அம்மா





இருக்கும் இரு கரங்களும்
போதாதெனப் புலம்பும் அம்மாவின் முதுகின் பின்னால்
எப்பொழுதும் துரத்திக் கொண்டிருக்கும்
இரக்கமற்ற சொற்களும்
இங்கிதமில்லாக் கட்டளைகளும்
ஓய்ந்திருக்கும் இடந்தன்னைப் பறித்துக் கொண்டிருக்கும்
ஓராயிரம் பணிவிடைகளும்


மனமுடைந்து போன சொற்கள்
முட்டிமோதுகின்ற வீட்டில்
எப்பொழுதும் வெடித்துவிடத் தயாராக
நடமாடித்திரிகிறது பொறுமை


வலிய பாதங்களை அதிர வைத்து
நடந்து போகிறது
அனைத்தையும் மறுதலிக்கும்
ஒரு புறக்கணிப்பு


ஓங்கி வைக்கப் படும் பொருட்களிலிருந்தும்
அறைந்து சாத்தப் படும் கதவுகளிலிருந்தும்
புறப்பட்டு வருகிறது
அடுத்தவர் மீதான ஆத்திரங்கள்


கற்களை மாத்திரமே வைத்துக் கட்டப்பட்ட
வீட்டின்
விசாலமான கதவு , யன்னல்கள் வழியே புகுந்து
திரைச்சீலைகளை வீசியெறிந்து
முகஞ்சுழித்தவாறு வெளியேறிப் போகிறது
அன்பில் தோயாத ஒரு வெப்பக் காற்று

சிதறடிக்கப்பட்ட பிள்ளைகளின் வாழ்வையும்
உடைத்து வீசப்பட்ட அன்பின் வரைபடங்களையும்
வீடெங்கும் இறைந்து கிடக்கும்
ஒருவனின் வக்கிரங்களையும்
சேகரிப்பதிலேயே
களைத்துப் போகிறாள்


வருத்தம் கவிழ்ந்த உடலுடன்
என்றாவது அவள் வீழ்ந்து தூங்கும்
ஆழ்ந்த உறக்கத்தை அதிரவைத்துக் கலைக்கும்
தண்ணீர்க் குவளையொன்றுக்காகவோ
அற்பச் சொல்லொன்றுக்காகவோ
கூச்சலிடும் ஒரு குரல்
நடைப்பிணம் போல எழுந்து வரும்
அவளது பாதங்களில் பின்னும்
யுகங்களாகச் சிதைக்கப்பட்டுவரும் நிம்மதியொன்று


என்றோ விதியாகித் தொடரும்
நியதிகளில் நசுங்குண்டவாறு
இரவு நெடு நேரம் வரைத்
துயிலை விரட்டி விரட்டிக் காத்திருப்பாள்
எல்லோரும் உண்டு முடித்து எஞ்சும்
குளிர்ந்த உணவுக்காக


கருங்கல் சிலையொன்று
அதிகாரம் செய்த படி அலைகின்ற வீட்டில்
மோதி மோதியே செத்து விட்டன
அவள் வளர்த்த எல்லா மான்குட்டிகளும்

2009.01.02
(நன்றி: "கலைமுகம்"-49)






வெறியேறிய நீசன்
அபராதி நீ


உனது சாக்கடைகளில் வளரும்
பன்றிகள் கூட்டத்தை
ஊடகப் பண்ணையொன்றில்
உள் நுழைய விட்டாய்
'மகாராஜாவின்' கழுத்தை நெரித்த
கைகளின் விறைப்புத் தணிய முன்பே
'லசன்த'வின் குருதியில்
இன்னுயிரை ஓடவிட்டு
அந்தப் பகற்பொழுதைப்
பதைபதைத்திட விட்டிருந்தாய்


வெறியேறிய நீசனன்றி
வேறென்ன பெயர் உனக்கு?

சொர்க்கத் தீவின் அற்புதக் கிரீடம்
அதிஷ்டம் தவறி உனது
தலையில் வீழ்ந்த கணம்
அனைத்தையும் இடம்மாற்றி இருத்தியது
மனிதாபிமானத்தைப் புதை குழியிலும்
காட்டுமிராண்டியைச் சிம்மாசனத்திலுமாக


காஸாவுக்குக் கருணைமனு எழுதும் நீ
வன்னிக்குள் ஏவிவிட்ட 'காவல் தெய்வங்கள்'
சிதறிக் கிடக்கும் உடலங்களின் மீதும்
சின்னாபின்னமான குழந்தைகளின் வாழ்வுமீதும்
ஏறிநடப்பதைப் பார்த்தவாறு
தினந்தோறும் உன்மத்தம் கொள்கிறாய்


இரத்தமும் சதையும் தின்றவாறு
மக்கள் கைவிட்டுச் சென்ற ஊர்கள்தொறும்
நாவைத் தொங்கவிட்டபடி அலைகிறது
நீ கட்டவிழ்த்து விட்ட பேரவலம்


கொடூரச் சாவுகளைக்
கண்டு கண்டு அதிர்ந்த மண்
பலி கொள்ளும் கண்களுடன்
உனையே பார்த்திருக்கிறது

உனது அரசியல்
சகித்திட முடியாத் துர்வாடையுடன்
வீதிக்கு வந்துள்ளது
சுபீட்சம் மிகுந்த தேசத்தின் ஆன்மா
கைவிடப் பட்ட களர் நிலமொன்றில்
புதையுண்டு அழுகிறது
(நன்றி: புகலி)






மேதைகளும் மாபெரிய வீரர்களும்
மீண்டு வராமற்போன
மருத்துவமனைக் கட்டிலொன்றிலிருந்து
அதே தீர்க்கமான முடிவொன்றிலிருந்து
எழுந்து வந்துள்ளாய்


திருநாமங்களையெலாம்
உச்சாடனம் செய்து
எல்லாம் வல்லவனிடம்
உனை மீட்டுத் தரவேண்டி
ஏந்தித் தவித்த கரங்களை
அழுத்திக் கொண்டிருந்தது
அன்பின் கொடும் சுமை


உயிரோடு போராடிக் கொண்டிருந்த
இன்னுயிரைத்
தூர தேசத்தில் விட்டு விட்டு
ஊர்ந்தூர்ந்து வந்ததந்தக்
கொடிய காலம்


இருக்கும் இடத்தை
நொந்து போன எண்ணங்களால்
நிரப்பி விட்டுத்
துயரேறிய பொழுதுகளை
இழுத்தவாறு நொண்டி நகர்ந்தன
இரு பாதங்கள்


செல்லப் பறவையே....
இறுதியில் நீ வந்தாய்
உதிரமெங்கும் கலந்தோடிய நஞ்சிலிருந்து
உன் ஜீவனை மீட்டெடுத்து வந்தாய்


உறங்க மறந்த இரவின் மீது
ஆனந்தக் கண்ணீரைக்
கசிய விட்டவாறு
வாழ்விலிருந்து நழுவிப் போனதொரு
பெரும் வலி

என்ன வார்த்தையால் உனை வரவேற்பது
எந்தக் கரம் கொண்டு உனை அரவணைப்பது
எனத் தெரியாத கடலொன்றுக்கப்பாலிருந்து
கையசைக்கிறாய்


ஆருயிரே வருக
பாக்கியம் புரிந்தவர் நாம்
உனை மீளவும் பெற்றிருக்கிறோம்

-----------------------------------
*தம்பி ரிஷானுக்கு