அவளைக் கைவிடப் பட்டவளாக்கி
பிரார்த்தனைகளைப் பறித்து
இழுத்துச் சென்ற தெருக்களினூடாக
மேலெழுந்த புழுதிப் படலத்தைப்
புறக்கணித்து நீ சென்றிட அதிக நேரமெடுக்கவில்லை


மனதைச் சிதைத்த பாவத்தை
உயிரை வதைத்த தண்டனையை
நயவஞ்சகனுக்கான கூலியைக்
காவியவாறு
இடு காட்டுக்கும் உன் வாசலுக்குமாகக்
காலம் அலைந்தது


அகாலத்தில் திணித்து
நீயும் கைப்பிடி மண்ணிட்டு மூடிய ஓரிடம்
மெளனத்தின் ஆயிரம் ஈட்டிகளை - இனித்
தினந்தோறும் உனை நோக்கி ஏவும்


புறக்கணிக்கப்பட்டவளின் மொழிக்குப்
பெறுமதியிருக்கவில்லை
அநியாயமிழைக்கப்பட்டவளிடம் கையளித்திட
இனி எந்தப் பிராயச்சித்தங்களும்
தேவைப் படப்போவதில்லை

அற்பப் புழுதான் - நீயெனினும்
வலுத்த குரலுடனும்
ஓங்கிய கரங்களுடனும்
எப்பொழுதும் அவளை விரட்டினாய்
ஆதித்திமிரின் அடங்காத ஆங்காரத்துடன்
எளியவளின் தேவைகளை
எட்டி உதைத்தாய்

ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கும்
விழுமியங்களினூடாகப்
பாவிச் சென்றிருக்கும் வேரினை
விடுவிக்க முடியாதவளாக
இன்று
அண்டசராசரங்களின் எதிரே வீழ்ந்து கிடக்கிறாள்


நீகொடுத்த சுமைகளையும்
அந்த உடலையும்
உன்னிடமே எறிந்து விட்டாள்
இனி எக்காலத்திலும்
உன்னெதிரே வரப் போவதில்லை
நீ துன்புறுத்திய அவள் ஆத்மா



நீ திணித்து விட்டுப் போன
துயரத்தின் குழந்தையை
தாங்க முடியாத ஏமாற்றத்தின் பளுவுடன்
தோள் மீது உறங்க வைத்துள்ளேன்


அது துயில் கலைந்து வீரிட்டு அழாதிருந்திட
எப்பொழுதும்
ஆறுதல் மொழிகளற்ற
ஆழமான மெளனத்தை
எனைச் சுற்றி எழுப்பியுள்ளேன்


நான் அழைக்கப் படும்
அரங்குகளில்
எல்லா வரவேற்புக்களோடும்
எனக்கான இருக்கைதனில் அமர்த்தப்படுகிறேன்
பக்குவமாகக்
குழந்தையைத் தோள்மீது சாய்த்தவாறு
தயாரித்து வைத்திருக்கும் வாசகங்களைத்
தணிந்த குரலில் ஒப்புவித்துவிட்டு
ஊர்மெச்சிடும் மகளாகப்
படியிறங்கிப் போகிறேன்

உனைக் கடந்து செல்லும் கணத்தில்
எனது தோளிலிருந்து நழுவும் குழந்தை
உன் மீது
ஒரு கொடி போலப்
படர்ந்திடச் சாயும் வேளை மீண்டும்
அடுத்த தோள்மீது தூங்க வைக்கிறேன்

திரும்பித் திரும்பி
உனையே பார்த்தவாறு தேம்பும் குழந்தையை
எனது கை மாற்றி ஏந்திக் கொள்ளும்
எல்லா உரிமைகளும் உனக்கிருந்தும்
உன் கரங்கள் ஒரு போதும் நீளவும் இல்லை
வேறு எவரிடமும் கொடுத்திட
நான் விரும்பவும் இல்லை
(நன்றி:வடக்குவாசல்)






பிஞ்சுப் பாதங்கள்
செல்லக் கனவுகளின் மீது தத்தி நடந்த வேளை
உனது சாட்டை அடிகளால்
சின்னவளின் கால்களில் பதித்த
இரத்தக் கோடுகளின் மீதிருந்து
உனது குரூரத்தின் பாதையைத் தொடங்கினாய்
அந்தச் சிறுமியின் உலகில்
பிசாசின் உருவெடுத்து உலவலானாய்


அவள் வளர வளர
விஷப் பற்களின் கூர்மையைத் தீட்டியவாறே
அந்தச் சின்னவளின் காலங்களை
அச்சுறுத்துபவனாக நடமாடித் திரிந்தாய்



உனது காலடியோசைகளில்
அவளது பாடல்கள் மெளனித்துப் பதுங்கிக் கொண்டன
தீவைத்த மலரெனப் பொசுங்கிவிழும்
அவளது புன்னகையை மிதித்தவாறு
நித்தமும் வலம் வந்தாய்
அவள் ஒளியினைத் தரிசித்த
எல்லா வாசல்களையும்
வாளேந்தியவாறு அறைந்து சாத்தினாய்
மலையென அழுத்தும் இம்சைகளை
அந்த வீடெங்கும் அவிழ்த்து விட்டிருந்தாய்


அவளைக் காப்பாற்றிடவெனப் பொங்கி வந்த
ஒரு காதலின் பிரவாகத்தை
எந்தச் சுவடுமின்றித் தூர்ந்திட வைத்தாய்
நடைப்பிணமானவளை
உனது அரங்குகளிலிருந்து ஓரம்கட்டி
இருளொன்றின் பள்ளத்தாக்கில் அலையவிட்டாய்


அந்தச் சிறுபெண்
உணர்வுபெற்றெழுந்த ஒவ்வொரு வேளையிலும்
உன் கோரப்பற்களால் தீண்டித் தீண்டித்
துடிதுடிக்க விட்டாய்
எக்காலத்திலும் கருணையைச் சிந்தாத கண்களில்
தீயினைக் காவித்திரிந்தாய்

கேள்
நீயாரென்பதை அவளிடம்
அடையாளப் படுத்துவாள்
நாசகாரன்
கொடூரன்
காட்டுமிராண்டி
மன்னிப்பேதுமற்ற மாபாதகனின் வடிவமென


இறைவனே,
இம்முறை உனது வானவர்களை அனுப்பாதே
ஏழு ககனம் விட்டு நீயே இறங்கி வா
உனை வழிபடும் துரதிஷ்டத்தின் புதல்வியை
பேய்களின் தலைவனின் நிழலில்
வதைபட விட்டிருப்பது உனக்குத் தகுமெனில்
தடுப்பதற்கில்லை
எந்த ஆலயத்தை வேண்டுமானாலும் நீ
தரைமட்டமாக்கிப் போகலாம்