்களே.
Post a Comment