அவளைப் பலவீனப் படுத்த
எல்லா வியூகங்களையும் வகுத்த பின்பும்
அவளை உள் நிறுத்தி எதற்காக
இன்னுமின்னும் வேலிகளை எழுப்புகிறாய்?

போரிலும் பகையிலும் முதல் பொருளாய்
அவளையே சூறையாடினாய்:
அவளுக்கே துயரிழைத்தாய:;
உன்னால் அனாதைகளாக்கப் பட்ட
குழந்தைகளையெல்லாம் அவளிடமே ஒப்படைத்தாய்:
தலைவனாகவும் தேவனாகவும் நீ
தலை நிமிர்ந்து நடந்தாய்

எல்லா இருள்களின் மறைவிலும்
நீயே மறைந்திருந்தாய்:
ஒளியின் முதல் கிரணத்தையும்
உன் முகத்திலேயே வாங்கிக் கொண்டாய்!

உனதடி பணிந்து தொழுவதில் அவளுக்கு
ஈடேற்றம் கிடைக்குமென்றாய்:
கலாசாரம்,பண்பாடு எனும் அரிகண்டங்களை
அவளது கழுத்தில் கௌரவமாய்ச் சூடினாய்

உனது மயக்கங்களில்
தென்றல்,மலர்,இசை...
தேவதை அம்சங்களென...
அவளிடம் கண்டவையெல்லாம் பின்னர்
மாயைகளெனப் புலம்பவும் தொடங்கினாய்

அவளிடமிருந்த அனைத்தையும் பறித்துக் கொண்டு
சிகரங்களில் ஏறி நின்றாய்
பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு காணச் சொன்னது
உனக்கு மட்டுமென எப்படிக் கொண்டாய்?