
மலைச் சரிவின் பின்னால் இருந்து
சூரியன் தலைகாட்டத் தொடங்கியவுடன்
கதிர்களை இலைக் கரங்களில் ஏந்தி
நிழலை வழியவிடத் தொடங்குவாய்
எறும்புகள் போல நித்தமும் அலைகின்ற
எப்பொழுதேனும் உன் நிழலில் கூடுகின்ற
அந்தத் துடுக்கு மிக்க சிறுமியரின் தலைமுடியைக்
கிளை தாழ்த்திக் களைத்துவிட்டு
ஏதுமறியாத பாவனையுடன் அசைந்தாடுவாய்
மழை ஓய்ந்த வேளைகளில்
இலைகளில் தண்ணீரைத் தேக்கி வைத்து
அதே சிறுமியரின் முகமெங்கும்
தெளித்துக் கூத்தாடுவாய்
வானத்தைத் தாங்கிடவோவென
நெடிதுயர்ந்த கிளைகளினூடே
தூரத் திசைகளைப் பார்த்திருந்தாய்
உனது வேரடிக்கு
விஷமெடுத்து வந்த மனிதனை மட்டும் கவனியாது
கிளைகளை அசைத்த படி மரம் போல நின்றிருந்தாய்
உனது வேர்களைத் தேடி ஆயுதங்கள் சூழ்ந்த வேளை
பற்றியிருந்த மண்ணைப் பறிகொடுக்கலானாய்
மண்ணையிழந்தவர் தம் படிமங்களையும்
மொழியையும் இழப்பார்களென்று
உனது நிழலில் அமர்ந்து அந்தச் சிறுமியர் படித்த
வரலாற்று நூலை
என்றோவொரு நாளில் நீயும் கேட்டிருந்தாய்
தோண்டிய கிடங்கிலிருந்து
வேர்களால் கரையேறி வர முடியாமற்போகவே
விஷத்தைத் திணித்து
மூச்சுத் திணறும் வரைக்கும் மண்ணிட்ட
மரணத்தின் முற்றுகைக்குள் மூழ்கினாய்
உனது வேர்களை ஒடுக்கி ஒடுக்கிச் சுருட்டிய பொழுதும்
அதிர்ந்து போயிருந்த வேர்க் கண்களுக்குப்
பதுங்கிக் கொள்ளும் இடமெதுவும்
புலப்படாமலே போயிற்றோ?
இரவு முழுதும் ஓடிக் கொண்டிருந்த அருவியிடம்
உனைச் சூழ்ந்திருந்த விஷத்தைக்
கழுவிக் கொண்டோடுமாறு
மன்றாடிக் கொண்டேயிருந்தாய்
எல்லைகளைத் தாண்டமுடியாத அருவி
இடர் மீட்புக் குழுவினரின்
நிராகரிக்கப் பட்ட உதவிகளைப் போல
மணற்கரைகளை நனைத்துத் திரும்பலாயிற்று
சுவர்க்கத்தின் வாயில்கள் மூடப்பட்ட அதிகாலையில்
எங்கிருந்தோ மழையைச் சுமந்து வந்து
கருமுகில்கள் பொழிந்தன
அந்த மழைக்குக் கருணையே இல்லாதிருந்தது
மழை நீரில் கரைந்தூறிய நஞ்சை
வேறு வழியற்று
உன் மெல்லிய வேர்களில் நிரப்பலானாய்
பின்னர்
அன்னையர் போலத் தாங்கி நின்ற கிளைகளுக்கும்
பருவமொன்றின் கனவுகளுடன் பூத்திருந்த மலர்களுக்கும்
விஷத்தை எடுத்துச் சென்றாய்
சின்னஞ் சிறு குழந்தையின் பிஞ்சுக் கரங்களை நிகர்த்த
பசிய தளிர்களுக்கெல்லாம் நஞ்சைப் புகட்டிய பொழுது
பிரலாபித்து அழத் தொடங்கினாய்
இரகசியமாக ஊடுரும் உனது வேர்கள்
கட்டுமானங்களைத் தகர்ப்பதாயும்
அடர்ந்து வளர்ந்த கிளைகள்
விஷ ஜந்துக்களைப் பேணிக் காப்பதாயும்
புனையப் பட்ட கதைகளை எப்பொழுதும்
ஏற்க மறுத்தாய்
உடலெங்கும் ஊர்ந்து செல்லும் மரணத்தின் எதிரிலும்
உறுதி கொண்ட வீரத்துடன் வீழாமல் நின்றாய்
வானம் கைவிட்டதையும்
பூமி சிறைப் படுத்தியதையும்
காப்பாற்றிட முடியாத சூரியன் பரபரப்புடன்
தெருவழியே அலைந்து திரிந்ததையும்
நீலம் பாரித்த அலைகளினூடே
இறுதியாகக் கண்டிருப்பாய்
(நன்றி: அம்ருதா)

நம்மெதிரே வீழ்ந்து கிடக்கிறது
காலத்தின் பிறிதொரு முகம்
இன்று
மீளவும் பழைய ஆரோக்கியத்திடம்
மீண்டுள்ளேன்
முதன் முறையாக
நிறைவு செய்யப்பட்ட வசனமொன்றை
உன்னிடம் ஒப்பிக்கிறேன்
அதே புன்னகையை மறுபடியும்
எடுத்து வைக்க முடியாமல்
விலகிச் செல்கிறேன்
மகத்தான பொறுமையொன்றின்
காத்திருப்பைக் கண்டு கண்டே
புறக்கணிப்புக்களை வளர விட்டிருந்தாய்
மனதில் பதிந்த உனது நிழல்
சிதறிய வாசனைத் திரவியம் போல
மெல்ல மெல்ல மறைந்தே போயிற்று
நீ உரிமை கொண்டாடிய
எல்லாவற்றிலிருந்தும்
எனை விடுவித்துக் கொண்டேன்
துயரத்தில் பதை பதைத்த சொற்களையும்
துரோகத்தால் நசுங்குண்ட சத்தியங்களையும்
உனது சுவர்களக்குள்ளேயே விட்டு விட்டு
வெளியேறிப் போகிறேன்
இப்பொழுதும்
ஆதித்திமிர் தடுத்திட உன்னிடம் எஞ்சியுள்ளது
ஒரு சொல்
விதி தனது கண்ணீரை வழிய விட்டசொல்
நாம் நமக்குக் கிடைத்திடக் காத்திருந்த
கடைசிச் சொல்

தான் மாத்திரம் உணரக் கூடிய மொழியில்
கதைத்துக் கொண்டிருந்த
சின்னஞ்சிறு நாற்றுக்களைச்
சிறுமி
குழந்தையைத் தூளியில் கிடத்தும் பக்குவத்தோடு
குழிகளில் நட்டிருந்தாள்
ஆற்றோர மூங்கில்களின் கீதங்களைக் கேட்டவாறு
கதை பேசிப் பேசி அவளுடன்
அவைகள் வளர்ந்தன
"காலையில் வா
அற்புதமொன்றுடன் காத்திருப்போம்'
எனக் கூறி
ஒவ்வொரு மாலையிலும்
அவளை வழியனுப்பி வைத்தன
சூரியனுக்கு முன்னால் அவள் எழுவாள்
பின்னர்
நீள நீள நிழல்களை விழவிடும்
மஞ்சள் வண்ணக் கிரணங்களுடன்
தோப்பினுள் நுழைவாள்
தூர வரும் போதே கண்டு கொள்ளும்
மூங்கில் புதர்களெல்லாம்
தாளத்துடன் அசைந்தாடி
அவளை வரவேற்கும்
ஒரு தளிரையோ
பூவையோ பிஞ்சையோ
அவளுக்குக் காட்டிடவே
செடிகளெலாம் காத்திருக்கும்
தாள முடியாத இன்பம் பொங்கிட
ஆற்றை நோக்கி ஓடுவாள் சிறுமி
சலசலத்தோடும் தெள்ளிய நீரைச்
சிறிய வாளிக்குள் பிடித்து வருவாள்
வாளி கொள்ளா உற்சாகத்துடன்
துள்ளிப் பாயும் தண்ணீர்
மீன்கள் நிரம்பிய அவளது
சின்னச் சட்டையை
நனைத்து நனைத்துக் கூத்தாடும்
செடிகளின் வேரடியில் அவள்
தண்ணீரைப் பாய்ச்சும் வேளை
இசையுடன் பாய்ந்தோடும்
வரும் வழி நீள
நதி நனைத்துச் சுமந்து வந்த
பல்லாயிரம் வேர்களின் மொழிகள்
பின் அவை
பூக்களில் கவிதைகளை வரைந்தவாறு
அவள் போலவே வளரும்
(நன்றி: அம்ருதா)
