எல்லைப் படுத்தாத அன்புடன்
இரு திசைவழி நடந்தோம்
உன் மனதிலும் என் மனதிலும்
அன்பின் நிழல்கள் காவி...
தங்கைக்கேற்ற அண்ணனாயிருந்து
பிரிந்து செல்லும் வரை என்
பிறவிக் கடன் தீர்த்தாய்!
என் மனதிலிருந்து துயர அலைகள் எழுந்து
ஆர்ப்பரித்துப் பொங்கும் வேளைத்
தூர நிலம் கடந்து
உனக்குள்ளும் அலைகள் எழுமோ?
மனதை விட்டு
உன் நினைவு தொலைந்து போயிருக்கும்
அவ்விருண்ட பொழுதுகளில்
தொலைபுலத்துக்கப்பாலிருந்து வரும்
உனதழைப்புக்கு நன்றி.
என் துயரின் காரணங்களைத்
தேடியறியத் துடித்ததில்லை நீ என்றும்:
புன்னகை கலந்த உனதுரையாடல்
மனதின் அலைகளை ஓய வைக்கும்.
நான் ஏற்ற தெய்வ தீர்ப்புகளால் அதிர்ந்தாயெனினும்
எந்த ஆறதலையோ சமாதானங்களையோ
நீ இருந்த வரை எனக்குச் சொன்னதேயில்லை:
ஆழ்ந்து ஊடுறுவும் உன் பார்வை தரும் அமைதியை விட
வார்த்தைகளின் ஒத்தடம் எனக்குத் தேவைப் படவுமில்லை!
நமது பிரிவெழுதியிருந்த காலத்தைப் பின்னகர்த்தப்
பஞ்சாங்கமோ பரிதவிப்புக்களோ உதவிடவில்லை:
எல்லைப் படுத்தாத அன்புடன்
இரு திசை வழி நடந்தோம்:
எமதிருமனங்களிலும் அன்பின் நிழல்கள் காவி !
வீடென்ற சிறைக்குள் சிக்குண்டவள்
மீளவும் மீளவம் நரகத்துழல்கிறேனடா!
இங்கு தினமும் நான் காணும்
பல்லாயிரம் மனிதரிடையேயிருந்து
எப்போது நீ தோன்றி மீண்டும் புன்னகைப்பாய்?
3 comments:
மேலுள்ள சுட்டியில் உங்களை இந்த 'ஆறு' விளையாட்டுக்கு அழைத்துள்ளேன்.
சுட்டி
http://theyn.blogspot.com/2006/06/666.html
//நமது பிரிவெழுதியிருந்த காலத்தைப் பின்னகர்த்தப்
பஞ்சாங்கமோ பரிதவிப்புக்களோ உதவிடவில்லை:
//
நல்ல சிந்தனை..
//இங்கு தினமும் நான் காணும்
பல்லாயிரம் மனிதரிடையேயிருந்து
எப்போது நீ தோன்றி மீண்டும் புன்னகைப்பாய்?
//
முத்தாய்ப்பாய் அமைந்துள்ளது..
Post a Comment