வெட்டியகற்றப்பட்ட மரம்
விட்டுச் சென்ற வெளியில்
அதிரடியாக
இறங்கிக் கொண்டிருக்கிறது வெயில்


சாவகாசமாய் நிலத்தில் அமர்ந்து
தாடைகளை அசைத்தவாறிருக்கும்
கிழட்டுப் பிராணியை
காலையில் ஒரு திசையிலும்
மாலையில் பிறிதொரு திசையிலும்
இடம் மாற்றி இருத்துகிறது
ஏதோவொரு நிழல்


வேனிற்காலப் பறவைகளை
ஒரு தேசத்திலிருந்து
இன்னொரு தேசத்திற்குக்
கூட்டிப் போகும் வெயில்
ஆகாயம் பத்திரப் படுத்தி வைத்திருக்கும்
பயணப் பாதைகளின்
வரைபடங்களைக் குழப்பாதவாறு
மீள அவற்றை அழைத்து வருகிறது

மாளிகை வாசல்களுக்கு வெளியே
தயங்கி நிற்கும் வெயில்
எளியவர் முற்றங்களுக்குச்
சிடுசிடுப்புடன் திரும்புகிறது

தாய்த் தேசத்தில் அனாதையாக்கப் பட்ட மகள்
புகலிடம் ஒன்றைத் தேடிப் போகிறாள்
நிழல்களை விரட்டும் பிறிதொரு வெயில்
அவள் பின்னே போகிறது


கண்ணீர் வற்றாத இத்தீவையும்
குறுகுறுக்கும் மனதுடன்
கடக்கிறது வெயில்
ஈரத்தை உறிஞ்சிக் கொண்டு
இரத்தக் கறைகளை அப்படியே விட்டு விட்டு


வெயில் மறைந்ததும்
அந்தப் பெரு வனம்
கூந்தலை அவிழ்த்துப் போட்டவாறு
தெருவெங்கும் அலையத் தொடங்குகிறது
பதுங்கியிருந்த மிருகங்களையெல்லாம்
தன்னோடு அழைத்துக் கொண்டு
*********************************

("யாத்ரா " கவிதை இதழுக்கு எழுதப்பட்ட கவிதை)