சின்னஞ்சிறு செடியெனச்
சிற்றிலைகள் அசைந்தாடிக் கொண்டிருந்த
செல்லப் பெண்ணின் வாழ்வில்
பதுங்கிப் பதுங்கி உள்நுழைந்தாய்

அவளது பசுமையின் நிறமெடுத்து
அவளுக்குள் ஒன்றித்து
மோனத்தவமிருப்பதாய்
பாசாங்கு செய்தாய்
முழு உலகும் அவளேயென்று
தலையாட்டித் தலையாட்டி வசப்படுத்தினாய்

பின்வந்த நாட்களில்
எழுந்த சிறு சலசலப்பில்
அழகு காட்டி அசைந்தவாறு
உன் காலைச் சுற்றிவந்த
நச்சுக் கொடியொன்றினுள் நீ தாவினாய்
அந்தக் கொடியின் நிறமெடுத்து
மோகித்து முயங்கிக் கிடக்க
நீண்ட பொழுது தேவைப்படவில்லை உனக்கு
உண்டு சுகித்துக் கிடந்து
ஆதியில் தொடங்கிய அதே அரிப்பெடுக்கவே
இன்னுமொரு பெரு மரத்திற்குத் தாவினாய்


இன்று
வெடிப்புக் கண்ட
பெருவிருட்சத்தின் பட்டைகளையே
கோட்டை அரண்களென எண்ணியவாறு
உதிரத் தயாராயிருக்கும்
மரப்பட்டையின் நிறமெடுத்துக்
குந்திக் கிடக்கிறாய்
அற்பப் பதர் உனக்குத்தான்
எத்தகு பவிசுகள்


அழுகிய கனிகள் சொரியும்
பட்சிகளெதும் நாடாத அம் மரத்தை
வட்டமிட்டுப் பறக்கும்
கழுகொன்றின் கூர்ந்த விழிகளில்
உனது தலைவிதியை நான் படிக்கிறேன்
மிகச் சரியான தருணத்தில்
பதறித் துடி துடித்திடக்
கால் நகங்களில் காவிப் பறக்கும்
உனக்கான இறைவனின் தீர்ப்பு


2009.12.07
(நன்றி:கல்குதிரை)