நொந்து போன நாட்களைத் தனது
சின்னஞ்சிறு தோள்களில்
சுமந்தலைந்த சிறுமி
காலுடைந்த ஆட்டுக்குட்டியைக்
கீழிறக்கி வைத்துவிட்டு
மண்தெருவில் சிந்திக் கிடக்கும்
நெல் மணிகளைக்
குடிசைக்குள்
காவிச் சென்றிட நினைக்கிறாள்

முன்பெனில்
வயல் வரப்பொன்றில் குந்தியிருந்து
அவளது பிஞ்சுக் குரலெட்டாத்
தொலைவு வரை திரிந்து
உதிரி நெற்கதிர் பொறுக்கி வரும்
அம்மாவுக்காகக் காத்திருப்பாள்.
அம்மா திரும்பி வரும் வேளை
ஒரு முயல் குட்டியை
ஒரு செம்மறியாட்டு மந்தையை
ஒரு அபூர்வப் பறவையை
விழிகளால் துரத்தியவாறு
மாபெரிய வானத்தில் முகில் கூட்டங்களிடையே
அலைந்து கொண்டிருப்பாள்
அல்லது
நாரைக் கூட்டங்களுக்குக்
கையசைத்து விடைகொடுத்தவாறு
அவை சென்று மறையும்
மலைத்தொடர்களின் மறுபுறத்தே
என்ன இருக்குமென்ற
புதிரொன்றால் அலைக்கழிவாள்


சிறுமியின் நினைவுகளிலிருந்து
மெதுவாக நழுவுகின்றன
அந்த நாட்டுப் புறப் பாடல்களும்
பெண்கள் கூடி அறுத்தெடுக்கும் கதிர்களை
பிணையல் மாடுகள் சுற்றிச் சுழன்று
சூடடித்துக் கொடுக்கும் இரவுகளும்


இன்று
வயல்வெளிதனில் இறக்கிவிடப்பட்ட
இயந்திரப் பூதம்
வைக்கோலைத் துகள்களாக்கி
வரிசையாய்ப் பரப்பிய பின்
விதைத்தோர் கைகளில்
நெல் மூடைகளைக்
கொடுத்துப் போன கணப்பொழுதில்
சிறுமியின் அம்மாவிடம்
ஒரு பானை நிரம்பிவழிந்தது
ஏமாற்றம்


பச்சை அலைகளெனப்
பறந்து வந்த கிளிக்கூட்டங்கள்
வான் பரப்பில்
தாளமுடியா ஏமாற்றத்தைத் தீட்டித்
தொலைதூரச் சோலைகளுக்கே
திரும்பலாயின.
பூதத்தின்
பல்வரிசைக்குள்
அரைபட்டுச் சிதைந்தது
நெற் குருவியொன்றின்
கடைசி அலறல்.

உறையொன்றிலிருந்து
சிந்திவிட்டுச் சென்ற
நெல்மணிகளைக் கண்டதும்
சர்க்கரைத் துண்டு கிடைத்த
எறும்பொன்றைப் போல
எப்பாடுபட்டேனும்
எடுத்துச் சென்றிட
மொய்த்துவிட்டாள் சிறுமி.
புது அரிசிச் சோற்றின்
ஆவிபறந்திடும் கனவு
அவளது சின்னப் பீங்கானிலும்.

அள்ளிடும் தருணமெலாம்
மண்ணையும்
குறுணிக்கற்களையும்
அவள் கரங்களில்
எஞ்சவைத்து விட்டு
நெல் மணிகளோடு
நிலத்தில் ஒழுகிக் கொண்டிருந்தது காலம்

வீதி வழியேபோன
முதிய பெண்ணின்
ஆலோசனைக்குக் கட்டுப்பட்டவளாக
குடிசைக்குள் ஓடிப்போய்
சிறிய கரங்களில் நம்பிக்கை அசைந்தாடிடச்
சிரட்டையும் பையுமாக
வந்தாள் சிறுமி


தப்பிக்கமுடியாத நெல்மணிகளெல்லாம்
அவளுடன் போகலாயின
எளிய குடிசை நோக்கி

அவள் பின்னே
நொண்டிய படி செல்கிறது
காலுடைந்த ஆட்டுக்குட்டி.

ஃபஹீமாஜஹான்
2010.03.31

(நன்றி:காலச்சுவடு இதழ் 126)