எங்கும் வியாபித்து அரசாட்சி செய்தது இருள்:
அடர்ந்து செறிந்த இருளினூடு சிள்ளுடுகளும் தவளைகளும்
தமதிருப்பைச் சொல்லித் தயங்கித் தயங்கி ஒலித்தன
மயான அமைதி பூண்ட சூழலைத் தகர்த்தவாறு
வீதியில் ஓடும் காலடிச் சத்தம்-அச்சத்தினூடு
என் கேட்டல் எல்லையினுள் வளர்ந்து தேய்கிறது.
பின் தொடரும் அதிர்ந்து செல்லும் வண்டியில்
அவர்கள் வலம் வருகிறார்கள் போலும்
ஓடிய அந்தப் பாதங்கள் எந்தச் சந்து தேடி ஒளிந்தனவோ?
உருத்தெரியா அந்தக் காலடிகளுக்காக உள்ளம் துடித்தழுதது
அச்சம் கலந்து பிசைந்து விழுங்கிய உணவும்
பீதியுடன் தொண்டைக் குழிக்குள் இறங்கிய நீரும்
பிசாசுகளை எண்ணிப் பயந்ததில் தீய்ந்து விட்டன
அந்த வேளைதனில் உனை ஏன் நினைத்தேன் என்று தெரியவில்லை
அன்று மழை ஓய்ந்த அந்திப் பொழுதில்
அவர்கள் வந்து போயிருக்க வேண்டும்
எமது கல்லூரி முற்றவெளியெங்கும் வரிசை பிசகாத
சப்பாத்துக் கால்களின் சுவடுகள் எஞ்சியிருந்தன.
இரத்தக் கறைதோய்ந்த மண்டபத்து மூலையறைச் சுவர் மீது
புதிய தடயங்களை கண்ணிரண்டும்
பயத்துடனே தேடி நடுநடுங்கின.
என் விழிகளுக்குள் வெளவால்கள் சடசடத்துப் பறந்தன
ஆதிரை:
கடைசியாக நீ கல்லூரி வந்ததினம்
அதுவென்றுதான் நினைக்கிறேன்
அன்று சிரித்திடவே இல்லை நீ
சிந்தனை வயப் பட்ட முகத்துடன்
கல்லூரி வளவெங்கும் அலைந்து திரிந்தாய்
பின்னர் நான் பார்க்க நேர்ந்த போராளிகளின் படங்களிலெல்லாம்
உன் முகத்தைத் தேடித் தோற்றேன்
இறுகிய முகக் கோலத்தை எப்படிப் பொறுத்தினாயோ?
நெஞ்சிலும் முதுகிலும் ஏதேதோ நிரப்பிய பைகளுடன்
சுடுகலன் ஏந்திய சிலை முகத்தைக் கற்பனை செய்து
பெருமூச்செறிந்தேன்: நீ இனி வரப் போவதில்லை
துப்பாக்கி வரைந்த உன் இரசாயனவியல் குறிப்பேட்டைப்
பத்திரப் படுத்திவைத்துள்ளேன்.
பாடத்தைவிட்டு உன் கவனம் திசைமாறிய தருணங்களில்
ஓரங்களில் நீ எழுதியுள்ள வாசகங்கள்
விட்டு விடுதலையாகும் உன் சுதந்திரக் கனவைச் சொல்கின்றன
உன் நகர்வுகளை மோப்பம் பிடிக்கும்
அறிமுகமற்ற சப்பாத்துக் கால்கள்
சனியன்களால் ஆட்டுவிக்கப்படும் நாளைகளிலும்
எமது வாழிடங்களில் பதிந்து செல்லலாம்
நீ கவனமாயிருந்து இலட்சியத்தை வெற்றிகொள்
பஹீமாஜஹான்
(2001-மூன்றாவது மனிதன்)
16 comments:
அன்பின் சகோதரி பஹீமா ஜஹான்,
//இறுகிய முகக் கோலத்தை எப்படிப் பொறுத்தினாயோ?
நெஞ்சிலும் முதுகிலும் ஏதேதோ நிரப்பிய பைகளுடன்
சுடுகலன் ஏந்திய சிலை முகத்தைக் கற்பனை செய்து
பெருமூச்செறிந்தேன்: நீ இனி வரப் போவதில்லை //
இப்படியாக எத்தனை,எத்தனையோ நெருப்பு நிலவுகள் தம்மை எரித்து,உலகிற்கு வெளிச்சம்தரப் போராடிக்கொண்டிருக்கின்றன.
மிக மிக ஆழமான,ஆவணப்படுத்தப்பட வேண்டிய,அருமையான கவிதை சகோதரி.
மிக நீண்ட நாட்களின் பின் (3 மாதங்கள்) வலைப்பதிவுக்குள் நுழைந்திருக்கிறீர்கள்.
இவ்வளவு தாமதங்கள் கூடாது.
வாரமொரு கவிதை இடுங்கள்.
Dear Faheema,
All your poems are wonderful...!
Keep it up always...
I want to get your poem book that you published ( I think the book name is: KADAL NEER OOTRU) pls let me know how to get that poem book from you.
Regards.
Azhar.
From - Colombo.
அன்பு பஹிமா ஜஹான்,
இன்ன வரிகள் என்று இல்லாமல் அனைத்து வரிகளும் அருமை..
நல்ல கவிதை..
நம் சகோதரர்களின் வாழ்வியல் வலி தெரிகிறது.. என் மனதிலும் வலிக்கிறது..
வாருங்கள் ரிஷான்.
கருத்துக்கு நன்றி
"மிக நீண்ட நாட்களின் பின் (3 மாதங்கள்) வலைப்பதிவுக்குள் நுழைந்திருக்கிறீர்கள்.
இவ்வளவு தாமதங்கள் கூடாது.
வாரமொரு கவிதை இடுங்கள்"
உங்கள் ஆர்வம் மகிழ்ச்சிதருகிறது.
பார்ப்போம்
அஸ்ஹர்
வாருங்கள்
முதல் முறையாக வந்திருக்கிறீர்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
எனது தொகுதியின் பெயர் "ஒரு கடல் நீரூற்றி"
தொகுதியை பனிக்குடம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இலங்கையில் நூல் கிடைக்குமா என்பது பற்றித் தெரியாது.என்னிடமும் மேலதிக பிரதிகள் இல்லை.(வந்து சேர்ந்த பிரதிகளை நண்பர்களுக்கு அனுப்பிவிட்டேன்)
வாருங்கள் கோகுலன்
உங்கள் கருத்துக்கு நன்றி.
உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது
கவிதையைப் படிக்கும் பொழுது தொண்டையை அடைக்கிறதே... அப்பப்பா... சோகத்தை சோற்றுக்குள் வைத்து விழுங்கு என்று ஊரில் சொல்வார்கள். ஆனால் அச்சத்தைச் சோற்றிலும் பீதியை நீரிலும் கலந்து உண்டால்....நினைக்கவே அச்சமூட்டும் சூழல் என்பதை எளிதாகப் புரிய வைத்து விட்டீர்கள். நல்ல கவிதை. நன்று.
"சனியன்களால் ஆட்டுவிக்கப்படும் நாளைகளிலும்
எமது வாழிடங்களில் பதிந்து செல்லலாம்
நீ கவனமாயிருந்து இலட்சியத்தை வெற்றிகொள்"
விரக்திக்கு ஆட்கொடாது, நம்பிக்கைகளை மட்டுமே துணைகொள்ள வேண்டுமென எப்போதும் போல இப்போதும் தோன்றுகிறது ஆனாலும் இன்றைய நிகழ்வுகள் நெருஞ்சி முட்களாய் குத்துகையில் வலி தோன்றாமலில்லை.. காலம் வரும் அதுவரை வலியையும் வாழ்வையும் பொறுத்திருத்தலே வலிமை... ஆழ்ந்த கவிதை.. அடிக்கடி எழுதுங்கள் தோழி..
வாருங்கள் g.ragavan
"சோகத்தை சோற்றுக்குள் வைத்து விழுங்கு என்று ஊரில் சொல்வார்கள்"
அப்படி விழுங்கிவிட முடியுமாக இருந்தால் எவ்வளவு நல்லது.ஆனால் முடிகிறதா?
உங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி தருகிறது.
வாருங்கள் கிருத்திகா
"காலம் வரும் அதுவரை வலியையும் வாழ்வையும் பொறுத்திருத்தலே வலிமை... "
அப்படி வலியைத் தாங்கி வாழ்பவர்களின் வேதனையின் பளு மிகவும் மோசமானது இல்லையா?
வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட துயரங்களோடு மக்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.எங்களிடம் அவற்றை விபரிக்கக் கூடிய சொற்கள் இல்லை
வலி தாங்கி வரும் சொற்களே அதனைத் தாங்காமல் தள்ளாடுவது போல் ஒரு பிரமை.. ஆழமான உணர்வுகளை அற்புதமாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்.
வாருங்கள் கவிநயா
"வலி தாங்கி வரும் சொற்களே அதனைத் தாங்காமல் தள்ளாடுவது போல் ஒரு பிரமை.."
நான் சொன்னவைகளுக்கு அப்பால் உண்மையான துயரம் தேங்கிக் கிடக்கிறது.
உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது.
தினக்குரலில் உங்களுடைய வலைத்தள விபரம் அறிந்தேன். அன்றைய தினமே இங்கு வந்து பார்த்தபோது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நேரமின்மை காரணமாக எந்தக் கவிதைக்கும் பின்னனூட்டம் இடமுடியவில்லை. எழுத்தாக்கமும் நடைமுகாமைத்துவமும் கருத்தை கருத்தாக சொல்வதிலும் ஆழத்தை தெளிவுபடுத்துவதிலும் உருவத்தை உருவகப்படுத்துவதற்கும் அவசியம் என்பார்கள். அதனை உங்களுடைய பல கவிதைகளில் காண்கிறேன். அன்புத் தோழர் ரிஷானின் கவிதைகளும் அவ்வாறே நான் பலருடன் பெருமைபட்டுக் கூறியிருக்கிறேன்.
//அச்சம் கலந்து பிசைந்து விழுங்கிய உணவும்
பீதியுடன் தொண்டைக் குழிக்குள் இறங்கிய நீரும்
பிசாசுகளை எண்ணிப் பயந்ததில் தீய்ந்து விட்டன
அந்த வேளைதனில் உனை ஏன் நினைத்தேன் என்று தெரியவில்லை
//
அருமையான வரிகள். தொடர்ந்து எழுதுங்கள்.
நிர்ஷன் வாருங்கள்
"எழுத்தாக்கமும் நடைமுகாமைத்துவமும் கருத்தை கருத்தாக சொல்வதிலும் ஆழத்தை தெளிவுபடுத்துவதிலும் உருவத்தை உருவகப்படுத்துவதற்கும் அவசியம் என்பார்கள். அதனை உங்களுடைய பல கவிதைகளில் காண்கிறேன்"
பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை.என்னால் முடிந்தது இவ்வளவும் தானென நினைக்கிறேன்.
உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது நிர்ஷன்.
கவிதையின் பின்னோக்கு (பிளாஷ்பேக்)உத்தி அருமையாக உள்ளது. கவிதை ஒரு படமாக கண்முன் விரிகிறது.
ஆள் தேடலும் வன்முறையும் நிறைந்த அந்த அடக்குமுறைகளை அற்புதமாக காட்டியுள்ளீர்கள்.
ஒரு குறும்படத்தை கண்டுதுபோல மனதில் தங்கிவிட்டது அந்த காட்சிகள்.
வாருங்கள் ஜமாலன் அவர்களே,
"கவிதையின் பின்னோக்கு (பிளாஷ்பேக்)உத்தி அருமையாக உள்ளது. கவிதை ஒரு படமாக கண்முன் விரிகிறது."
உங்கள் கருத்து தெம்பூட்டுகிறது.
உங்களது வருகையும் கருத்தும் மகிழ்ச்சியைத் தருகிறது.
Post a Comment