பாதைகள் அழைக்கின்றன
ஆசைகள் நிரம்பிய உள்ளம் அழைக்கிறது
ஆனாலும்
அவளை ஆழிக்குள் புதைக்கிறாய்

நட்சத்திரக் கூட்டங்களெல்லாம்
அதே தரிப்பிடங்களில்
இன்னும் வழிபார்த்திருக்கின்றன
அன்பைக் கொன்ற நீயோ
அவளது வழிகளை மூடுகிறாய்

அதிகாலையில்
தூய அருவியொன்றிலிருந்து
அவளது எளிய குடிசை நோக்கிச்
சுமந்து வந்த தெள்ளிய நீர்க்குடத்தை -நீ
கல்லெறிந்து உடைத்த வேளை
தவத்தில் மூழ்கியிருந்த
அவள் கானகத்து மான்கள்
திகைத்தோடித் திசை மறந்தன

மீளவும் உடைத்திட முடியாக்
கலயம் சுமந்து புறப்பட்டவளைக்
கலங்கிய நீர் ஓடைகளில்
திரும்பத் திரும்ப இறக்கிவிட்டாய்
வீடடைய முடியாத
இருள் வழியெங்கும்
அவளது பாதங்களை அலைக்கழித்தாய்

அவள் நீர் ஊற்றிக் காத்திருந்த
செழிப்புமிகு பயிர் நிலங்களில்- உனது
அடங்காப்பிடாரி ஆட்டுக் குட்டிகளை
விளையாட அனுப்பினாய்

கதிர்களை நீ
நாசமறுக்காதிருந்திருப்பாயானால்
தானியக் களஞ்சியங்களை
வாழ்வின் ஆதாரங்கள் கொண்டு
நிரப்பியிருப்பாள்

இறுதியாக
உயிர் விடைபெறப் போகும்
துறைமுகமொன்றில் அவளைச் சந்தித்தாய்
சொல்,
மாபெரிய கண்ணீர்க் கடலில்
அவள் இறங்கிப் போன போது
நீ தானே வழியனுப்பி வைத்தாய்












பெருக்கெடுத்து வரும்
இருளில் நனைந்தவாறு
கற்பனைகளில் வாழ்ந்திருந்த உனை
வழியனுப்பி வைக்கிறேன்

அன்பு வழிந்தோடிய இனிய உலகத்தைச்
சுற்றியெடுத்து
எரியும் தீயிடம் தின்னக் கொடுக்கிறேன்

எல்லாம் முடிந்து போன பின்
மனதின் கருணையையும் அன்பையும்
காற்றிலே கிழித்தெறிகிறேன்
குருவிச் சொண்டுகளில் காவிச் சென்றவை
கூடுகளைக் கதகதப்பாக்கிக் கொள்ளட்டும்
யாருக்கு வேண்டுமினி
நிராகரிப்பின் வேதனைகள் ?


எப்பொழுதும் ஆறுதலையும்
அலைததும்பும் காதலையும் எடுத்துக் கொண்டு
இல்லம் மீள்வாய்
பற்றியிருக்கும் கரங்களுக்குள்
அன்பினைப் பத்திரப் படுத்தி
என் பிரார்த்தனைகளுடனும்
செல்ல மொழிகளுடனும்
புறப் பட்டுச் செல்வாய்

சமையல்காரியாகவோ
சலவைக்காரியாகவோ அன்றி
உனதுயிராகவோ அதனிலும் உயர்வாகவோ
எனைக் காத்திருந்தாய்

நேயமுடன் அரவணைத்துக் கொண்ட
நிலாப் பொழுதுகளில்
எம்மிடையே கீதமிசைத்துப் பாய்ந்தோடிய
வெள்ளியோடையின் சங்கீதத்தில்
நண்பர்கள் இலயித்திருந்தனர்
எனது முகஞ்சுழிப்பும் சிடுசிடுப்பும் மேலோங்கும்
காலமொன்றைக் கொண்டு வருவாய் என்பதை
எவருமே ஏற்காதிருந்தனர்

நினைக்கும் பொழுதெலாம்
துயர்மிகைத்திடுமோர் வலி தரும் விதி
ஏன் வாய்த்தது பேரன்பே?

சாட்சிகளை முன்னிருத்தி
வேதவசனங்களை ஒப்புவித்து
கணவனாக மாறினாய்
நீ அழைத்து வந்த பேய்களிடம்
உன் காதலியைக் குதறிடக் கொடுத்தாய்

இனி என்றுமே ஒழுங்குபடுத்த முடியாத
கண்ணீர் பிசுபிசுக்கும் இல்லத்தினுள்
கவனிப்பாரின்றி வீழ்ந்துகிடந்த
காதலையும் வாழ்வையும் அள்ளியெடுத்துக் கொண்டு
வெளியேறிப் போய்விட்டது
எங்களைப் பிணைத்திருந்த ஏதோவொன்று.....
********************************************************



ஆக்கிரமிப்பாளர்களே
எனது பாடலை விட்டுவிடுங்கள்
சின்னஞ்சிறு ஆன்மா ஏந்தியது
நெடுந்தூரம் போய்விடட்டும்


நீங்கள் இட்ட வரம்புகளுக்குள்
நின்று ததும்புகிறேன்
நீங்கள் வகுத்திருந்த வேலிகளின் எல்லையில்
வாழ்வைக் கைவிட்டுத் திரும்பியுள்ளேன்


எக்காலத்திலுமினி
உங்கள் பீடங்களில் முழந்தாளிட வர மாட்டேன்
நீங்கள் ஆராதிக்கும் நாமங்களிலும் சேர மாட்டேன்


ஆதிமுதல் போற்றிவரும்
அந்தக் கிரீடங்களின் மீது
அவமதிப்பை விட்டெறிகிறேன்
உங்கள் அலங்காரப் பட்டினங்களின்
துர்வாடையையும் பேரிரைச்சலையும்
சகித்திட முடியாமல் அகன்று போகிறேன்

பாய் மரத்தையும் திசைகாட்டியையும்
கரை மணலில் புதைத்து
அலைகளில் தள்ளிவிட்டீர்கள்
யாருமே காப்பாற்ற வரமுடியாத
துயரக் கடல் நடுவே
அமிழ்ந்து கொண்டிருக்கிறது
உயிரின் படகொன்று