உனது தேவதைக் கனவுகளில்
அவளுக்குக் கிரீடங்கள் வேண்டாம்:
உனது இதயக் கோவிலில்
அவளுக்குப் பூஜைப் பீடம்வேண்டாம்:
உனது ஆபாசத் தளங்களில்
அவளது நிழலைக் கூட
நிறுத்தி வைக்க வேண்டாம்:
வாழ்க்கைப் பாதையில்
அவளை நிந்தனை செய்திட
உனது கரங்கள் நீளவே வேண்டாம்!
அவளது விழிகளில் உனதுலகத்தின்
சூரிய சந்திரர்கள் இல்லை :
அவளது நடையில்
தென்றல் தவழ்ந்து வருவதில்லை:
அவளது சொற்களில்
சங்கீதம் எழுவதும் இல்லை:
அவள் பூவாகவோ தளிராகவோ
இல்லவே இல்லை!
காலங்காலமாக நீ வகுத்த
விதிமுறைகளின் வார்ப்பாக
அவள் இருக்க வேண்டுமென்றே
இப்போதும் எதிர்பார்க்கிறாய்
உனது வாழ்வை வசீகரமாக்கிக் கொள்ள
விலங்குகளுக்குள் அவளை வசப்படுத்தினாய்:
நான்கு குணங்களுக்குள் அவள்
வலம் வர வேண்டுமென வேலிகள் போட்டாய்:
அந்த வேலிகளுக்கு அப்பாலுள்ள
எல்லையற்ற உலகை
உனக்காக எடுத்துக் கொண்டாய்!
எல்லா இடங்களிலும்
அவளது கழுத்தை நெரித்திடவே
நெருங்கி வருகிறது உனது ஆதிக்கம்!
அவள் அவளாக வாழ வேண்டும்
வழி விடு!
4 comments:
\\உனது தேவதைக் கனவுகளில்
அவளுக்குக் கிரீடங்கள் வேண்டாம்:
உனது இதயக் கோவிலில்
அவளுக்குப் பூஜைப் பீடம்வேண்டாம்:
உனது ஆபாசத் தளங்களில்
அவளது நிழலைக் கூட
நிறுத்தி வைக்க வேண்டாம்:
வாழ்க்கைப் பாதையில்
அவளை நிந்தனை செய்திட
உனது கரங்கள் நீளவே வேண்டாம்!\\
ஜகான் குட்டிக்கவிதைக்குள் எல்லாவற்றையும் சொல்லி விட்டீர்கள். தலைப்பு "அவளை அவளாக " என்று இருக்கலாமோ என்று யோசிக்கிறன் நான்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சினேகிதி.
//ஜகான் குட்டிக்கவிதைக்குள் எல்லாவற்றையும் சொல்லி விட்டீர்கள். தலைப்பு "அவளை அவளாக " என்று இருக்கலாமோ என்று யோசிக்கிறன் நான். //
நான் கூட இந்தக் கவிதைக்கு வேறு விதமாகத்தான் தலைப்பிட்டிருந்தேன்.இந்தக் கவிதையைப் பிரசுரித்த சஞ்சிகை கவிதையின் தலைப்பைச் சுருக்கிப் பிரசுரித்திருந்தது.அந்தத் தலைப்பில் தான் இங்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நல்ல கவிதை..
//நான்கு குணங்களுக்குள் அவள்
வலம் வர வேண்டுமென வேலிகள் போட்டாய்:
அந்த வேலிகளுக்கு அப்பாலுள்ள
எல்லையற்ற உலகை
உனக்காக எடுத்துக் கொண்டாய்!
//
மிக ரசித்த வரிகள்.. மேலும் ஆதங்கம் நிறைந்தவை.
ஹும்! படித்ததும் தோன்றியது பெருமூச்சுதான்! கோகுலன் சுட்டிய வரிகளை நானும் ரசித்தேன்.
//அவள் அவளாக வாழ வேண்டும்
வழி விடு!//
சற்றும் சாத்தியமில்லை, பஹீமா! :(
Post a Comment