மழை கசிந்து கொண்டிருக்கும்
இருள் தேங்கிய அதிகாலையில்
உங்கள் நினைவுக் குறிப்புகளைப்
புரட்டிக் கொண்டிருக்கிறேன்
பிசு பிசுக்கும் புல் வெளியின்
வேர்களிடையே தேங்கிக் கிடக்கிறது
நேற்றைய பெரு மழை
நதிகள் பெருக்கெடுத்தோடும்
நிர்க்கதி மிகுந்த தீவில்
இந்த மழையை
யாருமே வரவேற்றதில்லை
உங்களிடமிருந்து
பிரிவின் போர்வை எடுத்து
எனை மூடுகிறேன்
என் நதி சுமந்து வந்த
திரவியங்களனைத்தையும்
உங்களிடமே கொடுத்தேன்
திடுமென வருமோர்
காட்டாற்று வெள்ளத்தில்
என் கரை வளர்த்த மரங்கள்
இழுபட்டுச் செல்லாதிருக்கப்
பின்னிப் பின்னிப் பிணைந்திருக்கும்
பெயர் தெரியாப் பெருங்கொடிகள்
நனைந்த பூமி உலர்ந்திட
நாளை வரும் கோடையில்
உங்கள் நதித் தீரங்கள் ஊடாக
ஊற்றெடுத்து ஓடிக் கொண்டிருக்கும்
என்றென்றைக்குமான
என் குரலோசை
பஹீமாஜஹான்
5 comments:
நெஞ்சம் நனைக்கும் நினைவுகளாய் நேற்றைய தூறல்கள்.
நாளைய மழையின் ஒவ்வொரு துளியிலும் கூட நேற்றைய ஈரத்தை மனம் எதிர்பார்க்கும்.
இறந்த காலத்தில் எங்கோ...நதியோடைகளில்,வனாந்தரங்களின் பசும் இலைகளில்,பெருஞ்சமுத்திரத்தில் உறிஞ்சப்பட்ட துளி,மேகமாய்த் திரண்டு இன்றைய பொழுதொன்றில் எல்லா வானங்களையும் கடந்து,எத்தனையோ உருவங்கள்,பெயர்கள்,தலைகள் விட்டு எம் மேல் விழுமெனில் அதனில் எம் பெயர் எழுதப்பட்டிருக்கும்.
எமதான நினைவுகளும் இப்படித்தானோ...?
வாங்க ரிஷான்
கவிதையின் உள்ளார்ந்த பொருளைக் கண்டுபிடித்து எழுதியுள்ளீர்கள்.
ஆச்சர்யத்துடனும் அளவற்ற மகிழ்வுடனும் வாழ்த்துகிறேன்.
இந்தக் கவிதையைப் பதிவில் சேர்த்தவுடன் இறுதியில் (2008.01.31 கண்ணீருடன் வழியனுப்பிவைத்த ஆசிரியைகளுக்கும் அன்புக்குரிய பிள்ளைகளுக்கும்) எனச் சேர்த்திருந்தேன்.
அன்றைய நிகழ்வை அடியொட்டியே இதனை எழுதியிருந்தேன்.
பின்னர் அந்தவரிகளை நீக்கிவிட்டேன்.
அந்த வரிகள் இருந்திருப்பின் கவிதையின் பொருளை இலகுவில் கண்டடைந்திருப்பீர்கள்.
நீக்கியதும் நல்லது தான்.இல்லாவிட்டால் உங்களின் தேடல் நிகழ்ந்திருக்காது.
உங்களுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள்
nalla kavithai, aanal moothatti mattum alla, 30% makkal ippadi than irukkirargal, payanam engirunthu allathu engu povathu theriyamal than thodarkintrana.
athil oru moothatti mattum ungal kannil pattu irukkirar polum
Anbudan
Raams
வாருங்கள் thamilannan
"ஆதித்துயர்" கவிதைக்கான உங்கள் கருத்துக்கு நன்றி
good poems.keep it up
Post a Comment