சின்னஞ்சிறு செடியெனச்
சிற்றிலைகள் அசைந்தாடிக் கொண்டிருந்த
செல்லப் பெண்ணின் வாழ்வில்
பதுங்கிப் பதுங்கி உள்நுழைந்தாய்

அவளது பசுமையின் நிறமெடுத்து
அவளுக்குள் ஒன்றித்து
மோனத்தவமிருப்பதாய்
பாசாங்கு செய்தாய்
முழு உலகும் அவளேயென்று
தலையாட்டித் தலையாட்டி வசப்படுத்தினாய்

பின்வந்த நாட்களில்
எழுந்த சிறு சலசலப்பில்
அழகு காட்டி அசைந்தவாறு
உன் காலைச் சுற்றிவந்த
நச்சுக் கொடியொன்றினுள் நீ தாவினாய்
அந்தக் கொடியின் நிறமெடுத்து
மோகித்து முயங்கிக் கிடக்க
நீண்ட பொழுது தேவைப்படவில்லை உனக்கு
உண்டு சுகித்துக் கிடந்து
ஆதியில் தொடங்கிய அதே அரிப்பெடுக்கவே
இன்னுமொரு பெரு மரத்திற்குத் தாவினாய்


இன்று
வெடிப்புக் கண்ட
பெருவிருட்சத்தின் பட்டைகளையே
கோட்டை அரண்களென எண்ணியவாறு
உதிரத் தயாராயிருக்கும்
மரப்பட்டையின் நிறமெடுத்துக்
குந்திக் கிடக்கிறாய்
அற்பப் பதர் உனக்குத்தான்
எத்தகு பவிசுகள்


அழுகிய கனிகள் சொரியும்
பட்சிகளெதும் நாடாத அம் மரத்தை
வட்டமிட்டுப் பறக்கும்
கழுகொன்றின் கூர்ந்த விழிகளில்
உனது தலைவிதியை நான் படிக்கிறேன்
மிகச் சரியான தருணத்தில்
பதறித் துடி துடித்திடக்
கால் நகங்களில் காவிப் பறக்கும்
உனக்கான இறைவனின் தீர்ப்பு


2009.12.07
(நன்றி:கல்குதிரை)




சகோதரனே! நானறியாப் புலன்களையெல்லாம்
உணர்வுகளில் பதித்துச் செல்பவனே
எந்த மனிதன் உனது கீதங்களைத் திருடிச் சென்றான்?
கை கட்டி வாய் பொத்திக் கண்மூடி நின்று சுழலென
எந்த மனிதன் உனை நிறுத்திப் போனான்?

கட்டாயமானதொரு தருணத்தில்
காலம் உனைப் பாலைநிலத்திலிருந்து பெயர்த்துவந்து
போர் ஓய்வுகொண்ட
தாய்நிலந்தன்னில் விட்டுப் போயிற்று
அவர்கள் குழி தோண்டிப் புதைக்கும்
உண்மைகளையெல்லாம்
எடுத்தோதும் பணியொன்றைத்
தெய்வம் உன்னிடம் தந்தகன்றது
எமது எழுதுகோல்களையெல்லாம் உன் வசம் விட்டுத்
திசைகள் எட்டிலும் காத்திருக்கலானோம்

எழுதும் பெயர் எதுவாயினும்
உனதெழுத்து அதுவே என்பதை
மனதின் நாவுகள் அதிர்ந்ததிர்ந்து உள்ளுணர்வில் பறையும்
செம்பிறைக் கொடிகள் என் மனவெளியெங்கும்
படபடத்துப் படபடத்துப் பறந்தோயும்
பிறப்பிலும் இறப்பிலும் வரும் பெருநாட்களிலும்
வானில் பிறையெழுந்து எமைத் திசைப்படுத்தும்
செம்பிறை போல் நீயும் சகீ
எமை வழிகூட்டிச் செல்வாய் என

உலமாக்களும் பெரியோரும்
பல்லாண்டுத் துயில் விட்டு எழுந்திடவே இல்லை
பள்ளிவாயில்களில் கேட்கும் பிரசங்கங்களில்
சிலந்திவலைகள் தொங்கிக் கிடக்கின்றன
நல்லதோ கெட்டதோ எனத் தெரியாத கோபங்களோடு
மரணத்தின் தலைவாயில் வரைக்
கூட்டி வந்து விடப்பட்டவர் நாம்

எனதபிமானத்தை வென்றவனே!
நம் தேச எழுச்சியில் உன் பாடல் கேட்டிடவும்
இளைஞர் அணியோடு உன் பாதம் பயணித்திடவுமாய்
நண்பர்களோடு நானும் அவாவி நிற்கிறேன்

நன்றி: எங்கள் தேசம்




தூறலாய் சாரலாய்
பெரும் துளிகளாய் மாறித்
தன்னை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருந்தது
அந்தி மழை

தாளம் தப்பாத பாடல்களை
அதனதன் குரல்களில் இசைத்தபடி
களிகூர்ந்து பறக்கத் தொடங்கியிருந்தன
வானில் வந்து கூடிய மழைப்பறவைகள்

தனது கவிதைப் பொருள்களெலாம்
சிறகடித்து நனைவதை
இரசித்தவாறு
மெய்மறந்து கிடக்கிறாள் அவள்

அகப்பட்ட பசிய மரங்களையெலாம்
பூவோடும் பிஞ்சோடும் எரித்தவாறு
வழமையான தனது வழியொன்றால்
தெறித்து வந்ததொரு மின்னற் தீ
அவளைச் சூழ வீழ்ந்தோய்ந்ததும்
அக்கணத்தில் தான்

கவிதைகளை வாரிச் சுருட்டிக்கொண்டு
கண்ணெட்டாத் தொலைவுக்கப்பால்
போய் மறைந்தன மழைப் பறவைகள்

செல்லப் பறவைகள்
விடைபெற்ற இருண்ட வானத்தை
வலுக்கத்தொடங்கிய மழையில் கை விட்டுவிட்டு
அவளும் காணாமற் போயிருந்தாள்

ஃபஹீமாஜஹான்
2009.12.07

நன்றி: கல் குதிரை