சின்னஞ் சிறு வெண் சிறகிரண்டிலும்
புழுதி படியலாயிற்று:
பஞ்சு போன்ற அதன் உடலம்
ஒடுங்கிச் சிறுத்திற்று:
கூடி விளையாடிய அவளது பாதம்
தவறுதலாகக் குஞ்சின் தலை மீதேறியது:
கால்களும் உடலும் நெடுநேரம் நடுங்கிடச் சிறுமி
தனது பிரியம் துடிப்பதைப் பார்த்திருந்தாள்!
கரு முகிலே! உன் துளிகள் தூவி
அதன் மேனிக்கு வலுவூட்டு!
நீல விசும்பே!உன் குரல் கொண்டு
மீளாத் துயிலிலிருந்து அதையெழுப்பு!
வீசும் பவனமே!உனது மென் கரங்களால்
மூடிய இரு கண் மூடிகளைத் திறந்து விடு!
இனிய குஞ்சே ! வலிகளைக் காலடியில் விட்டு
குணமடைந்து எழுந்து விடு:
முறையிட்டாள் சிறுமி ஆகாயம் நோக்கி.
உயிர் பிழைத்த குங்சு
ஒரு கண் பார்வையிழந்து தவித்தது!
இடையில் தவறிய வழி தேடிக் கீச்சிட்டவாறு
எங்கோ எங்கோ பார்த்திருந்தது
மரணத்தின் நிழல் அதன் தலைக்கு மேலே
கவிழ்திருந்த காலைப் பொழுதில்
கடும் பிரயத்தனத்துடன் ஒரு சொண்டுத் தண்ணீரை
அண்ணாந்து குடித்தது
உலகில் அதற்கென ஆண்டவன் வைத்திருந்த
கடைசி நீர்த் துளி அது!
குஞ்சுடன் முன்னும் பின்னும் அலைந்து
சுpறுமியின் பார்வைக்குத் தப்பித் திரிந்த மரணம்
முதலில் அதன் சின்னஞ் சிறு சிறகிரண்டிலும் வந்தமர்ந்தது:
சிறகுகள் கீழே தொங்கிட மெல்ல மெல்ல நகர்ந்தது குஞ்சு:
அந்திப் பொழுதில் சாவு அதன் கழுத்தின் மீதேறி நின்றது:
ஒரு மூதாட்டி போலச் சிறகு போர்த்தி
அசைவற்றுப் படுத்தது குஞ்சு!
இரவு நெடு நேரம் வரை காத்திருந்த மரணத்தின் கரங்கள்
சிறுமி தூங்கிய பின்னர்
துண்டு நிலவும் மறைந்து வானம் இருண்ட பொழுதில்
அந்தச் சிறு உயிரைப் பறித்துப் போயிற்று!
3 comments:
இது கவிதையா அல்லது எனது இதயத்தை குத்திய கத்தியா?
இந்த பிஞ்சு கோழியின் மரணம் நடந்து விடக்கூடாதேயென்று படித்து வந்ததின் கடைசியில் அதன் மரணம்!
அதில் அழுததும் என் கண்ணீர் கேட்கிறது இத்தனை வருட என் வாழ்வில் எத்தனை கோழிகளை தின்றிருக்கிறேனென்று. தவிப்பில் இப்போது நானும் சிறகிழந்த பிஞ்சு கோழிபோல்.
மனதின் உள் ஆழத்தில் சென்று தன்னிடமுள்ள தவறை காண செய்யும் இதுபோன்ற நல்ல கவிதைகள் ஏனோ இது போன்ற சின்ன வலைப்பூவிற்குள் சிறையிடப்பட்டுள்ளதே.
குழுமங்களுக்காவது அனுப்பலாமே ?
வாழ்த்துக்கள்
என் சுரேஷ்
சில வருடங்களுக்கு முன்னர் எழுதிய கவிதை இது.உண்மைச் சம்பவம்.அந்தச் சிறுமிக்கு இப்பொழுது 8 வயது.
//கரு முகிலே! உன் துளிகள் தூவி
அதன் மேனிக்கு வலுவூட்டு!
நீல விசும்பே!உன் குரல் கொண்டு
மீளாத் துயிலிலிருந்து அதையெழுப்பு!
வீசும் பவனமே!உனது மென் கரங்களால்
மூடிய இரு கண் மூடிகளைத் திறந்து விடு!
இனிய குஞ்சே ! வலிகளைக் காலடியில் விட்டு
குணமடைந்து எழுந்து விடு://
அருமையாக எழுதியிருக்கிறீர்கள். இதே போல ஒரு குருவிக்குஞ்சின் மரணத்தை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது :( ரிஷான் இந்தக் கவிதையை அனுப்பினார். உணர்வுகளை வார்த்தைகளில் வடிப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களேதான்...
Post a Comment