அடுத்தவர்தமை ஆறுதல் படுத்திடத் தானே
அன்பினைப் பகர்ந்திடாது அகன்று சென்றேன்
மீறிப் போய்விடாதிருந்திடப் பண்பாடுகள்
மெளனத்தின் விலங்குகளால் எனைப்
பிணைத்திருந்தேன்
அன்பு ததும்பிக் கிடந்த உனதழகிய
விழிகளில் பதிந்திடா வண்ணம்
பிடிவாதத்துடன் கண்களைத் திருப்பிக் கொண்டேன்
வந்தனங்களும் புன்சிரிப்பும்
உன்னெதிரே வராமல்
இறுகிய முகக் கோலத்தை எனதாக்கிக் கொண்டேன்
உனது நிழல் மீது எனது நிழல் வீழ்ந்து பின்னிடும்
அருகாமையால் வேகமாகக் கடந்து போனேன்
பிரியாவிடைபெற்றுப் புன்னகையுடன் பிரிந்த நாளில்
பகிர்ந்திடாத அன்பின் பளுவினைச் சுமந்து போனேன்
ஆனாலும்
கல்லூரி முன்றலிலும்
அதி வேகத் தெரு முனைவினிலும்
அந்தி மஞ்சள் கிரணங்கள்
முகத்தின் கண்ணாடி வில்லைகளிலும்
சொகுசு வாகனத்திலும் பளிச்சிட்டுச் சிதறிட
ராசா போல எதிரே வந்து
வேகம் குறைத்து நீ தடுமாறித் தவித்த
நகரத்தின் மத்தியிலுமாய்
எதிர்பாராத் தருணத்தில்
எதிர் கொண்ட உன் விழிகள் மாத்திரம்
எனை உற்றுப் பார்த்தவாறே கிடக்கின்றன
இன்னும்
திரும்பத் திரும்பப் பார்த்து
எடுத்துச் செல்லாமலே விட்டுச் சென்ற
உனது பார்வைகள்
உயிரோயும் வரைக்கும் உள்ளொளி பாய்ச்சிடுமோ?
உயிரோயும் வரைக்கும் உயிரினைத் தீய்த்திடுமோ?
************************
20051223
11 comments:
அன்பின் ஃபஹீமா ஜஹான்,
//
அடுத்தவர்தமை ஆறுதல் படுத்திடத் தானே
அன்பினைப் பகர்ந்திடாது அகன்று சென்றேன்
மீறிப் போய்விடாதிருந்திடப் பண்பாடுகள்
மெளனத்தின் விலங்குகளால் எனைப்
பிணைத்திருந்தேன்
அன்பு ததும்பிக் கிடந்த உனதழகிய
விழிகளில் பதிந்திடா வண்ணம்
பிடிவாதத்துடன் கண்களைத் திருப்பிக் கொண்டேன்
வந்தனங்களும் புன்சிரிப்பும்
உன்னெதிரே வராமல்
இறுகிய முகக் கோலத்தை எனதாக்கிக் கொண்டேன்
உனது நிழல் மீது எனது நிழல் வீழ்ந்து பின்னிடும்
அருகாமையால் வேகமாகக் கடந்து போனேன்
பிரியாவிடைபெற்றுப் புன்னகையுடன் பிரிந்த நாளில்
பகிர்ந்திடாத அன்பின் பளுவினைச் சுமந்து போனேன்//
ஏனென்று தெரியவில்லை.
எனதிப்போதைய மனநிலையினைப் பிரதிபலிப்பதாக உணர்கிறேன்...
நாம் பெரிதாக நேசிக்கும் ஒன்றினை இன்னொருவர் எப்படிப் பாதுகாப்பாரோ என்ற பயத்திலும், தயக்கத்திலுமேயே நமக்குப் பிடித்தமானதை இன்னொருவருக்கு விட்டுக்கொடுத்திடத் தயங்குகிறோம். ஆனால் மற்றவரும் அதைப் பொக்கிஷமாகத் தாங்குவதை உணர்ந்தால் விட்டுக்கொடுத்தல் இலகுவாக இருக்கிறது. அருமையான வரிகள் அதைச் சொல்கின்றன சகோதரி..
//அந்தி மஞ்சள் கிரணங்கள்
முகத்தின் கண்ணாடி வில்லைகளிலும்
சொகுசு வாகனத்திலும் பளிச்சிட்டுச் சிதறிட//
அழகான வரிகள்..தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி..பெரிய இடைவெளி விடவேண்டாம் :)
நீங்களா பஹீமா..
எனக்கு நெருக்கமான கவிதையொன்றாய் இருக்கிறது!
எவ்வளவு முயன்றும் என்னால் கவிதைகளை எழுதவே முடிவதில்லை..
வளர்ந்து வரும் இளம் படைப்பாளிகள் என எழுத்தாளர் எஸ் ராமகிருஸ்ணன் உங்களையும் சொல்லி இருக்கிறார்...
வாழ்த்துக்கள் தோழி...!
இன்னும் நிறைய எழுதுங்கள் சகோதரி..
வெள்ளமென பெருகட்டும் பதிவுகள்..
உங்கள் வலைப்பக்கம் எஸ்.ரா- வால்
இங்கு http://www.sramakrishnan.com/view.asp?id=216&PS=1 குறிப்பிடப்பட்டதை பார்த்து மகிழ்ந்தேன்..வாழ்த்துகள் சகோதரி..
தொடர்ந்து எழுதுங்கள்
வாருங்கள் ரிஷான்
(ஏனென்று தெரியவில்லை.
எனதிப்போதைய மனநிலையினைப் பிரதிபலிப்பதாக உணர்கிறேன்...
நாம் பெரிதாக நேசிக்கும் ஒன்றினை இன்னொருவர் எப்படிப் பாதுகாப்பாரோ என்ற பயத்திலும், தயக்கத்திலுமேயே நமக்குப் பிடித்தமானதை இன்னொருவருக்கு விட்டுக்கொடுத்திடத் தயங்குகிறோம். ஆனால் மற்றவரும் அதைப் பொக்கிஷமாகத் தாங்குவதை உணர்ந்தால் விட்டுக்கொடுத்தல் இலகுவாக இருக்கிறது. அருமையான வரிகள் அதைச் சொல்கின்றன)
எதை விட்டுக்கொடுப்பது எனத்தெரியாமல் விட்டுக்கொடுப்பது தான் எல்லாத் துயரங்களுக்கும் காரணமாகிப் போய்விடுகிறது தம்பி
வாருங்கள் தமிழன்- கறுப்பி
((வளர்ந்து வரும் இளம் படைப்பாளிகள் என எழுத்தாளர் எஸ் ராமகிருஸ்ணன் உங்களையும் சொல்லி இருக்கிறார்...))
ஆமாம்.அதிலே தெரிகிறது தானே இன்னும் முதிர்ச்சிதேவை என்பதும்?
உங்கள் வருகை மகிழ்ச்சிதருகிறது
வாருங்கள் ஷாஜி
உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
//உயிரோயும் வரைக்கும் உள்ளொளி பாய்ச்சிடுமோ?
உயிரோயும் வரைக்கும் உயிரினைத் தீய்த்திடுமோ?//
நல்ல கேள்வி. பகிந்திடாத அன்பு பளுவாகத்தான் இருக்கும் போலும். அடுத்தவரை ஆறுதல் படுத்துவதில்தான் சமயங்களில் வாழ்க்கையே கழிந்து விடுகிறது :(
அழகான கவிதை.. நல்லா இருக்கு..
வாருங்கள் கவிநயா
((அடுத்தவரை ஆறுதல் படுத்துவதில்தான் சமயங்களில் வாழ்க்கையே கழிந்து விடுகிறது))
அதிலும் பாருங்கள் கவிநயா,
பெண்ணுக்குத்தானே இந்த விதி :(
வாருங்கள் Saravana Kumar MSK
உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது.
நன்றாக இருக்கிறது சகோதரி,
பகிர்ந்திடாத அன்பின் பளு கவிதையெங்கும் கனக்கிறது.
Post a Comment