இருள் செறிந்த இராப் பொழுதில்
ஒளியைத் தேடித் தவித்திருந்ததென் தெரு வழியே
இனிய குரலெடுத்துப் பாடிச் சென்றாய்
விஷு வருடத் தை மாத இருபத்தோராம் நாளில்
வாசல் திறந்தேன்
நீ போனதற்கான தடயங்களின்றி
இருள் நிறைந்த பெருவெளி என் கண்களில் மோதியது
மின்மினிகளும் தூரத்து வானின் நட்சத்திரங்களுமின்றிக்
கால்களில் இடறுண்டது என் முற்றவெளி
உனது பயணத்தின் குறியீடாகப்
பாடிச் சென்ற பாடல்
சோகத்தில் துடிதுடித்த ஏதோவொன்றை
இடிந்து தகர்ந்த நகரின் சிதைவுகள் மீதும்
குட்டிச் சுவர்களாய் எஞ்சியிருந்த குடிமனைகள் மீதும்
சனங்கள் எழுந்து சென்ற பூர்விகத் தளங்கள் மீதும்
பல்லாயிரம் இளைஞர்களின் புதை குழிகள் மீதும் தடவிற்று
நிலவையழைத்து
ஒளிச் சுடரொன்றினை அழைத்துத்
தனித்த பயணத்திற்கொரு
வழித்துணையை அழைத்து எழுந்த உன் குரல்
அன்றைய இரவு நீளவும் எதிரொலித்தது
உன் குரலினைப் பின் தொடர்ந்து
வெகு தூரம் வந்தேன் நான்
நடந்த கால்களின் கீழே கண்ணீர் நழுவி ஓடியது
சிரித்த ஒலிகளை ஊடுருவி நிலவின் தண்ணொளி படிந்தது
மரங்களின் பழுத்த இலைகளை உதிர்த்தவாறு
எங்கிருந்தோ வந்த காற்று
யாரோ ஏற்றி வைத்த என்ணற்ற தீபங்களை
எதுவும் செய்யாமல் போயிற்று
இரவின் வானத்தின் கீழே
எனை மோதி வீழ்த்தக் காத்திருந்தது
என் முற்றவெளி
ஃபஹீமாஜஹான்
5 comments:
ஐயகோ!
அந்த இனிய குரல் கேட்டதும் ஓடி வந்து இணைந்திருக்கலாமே அந்த புயல் இணையிடம்???
கண்ணீரில் நனைந்த உன் கால்கள் வாசகன் எந்தன் இதயத்தை சுட்டது.
வாழ்த்துக்கள்
என் சுரேஷ் சென்னை
nsureshchennai@gmail.com
நானும் பல வேளைகள் இப்படிப்பாடி போயிருக்கிறேன்.
இன்று யோசிக்கிறேன்
அவர்களை கோபித்தது தவறு தான் !
அவர்களின் கால்களும் கண்ணீரில் நனைந்திருக்கும்.
என்னை சமாதானப்படுத்தின நல்ல கவிதை.
ஆம்
காதலிக்கப்படாததால் கோபித்து வாழும் எனக்கு என்னை காதலித்த அந்த தேவதைகளோடு சமாதானம் செய்து வைத்த கவிதை, இந்த உங்கள் கவிதை.
கவிதையின் சேவை இன்று உணர்கிறேன்.
சேவை தொடரட்டும்
பயண்பெற வாசகன் நான் தயார்!
என் சுரேஷ், சென்னை
nsureshchennai@gmail.com
ஆனால் இந்தக் கவிதை இலங்கையில் யுத்த நிறுத்தம் ஏற்பட்டிருந்த பொழுது அதனை நிராகரித்து யுத்ததுக்காகக் குரல் எழுப்பிக் கொண்டிருந்த இனவாதிகள் குறித்து எழுதப்பட்ட கவிதை.சமாதானத்தை விரும்பியவன் தான் அந்தப் பாடகன்.
வலைப் பதிவு உலகில் நீங்களும் இணைந்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!
இலங்கையிலிருந்து இந்த உலகுக்கான பங்களிப்பு குறைவு என்பதே என் எண்ணம்.
தொடருங்கள் உங்கள் பங்களிப்புக்களை!
-மேமன்கவி-
http://memonkavi.blogspot.com/
http://babujibhai.blogspot.com/
உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது.மிக்க நன்றி மேமன் கவி அவர்களே.
Post a Comment