கைவிடப்பட்ட ஆட்டுக்குட்டி
கதறியபடி
மேய்ச்சல் நிலத்திலிருந்து
தனியே மீள்கிறது


துரத்தி விளையாடும்
குருவிகளை
மைதானத்தில் புறக்கணித்துவிட்டு
எதனையோ நினைத்தபடி
தூர விழிபதித்துத் தன் பாட்டில் போகிறது


திடுமென எதிர்வந்து தடுமாறி நின்ற
பேரிரைச்சலைத்
திகைப்புடன் பார்த்தவாறு
மரணம் தவணைகொடுத்துத்
திரும்பிச் சென்ற
நெடுஞ்சாலையைக் கடக்கிறது


தன்னை அள்ளிக் கொள்ளும்
கருணையின்
கரங்களை இழந்த அது
சகித்திடவொண்ணாத வெயிலொன்றில்
திக்கற்று அலைகிறது


இறுதியில்....
மோனத்தில் மூழ்கிப்போன
தன்னந்தனி மரமொன்றின்
துயர்நிழலில்
கால் மடக்கிப் படுத்தபடி
கானல் நீரோடும் கட்டாந் தரையொன்றை
வெறித்தபடி கிடக்கிறது.

(2010.08.26 இரவு 9 மணி)
நன்றி: கல்குதிரை வேனிற்காலங்களின் இதழ்- 2011