தான் மாத்திரம் உணரக் கூடிய மொழியில்
கதைத்துக் கொண்டிருந்த
சின்னஞ்சிறு நாற்றுக்களைச்
சிறுமி
குழந்தையைத் தூளியில் கிடத்தும் பக்குவத்தோடு
குழிகளில் நட்டிருந்தாள்
ஆற்றோர மூங்கில்களின் கீதங்களைக் கேட்டவாறு
கதை பேசிப் பேசி அவளுடன்
அவைகள் வளர்ந்தன



"காலையில் வா
அற்புதமொன்றுடன் காத்திருப்போம்'
எனக் கூறி
ஒவ்வொரு மாலையிலும்
அவளை வழியனுப்பி வைத்தன



சூரியனுக்கு முன்னால் அவள் எழுவாள்
பின்னர்
நீள நீள நிழல்களை விழவிடும்
மஞ்சள் வண்ணக் கிரணங்களுடன்
தோப்பினுள் நுழைவாள்
தூர வரும் போதே கண்டு கொள்ளும்
மூங்கில் புதர்களெல்லாம்
தாளத்துடன் அசைந்தாடி
அவளை வரவேற்கும்
ஒரு தளிரையோ
பூவையோ பிஞ்சையோ
அவளுக்குக் காட்டிடவே
செடிகளெலாம் காத்திருக்கும்



தாள முடியாத இன்பம் பொங்கிட
ஆற்றை நோக்கி ஓடுவாள் சிறுமி
சலசலத்தோடும் தெள்ளிய நீரைச்
சிறிய வாளிக்குள் பிடித்து வருவாள்
வாளி கொள்ளா உற்சாகத்துடன்
துள்ளிப் பாயும் தண்ணீர்
மீன்கள் நிரம்பிய அவளது
சின்னச் சட்டையை
நனைத்து நனைத்துக் கூத்தாடும்


செடிகளின் வேரடியில் அவள்
தண்ணீரைப் பாய்ச்சும் வேளை
இசையுடன் பாய்ந்தோடும்
வரும் வழி நீள
நதி நனைத்துச் சுமந்து வந்த
பல்லாயிரம் வேர்களின் மொழிகள்



பின் அவை
பூக்களில் கவிதைகளை வரைந்தவாறு
அவள் போலவே வளரும்
(நன்றி: அம்ருதா)

வெயில்



வெட்டியகற்றப்பட்ட மரம்
விட்டுச் சென்ற வெளியில்
அதிரடியாக
இறங்கிக் கொண்டிருக்கிறது வெயில்


சாவகாசமாய் நிலத்தில் அமர்ந்து
தாடைகளை அசைத்தவாறிருக்கும்
கிழட்டுப் பிராணியை
காலையில் ஒரு திசையிலும்
மாலையில் பிறிதொரு திசையிலும்
இடம் மாற்றி இருத்துகிறது
ஏதோவொரு நிழல்


வேனிற்காலப் பறவைகளை
ஒரு தேசத்திலிருந்து
இன்னொரு தேசத்திற்குக்
கூட்டிப் போகும் வெயில்
ஆகாயம் பத்திரப் படுத்தி வைத்திருக்கும்
பயணப் பாதைகளின்
வரைபடங்களைக் குழப்பாதவாறு
மீள அவற்றை அழைத்து வருகிறது

மாளிகை வாசல்களுக்கு வெளியே
தயங்கி நிற்கும் வெயில்
எளியவர் முற்றங்களுக்குச்
சிடுசிடுப்புடன் திரும்புகிறது

தாய்த் தேசத்தில் அனாதையாக்கப் பட்ட மகள்
புகலிடம் ஒன்றைத் தேடிப் போகிறாள்
நிழல்களை விரட்டும் பிறிதொரு வெயில்
அவள் பின்னே போகிறது


கண்ணீர் வற்றாத இத்தீவையும்
குறுகுறுக்கும் மனதுடன்
கடக்கிறது வெயில்
ஈரத்தை உறிஞ்சிக் கொண்டு
இரத்தக் கறைகளை அப்படியே விட்டு விட்டு


வெயில் மறைந்ததும்
அந்தப் பெரு வனம்
கூந்தலை அவிழ்த்துப் போட்டவாறு
தெருவெங்கும் அலையத் தொடங்குகிறது
பதுங்கியிருந்த மிருகங்களையெல்லாம்
தன்னோடு அழைத்துக் கொண்டு
*********************************

("யாத்ரா " கவிதை இதழுக்கு எழுதப்பட்ட கவிதை)




அடுத்தவர்தமை ஆறுதல் படுத்திடத் தானே
அன்பினைப் பகர்ந்திடாது அகன்று சென்றேன்
மீறிப் போய்விடாதிருந்திடப் பண்பாடுகள்
மெளனத்தின் விலங்குகளால் எனைப்
பிணைத்திருந்தேன்


அன்பு ததும்பிக் கிடந்த உனதழகிய
விழிகளில் பதிந்திடா வண்ணம்
பிடிவாதத்துடன் கண்களைத் திருப்பிக் கொண்டேன்
வந்தனங்களும் புன்சிரிப்பும்
உன்னெதிரே வராமல்
இறுகிய முகக் கோலத்தை எனதாக்கிக் கொண்டேன்
உனது நிழல் மீது எனது நிழல் வீழ்ந்து பின்னிடும்
அருகாமையால் வேகமாகக் கடந்து போனேன்
பிரியாவிடைபெற்றுப் புன்னகையுடன் பிரிந்த நாளில்
பகிர்ந்திடாத அன்பின் பளுவினைச் சுமந்து போனேன்

ஆனாலும்
கல்லூரி முன்றலிலும்
அதி வேகத் தெரு முனைவினிலும்
அந்தி மஞ்சள் கிரணங்கள்
முகத்தின் கண்ணாடி வில்லைகளிலும்
சொகுசு வாகனத்திலும் பளிச்சிட்டுச் சிதறிட
ராசா போல எதிரே வந்து
வேகம் குறைத்து நீ தடுமாறித் தவித்த
நகரத்தின் மத்தியிலுமாய்
எதிர்பாராத் தருணத்தில்
எதிர் கொண்ட உன் விழிகள் மாத்திரம்
எனை உற்றுப் பார்த்தவாறே கிடக்கின்றன
இன்னும்

திரும்பத் திரும்பப் பார்த்து
எடுத்துச் செல்லாமலே விட்டுச் சென்ற
உனது பார்வைகள்
உயிரோயும் வரைக்கும் உள்ளொளி பாய்ச்சிடுமோ?
உயிரோயும் வரைக்கும் உயிரினைத் தீய்த்திடுமோ?


************************
20051223