தோட்டம்:
அறுவடை ஓய்ந்த வயல் வரப்புகளில்
மந்தைகள் மேயவரும் காலங்களில்
கோடை தன் மூச்சைக் கட்டவிழ்க்கும்
ஆற்றங்கரைத் தோட்டத்துப் பசுமையும் கருகும்.
"தண்ணீர் தேடிப் பாம்பலையும்
காட்டில் திரியாதே"
அம்மம்மாவின் கவனம் பிசகும் கணமொன்றில்
பதுங்கிப் பதுங்கி நோட்டம்விட்டுத்
தோட்டம் பார்த்து ஓட்டமெடுப்பேன்.
அச்சம் தவிர்த்திடவும் கொய்யா பறித்திடவுமாய்
கையிலே ஓர் தடி
அத் தடியையும் செருப்பொரு சோடியையும்
மரத்தடியில் விட்டுக்
கிளையொன்றில் அமர்ந்து கொள்வேன்.
கற்பனையும் பாடலும் தோட்டமெங்கிலும் பரவி
பள்ளத்தே பாய்ந்தோடும் ஆற்றிலும் கரைந்தோடும்.
ஆறு:
ஆற்றின் நீரோட்டம் படிப்படியாக வற்றி
கோடையின் உச்சத்தில் நரைத்த தேகம் பூணும்
மாலைப் பொழுதொன்றில்,
தாம்பூலமிடித்து வாயிலேதரித்து வீட்டைப் பூட்டிச்
சேலைத் தலைப்பில் சாவியை முடிந்து சொருகி இடுப்பில்
தீர்க்கதரிசனத்துடன் புறப்படுவாள் அம்மம்மா
மண்வெட்டியை ஊன்றி ஊன்றி.
காரணம் கேட்டு நிற்கும் என்னிடமோ
புதையல் அகழ்ந்திடப் போவதாய்க் கூறி நடப்பாள்.
நானும் தொடர்வேன்,
தோட்டத்து ஒற்றையடிப் பாதையின் சருகுகளைச்
சிறு மண் வெட்டியால் இழுத்தவாறு
அவள் பின்னே
புதையல்:
அத்திமரத்தின் கீழே
கருநிறப் பாசி படர்ந்து
நீர்ப் பூச்சிகள் சருக்கள் நிகழ்த்தும்
நீர் தேங்கிய மணலை அகழத் தொடங்குகையில்
வெண்ணிற மணலோடு
சலசலத்து ஊறும் குளிர் நீர்
ஊறிவரும் நீரை வழிந்தோட வைக்கும்
கால்வாய் அமைப்பையும் அவளே அறிவாள்.
அத்தியின் கிளைகள் ஆடும்
தெள்ளிய நீர்ச்சுனையை
உருவாக்கிய பெருமிதத்துடன்
மாலை இருளை ஆற்றில் விட்டுக்
கரையேறி வீடடைவோம் சிறுமியும் பாட்டியும்.
நாசகாரன்:
பின்னாளில்
எல்லோரும் வந்தங்கே துவைப்பர் குளிப்பர்.
இடையிடையே உயர்ந்த ஆற்றங் கரையின்
மூங்கில் மரங்களின் மறைவில் நின்று
வந்திருப்பவரை அடையாளங் கண்டு திரும்புவாள் பாட்டி.
பின்னும்
கண்காணிப்புத் தவறிய இடைவெளியில் வந்து
படுகுழி தோண்டி வைத்துப் போயிருப்பான்
அவளது வடிகாலமைப்பு ஞானத்தின் துளியும் வாய்க்காத
அற்பப் பயலொருவன்.
தெளிந்த நீர் ஊற்றுக் குட்டையாக மாறி
அழுக்கு நீர் சுற்றிச் சுழலுமங்கே
நாசமறுத்த பயலவனை முனிந்த படி
மீளவும் புணரமைப்பாள் வியர்வை வழிந்திட அம்மை.
(கலைமுகம் இதழுக்காக எழுதியது)
பஹீமாஜஹான்
20 comments:
பஹீமா,
கண்கொள்ளா அழகாய் வெகு கவர்ச்சியாய் வடிவமைக்கப்பட்டுள்ளது உங்கள் வலைப்பூ!
ஒரு குறும்படம் கண்டதுபோல் இருக்கிறது ஊற்றுக்களை வரவழைப்பவள்!
வாழ்த்துக்கள்
ஆற்றங்கரை ஞாபகங்கள் அனைவருக்கும் வாய்ப்பதில்லை.
அந்தவகையில் நான் அதிஷ்டக்காரன்,எனக்கும் வாய்த்திருக்கிறது.
அந்த நாட்களில் வீட்டில் ஆற்றுக்குத் தனியாக அனுப்புவதில்லை.என் வகுப்புச்சிறுவர்களுடன் விடுமுறை நாட்கள் ஆற்றில் கரையும்.
மீன்குஞ்சு எனச் சொல்லித் தவளைக்குஞ்சுகளைப் பிடித்துச் சிரட்டையில் சேமிப்போம்.
நேரம் செல்லச்செல்ல விழிநிறையப் பதற்றத்தோடு அம்மம்மா வருவார்.
ஒரு பெருமூச்சோடு சேலைத்தலைப்பில் தலை துவட்டி வீடு நோக்கி அழைத்துச்செல்வார்.
கரை நோக்கி வளைந்த மூங்கில்கள் சூழ்ந்த ஒரு ஆற்றங்கரை வீடும்,அம்மம்மாவின் அரவணைப்புமான பால்யகாலங்கள் ஆழச் செதுக்கப்பட்டிருக்கின்றன உங்கள் மனதில்.
ஒரு நல்ல படைப்பு பார்ப்பவரின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தவேண்டும்.சில கணமாவது சிந்திக்கச் செய்யவேண்டுமென்பது என் கருத்து.
அந்த வகையில் நீங்கள் வெற்றிபெற்று விட்டீர்கள் சகோதரி.
எனது அழகிய பால்யத்தின் நாட்களை எண்ணிப்பார்க்கச் செய்கிறது உங்கள்
ஊற்றுக்களை வரவழைப்பவள்.
நன்றிகளோடு இனிய வாழ்த்துக்கள்.
வாருங்கள் புஹாரி அவர்களே
நீண்ட இடைவெளியின் பின்னர் ...
"கண்கொள்ளா அழகாய் வெகு கவர்ச்சியாய் வடிவமைக்கப்பட்டுள்ளது உங்கள் வலைப்பூ"
நான் யுனிகோட் எழுதுவதில் உங்களுக்கு எவ்வளவு பங்களிப்பு உள்ளதோ அதைப் போலவே மேலேயுள்ள பாராட்டுக்கள்
தம்பி ரிஷான் ஷெரீப் இற்கு உரியவை.
"ஒரு குறும்படம் கண்டதுபோல் இருக்கிறது ஊற்றுக்களை வரவழைப்பவள்"
உங்கள் கருத்துக்கும் வரவுக்கும் மிக்க நன்றி.
வாருங்கள் ரிஷான் ஷெரீப்,
எனது அனுபவத்தை ஒத்த அனுபவங்கள் உங்களுக்கும் இருக்கின்றன.அந்தக் காலத்துக்கு மீண்டும் ஒரு போதுமே திரும்ப முடியாததன் ஏக்கம் எல்லோரிடமும் இருக்கும் அல்லவா?
உங்கள் வரவுக்கும் கருத்துக்களுக்கும்
மிக்க நன்றி
மிகவும் அழகிய வரிகள்..உங்கள் வலைப்பக்கத்தைப் போலவே..
உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும்
நன்றிகள் பாச மலரே ....
ஒரு சில பதிவுகள் சொல்லவேண்டியதை நறுக்கென்ற கவிதைக்குள் அடக்கி விட்டீர்கள், அருமை, ரசித்தேன்
வாருங்கள் பிரபா
உங்கள் வரவும் கருத்தும் மகிழ்ச்சி தருகிறது.
நன்றி.
மிளவும் வம்புக்காய் நுழைகிறேன். ஏற்கனவே நடந்த வம்பின் விளைவு..
http://yenathulakam.blogspot.com/ ல் உள்ளது.
இப்போது அம்மம்மா என்ற சொல் பற்றியது.பஹீமாஜஹானின் "ஊற்றுக்களை வரவழைப்பவள்"லில்,
தோட்டம்:
[[அம்மம்மாவின் கவனம் பிசகும் கணமொன்றில்]]
ஆறு:
[[தீர்க்கதரிசனத்துடன் புறப்படுவாள் அம்மம்மா ]]என்பதுவும்,
நண்பர் எம்.ரிஷான் ஷெரீபின் பின்னூட்டத்தில்,
[[நேரம் செல்லச்செல்ல விழிநிறையப் பதற்றத்தோடு அம்மம்மா வருவார்.]]
[[கரை நோக்கி வளைந்த மூங்கில்கள் சூழ்ந்த ஒரு ஆற்றங்கரை வீடும், அம்மம்மாவின்]] என்பதுவும் பற்றி கதைக்க நாடுகிறேன்.
இந்த சொற்களை வைத்துப்பார்க்கின்ற போது உங்களின் சாதாரண சொற்களிற்குள்ளே தலைகாட்டுகின்ற தமிழ் கலாசாரத்தின் ஊடுறுவலினைக்கான முடிகிறது. உம்மும்மா என்ற நமக்கேயான சொல் எப்படி அம்மம்மாவாகிற்று..?
அல்லது உங்களின் உம்மாவைக்கூட அம்மா என்றா நீங்கள் அழைக்கிறீர்கள்
? உம்மி என்ற அராபிய சொல்லின் தழுவலாக நமக்கு உம்மா கிடைத்து என்றுதான் நான் அறிந்துள்ளேன். ஆக, அழகான உம்மும்மா நமக்கு இருக்கும் போது இன்னொருத்தரின் அம்மம்மா எதற்கு தோழர்களே.....
அல்லது உங்களின் வரி அழகிற்காய்/ அனைவரிற்கும் விளங்கட்டும் என்ற பரந்த நோக்கில் எழுதப்பட்டுள்ளதா...
அப்படியாயினும்..
அவர்களின் அம்மம்மா நமக்கு தெரிகிறது ஆனால் நமது உம்மும்மாவை அவர்களிற்கு முன்னே மறைத்துவிடுகிறோமல்லவா..?
தமிழ் நண்பர்கள் இதனை உங்களுக்கான எதிர் கருத்தாய் பார்க்க வேண்டாம். உங்களில் ஒருவர் உம்மா என்பதன் பின்னான அரசியல் கஷ்டமானதல்லவா?
உரையாடுவோம்,
http://farzanpirathihal.blogspot.com/
http://yenathulakam.blogspot.com/
great poem...
www.shiblypoems.blogspot.com
பர்ஸான்,
நான் எனது தாயின் தாயாரை "உம்மும்மமா" என்று கூப்பிடவில்லை. மற்றவர்களிடம் கதைக்கும் போது மாத்திரமே "உம்மும்மா" என்றசொல்லையும் "அம்மம்மா" என்ற சொல்லையும் பயன்படுத்துவேன்.எனவே மேலே குறிப்பிட்ட இரு சொற்களும் எனது மனதுக்கு நெருக்கமான சொற்கள் அல்ல.
பெரும்பாலும் எனது கவிதைகளில் தமிழ்ச் சொற்களையே பயன்படுத்துவதால் உறவுகளையும் தமிழிலேயே எழுதுகிறேன்.
"இந்த சொற்களை வைத்துப்பார்க்கின்ற போது உங்களின் சாதாரண சொற்களிற்குள்ளே தலைகாட்டுகின்ற தமிழ் கலாசாரத்தின் ஊடுறுவலினைக்கான முடிகிறது"
எனது தாய் மொழி தமிழ் என்பதால் நான் இன்னும் தமிழில் தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.தமிழர்களின் மொழி,முஸ்லிம்களின் மொழி என தமிழை நான் பிரித்துப் பார்க்கவில்லை.
தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவது தமிழ் கலாசாரத்தின் ஊடுருவல் எனின் மற்றவர்கள் என்ன அரபுத் தமிழிலா கவிதை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்?
ஷிப்லி
உங்கள் வருகைக்கு நன்றி
பர்ஸான்,இதில் வாதம் செய்ய என்ன இருக்கிறது எனப் புரியவில்லை.
முதலில் நான் கேட்பதற்குப் பதில் சொல்லுங்கள்.
உங்கள் வீட்டில் உம்மும்மா,வாப்பும்மா,உம்மா,வாப்பா,நானா அல்லது காக்கா இவர்களைத் தவிர மற்ற வீட்டு உறுப்பினர்களை நீங்கள் எப்படிக் கூப்பிடுகிறீர்கள்?
அப்பா(உம்மும்மா அல்லது வாப்பும்மாவின் கணவர்) ,தங்கை அல்லது தங்கச்சி,தம்பி இவர்களை நீங்கள் என்ன அறபு மொழியிலா அழைக்கிறீர்கள்?
அப்படியானால் நீங்கள் சொல்வது போல்
//இந்த சொற்களை வைத்துப்பார்க்கின்ற போது உங்களின் சாதாரண சொற்களிற்குள்ளே தலைகாட்டுகின்ற தமிழ் கலாசாரத்தின் ஊடுறுவலினைக்கான முடிகிறது//.
தமிழ் வாசிக்கத் தெரிந்த,தமிழ் தெரிந்த அத்தனை பேருக்கும் எமது எழுத்துக்கள் சென்றடையவேண்டும் என்றுதான் நாம் எழுதுகிறோம்.
நாம் எழுதுவது அரபு இலக்கியத்தின் கீழ் பதியப்படப்போவதில்லை.தமிழ் மொழி இலக்கியத்தின் கீழ்த் தானே வரும்.அப்படியிருக்க தமிழை வாசிக்கும் அத்தனை பேருக்கும் புரியும்படி எழுதுவதில் என்ன தவறு இருக்கிறது?
நீங்கள் சொல்வது போல் இங்கு 'அம்மம்மா' வரும் இடத்திற்கு அப்பா (உம்மம்மாவின் கணவரை எங்கள் ஊரில் முஸ்லிம்கள் இப்படித்தான் அழைக்கிறார்கள்.)என்று இட்டு கவிதை எழுதிப்பாருங்கள்.எமது நாட்டவர் தாண்டி இக்கவிதையைப் படிக்கும் அனேகர் தனது தந்தையைத்தான் கவிதையில் சொல்வதாய்க் கருதிக் குழப்பிக்கொள்ளக் கூடும்.
எந்த ஒரு மனிதனும் தனது அத்தனை வேலைகளுக்கு மத்தியிலும் ஒரு கவிதையைப் படிப்பதென்பது ஒரு மன அமைதிக்காகத்தான்.
ஆகவே எந்த ஒரு கவிதையும் படிப்பவனுக்குத் தெளிவைத்தான் ஏற்படுத்தவேண்டுமேயன்றி குழப்பத்தையல்ல.அந்தவகையிலேயே இங்கு 'அம்மம்மா' என்ற சொல்லை சகோதரியும்,நானும் பயன்படுத்தியிருக்கிறோம்.
உண்மையில் நான் எனது உம்மும்மாவை 'ஆச்சி'என்றே அழைப்பேன்.
நண்பரே,உங்களை நான் மதிக்கிறேன்.
ஆனால் உங்களிடமிருந்து இப்படியானதொரு வீணான விவாதத்தை நான் எதிர்பார்த்திருக்கவில்லை.
எனது வம்பின் அரசியலை புரிந்து கொண்டு அது குறிப்பிடும் அரசியல் பங்கினைப்பற்றி மிகுந்த ஆர்வத்துடன் தனிப்பட்ட ரீதியிலும் அஞ்ஞல் செய்தவர்களிற்கும்,நான் குறிப்பிட்ட சொல்லரசியல் பண்பாட்டினது அச்சமளிக்கும் தாக்கவீதத்தின் குறைந்த அளவுப்பார்வை பற்றி உரையாட ஆரம்பித்துள்ள அனைத்து நண்பர்களிற்கும் நன்றிகள்.
ஒரு தோழர் -- நமது சொந்த மொழி பற்றியும் அதன் தூய அடையாளம் பற்றியும் மிக வலிமையாக நாமின்னும் உரைக்கத் தொடங்காததன் வேதனையை இந்த சகோதரரின் புரிதலிலிருந்து அனுபவித்தேன் -- என்றார்.
ஆனால் நண்பர், பஹீமாஜஹான், எம்.ரிஷான் ஷெரீப் குறிப்பிட்ட விடயங்களும் மின்னஞ்ஞலில் நண்பர்கள் கதைத்தவைகளும் நண்பர் அப்துல் றசாக் எடுத்து வைத்த விவாதங்களும் இது பற்றிய பயணத்தினை வேகப்படுத்திவிட்டது. சற்று ஆராயத்தொடங்கும் போது நமது பண்டிதப்பெருமக்களை நடுவீதியில் நிறுத்த வேண்டிவருகிறது நண்பர்களே. தினமும் என்னை சந்திக்கும் நண்பர்களிற்கு இன்றைய என் வேலைப்பழுவின் சுமை தெரியும். என்றாலும் ஒரு நீண்ட ஆய்வின் பக்கம் என்னை அழைத்துச்சென்ற இந்த விவாதினை மதிக்கிறேன். நண்பர்கள் தொடர்ந்தும் உரையாடுமாறு அழைக்கிறேன்.
அன்புச் சகோதரி பஹீமா..
நிறையவே அச்சில்தான் உங்களை வாசித்திருக்கிறேன்....
இப்பொழுது வலையிலும் வந்துவிட்டீர்கள்..
வாசிக்கிறேன்....
வாழ்த்துக்கள்...
குயில்..
வாருங்கள் குயில்
வசந்த காலத்துடன் வந்திருக்கிறீர்கள் :)
வாழ்த்துக்கு நன்றி
i will publish a poem book insha allah 23rd og april....how can i send my book you?
உங்கள் ஆற்றங்கரையோர இளமை அனுபவங்கள் ரசித்து மகிழ வைக்கின்றன. எங்களுக்கு இப்படி ஒரு அனுபவம் கிட்டவில்லையே என ஏங்க வைக்கிறது உங்கள் வரிகள். பாராட்டுக்கள்.
டாக்டர் முருகானந்தன் அவர்களே
உங்கள் வரவு மிக்க மகிழ்ச்சி தருகிறது
உங்கள் கருத்துக்கு நன்றி.
Post a Comment