
நொந்து போன நாட்களைத் தனது
சின்னஞ்சிறு தோள்களில்
சுமந்தலைந்த சிறுமி
காலுடைந்த ஆட்டுக்குட்டியைக்
கீழிறக்கி வைத்துவிட்டு
மண்தெருவில் சிந்திக் கிடக்கும்
நெல் மணிகளைக்
குடிசைக்குள்
காவிச் சென்றிட நினைக்கிறாள்
முன்பெனில்
வயல் வரப்பொன்றில் குந்தியிருந்து
அவளது பிஞ்சுக் குரலெட்டாத்
தொலைவு வரை திரிந்து
உதிரி நெற்கதிர் பொறுக்கி வரும்
அம்மாவுக்காகக் காத்திருப்பாள்.
அம்மா திரும்பி வரும் வேளை
ஒரு முயல் குட்டியை
ஒரு செம்மறியாட்டு மந்தையை
ஒரு அபூர்வப் பறவையை
விழிகளால் துரத்தியவாறு
மாபெரிய வானத்தில் முகில் கூட்டங்களிடையே
அலைந்து கொண்டிருப்பாள்
அல்லது
நாரைக் கூட்டங்களுக்குக்
கையசைத்து விடைகொடுத்தவாறு
அவை சென்று மறையும்
மலைத்தொடர்களின் மறுபுறத்தே
என்ன இருக்குமென்ற
புதிரொன்றால் அலைக்கழிவாள்
சிறுமியின் நினைவுகளிலிருந்து
மெதுவாக நழுவுகின்றன
அந்த நாட்டுப் புறப் பாடல்களும்
பெண்கள் கூடி அறுத்தெடுக்கும் கதிர்களை
பிணையல் மாடுகள் சுற்றிச் சுழன்று
சூடடித்துக் கொடுக்கும் இரவுகளும்
இன்று
வயல்வெளிதனில் இறக்கிவிடப்பட்ட
இயந்திரப் பூதம்
வைக்கோலைத் துகள்களாக்கி
வரிசையாய்ப் பரப்பிய பின்
விதைத்தோர் கைகளில்
நெல் மூடைகளைக்
கொடுத்துப் போன கணப்பொழுதில்
சிறுமியின் அம்மாவிடம்
ஒரு பானை நிரம்பிவழிந்தது
ஏமாற்றம்
பச்சை அலைகளெனப்
பறந்து வந்த கிளிக்கூட்டங்கள்
வான் பரப்பில்
தாளமுடியா ஏமாற்றத்தைத் தீட்டித்
தொலைதூரச் சோலைகளுக்கே
திரும்பலாயின.
பூதத்தின்
பல்வரிசைக்குள்
அரைபட்டுச் சிதைந்தது
நெற் குருவியொன்றின்
கடைசி அலறல்.
உறையொன்றிலிருந்து
சிந்திவிட்டுச் சென்ற
நெல்மணிகளைக் கண்டதும்
சர்க்கரைத் துண்டு கிடைத்த
எறும்பொன்றைப் போல
எப்பாடுபட்டேனும்
எடுத்துச் சென்றிட
மொய்த்துவிட்டாள் சிறுமி.
புது அரிசிச் சோற்றின்
ஆவிபறந்திடும் கனவு
அவளது சின்னப் பீங்கானிலும்.
அள்ளிடும் தருணமெலாம்
மண்ணையும்
குறுணிக்கற்களையும்
அவள் கரங்களில்
எஞ்சவைத்து விட்டு
நெல் மணிகளோடு
நிலத்தில் ஒழுகிக் கொண்டிருந்தது காலம்
வீதி வழியேபோன
முதிய பெண்ணின்
ஆலோசனைக்குக் கட்டுப்பட்டவளாக
குடிசைக்குள் ஓடிப்போய்
சிறிய கரங்களில் நம்பிக்கை அசைந்தாடிடச்
சிரட்டையும் பையுமாக
வந்தாள் சிறுமி
தப்பிக்கமுடியாத நெல்மணிகளெல்லாம்
அவளுடன் போகலாயின
எளிய குடிசை நோக்கி
அவள் பின்னே
நொண்டிய படி செல்கிறது
காலுடைந்த ஆட்டுக்குட்டி.
ஃபஹீமாஜஹான்
2010.03.31
(நன்றி:காலச்சுவடு இதழ் 126)

ஏதுமற்ற வெளியொன்றிலிருந்து
புறப்பட்ட ஒரு புயல்
அவனைச் சூழ வீசுகிறது
அதன் உக்கிரங்களுக்கு அஞ்சி
எல்லா வாசல்களையும்
மூடிக்கொள்கிறான்
செல்லமாய் வளர்த்த
ஆட்டுக்குட்டியொன்றை
எந்தப் பாதுகாப்புமற்ற
புல்வெளியொன்றில்
கைவிட்டு வந்துள்ளான்
நாளை
கைவிடப்பட்டவர்களின் துயரங்களோடு
அந்தப் புல்வெளியில்
மேய்ந்து கொண்டிருக்கக்கூடும்
தனித்துப் போய்
துடிதுடித்துச் செத்த
ஓர் எளிய ஆன்மா

சின்னஞ்சிறு செடியெனச்
சிற்றிலைகள் அசைந்தாடிக் கொண்டிருந்த
செல்லப் பெண்ணின் வாழ்வில்
பதுங்கிப் பதுங்கி உள்நுழைந்தாய்
அவளது பசுமையின் நிறமெடுத்து
அவளுக்குள் ஒன்றித்து
மோனத்தவமிருப்பதாய்
பாசாங்கு செய்தாய்
முழு உலகும் அவளேயென்று
தலையாட்டித் தலையாட்டி வசப்படுத்தினாய்
பின்வந்த நாட்களில்
எழுந்த சிறு சலசலப்பில்
அழகு காட்டி அசைந்தவாறு
உன் காலைச் சுற்றிவந்த
நச்சுக் கொடியொன்றினுள் நீ தாவினாய்
அந்தக் கொடியின் நிறமெடுத்து
மோகித்து முயங்கிக் கிடக்க
நீண்ட பொழுது தேவைப்படவில்லை உனக்கு
உண்டு சுகித்துக் கிடந்து
ஆதியில் தொடங்கிய அதே அரிப்பெடுக்கவே
இன்னுமொரு பெரு மரத்திற்குத் தாவினாய்
இன்று
வெடிப்புக் கண்ட
பெருவிருட்சத்தின் பட்டைகளையே
கோட்டை அரண்களென எண்ணியவாறு
உதிரத் தயாராயிருக்கும்
மரப்பட்டையின் நிறமெடுத்துக்
குந்திக் கிடக்கிறாய்
அற்பப் பதர் உனக்குத்தான்
எத்தகு பவிசுகள்
அழுகிய கனிகள் சொரியும்
பட்சிகளெதும் நாடாத அம் மரத்தை
வட்டமிட்டுப் பறக்கும்
கழுகொன்றின் கூர்ந்த விழிகளில்
உனது தலைவிதியை நான் படிக்கிறேன்
மிகச் சரியான தருணத்தில்
பதறித் துடி துடித்திடக்
கால் நகங்களில் காவிப் பறக்கும்
உனக்கான இறைவனின் தீர்ப்பு
2009.12.07
(நன்றி:கல்குதிரை)
