என்ன சொல்கிறாய்?

எமது முற்றவெளி மீது

யுத்தத்தின் கரு நிழல்கள்

நெளிந்துவரத் தொடங்கிய வேளை

எமது வாழ்வின்

துயர் மிகு அத்தியாயம் எழுதப் படலாயிற்று!

திடீரென ஊரின் எல்லை கடந்து-நீ

தொலை தூரமேகியதன் பின்

வந்த நாட்களில் இருளடர்ந்த இரவுகள்

யாவிலும் எமது வாழிடமெங்கும்

உனைத்தேடி ஏமாந்து திரும்பினார்கள்!

அதன் பின் நிகழ்ந்த

பிரளயப் பொழுதில்எங்கள் குடிமனைகளுக்கு

மேலாகப் பறந்த

இயந்திரப் பிசாசுகள்

அதிரும் ஓசையுடன்

அச்சத்தைப் பொழிந்தன.

மரக்கிளைகள் சுழன்று

அசைந்ததில் சிதறுண்டு பறந்த

பறவைக் கூட்டங்களோடு

எமதினிய இளைஞர்களும்

காணாமற் போயினர்.

துன்பம் பல சுமந்து

முன்னோர்கள்

தேடி வைத்தவை யாவும்

எம்மிடமிருந்து பறிக்கப்பட்டு

நாசமாக்கப் பட்டன.

ஆனந்த அலை பாய்ந்த

இல்லங்களுக்குள்ளிருந்து எமது

பெண்களின் அவலக் குரல்கள் எழுந்தன.

எங்கள் குழந்தைகளைக் காத்திட

எந்தத் தேவதைகளும் வரவேயில்லை.

ஏங்கோ தூரத்தில்.....

துப்பாக்கிகள் வெடிக்கின்றன.

ஈனக்குரலெடுத்துக் கதறும் ஓசை

காற்றிலேறி வருகிறது.

தினந்தோறும் சாவு எமது வாசல்

வந்து

திரும்பிய

த ட ய ங் க ளை க்

காண்கிறோம்

எப்போதும் கதவு தட்டப் படலாம்!

நீ தேடியழைந்த எதுவுமுனக்கு

ஈடேற்றம் தரவில்லை.

தோற்றுப் போன அரசியலின் பின்னர்

அமைதியைத் தேடித்

தூரத்தேசம் ஒன்றில்அடைக்கலம் புகுந்தாய்!

மனச்சுமைகள் அனைத்தையும்

மௌனமாக அஞ்ஞாத வாசத்திற் கரைத்தாய்!

ஐரோப்பாவில் எங்கோ

அடர்ந்த மூங்கிற் காட்டினிடையே

இராணுவ வீரர்களுக்கு மத்தியில்

இருந்துதொழுகைத் தழும்பேறிய

நெற்றியுடன் நீ எடுத்தனுப்பியிருந்த

நிழற்படம் சொல்லாத சேதிகள்

பலவற்றை எனக்குச் சொன்னது

அதில் ஆனந்த மின்னல் பளிச்சிடும்

உன்முகம் எத்துணை அழகாக உள்ளது?

அன்பானவனே!

எந்த விடிவுமற்ற தேசத்தின்

தலைவிதியை நொந்த வண்ணம்

இங்கு எனது இருப்புப் பற்றியும்

நம்பிக்கைகள் பற்றியும்

ஓயாது விமர்சிக்கின்றாய்!

தினமும் வாழ்வு சூனியத்தில் விடிந்திட…

உயிர்கள் எந்தப் பெறுமதியுமற்று

அழிந்திட.....
யாருக்கும் யாருமற்ற சாபம் பிடித்த

வாழ்வைச் சபித்தவளாக

நான் வாழ்ந்த போதும்

எனது தேசம்

எனக்கு வேண்டும்!

நீ என்ன சொல்கிறாய்?

-ஃபஹீமா ஜஹான்