
முறைப்பாடுகளுக்கு அஞ்சிய
எல்லாக் காவலரண்களும்
அவளை வெளியே துரத்துகின்றன
தனது குழந்தைகளுக்காக
எடுத்துச் செல்லும் கனிகள்
ஒவ்வொன்றாக அழுகுவதை
ஏக்கத்துடன் தூக்கியெறிகிறாள்
அன்பை
நிம்மதியை
மாபெரும் கருணையொன்றை
தன்னோடு எடுத்துச் செல்லக்
காத்திருக்கிறாள்
ராஜாக்களின் அரசியல்
அவள் வீட்டைச் சிதைத்தது
அதிகாரம் கொண்ட கழுகொன்று
அவளது புத்திரரைக் கெளவிப் பறந்தது
சித்தம் பிசக வைத்த
இரக்கமற்ற குரலொன்று
அவளைத் தெருவெங்கும் ஓடவைத்தது
இன்று...
கின்னரர் தம் இசையிழந்த
நிலமெங்கும்
அவளது ஒப்பாரி அலைகிறது
அரசனைத் துதிபாடிச் செல்வோரின்
கால்களின் கீழே
பேரவலத்தின் ஓசை மாண்டொழிகிறது
(நன்றி: "எதுவரை" இதழ்-2)

இறுக மூடப்பட்ட
வீட்டினுள் வர முடியாது
நனைந்து கொண்டிருக்கிறது
மழை
ஆட்டுக் குட்டிகளுடன்
தாழ்வாரத்தில் ஒதுங்கி நின்று
இன்னொரு
புல்வெளி தேடிப் போவதற்குத்
தருணம் பார்க்கிறது
புகார்கொண்டு
தன்னைப் போர்த்தியவாறு
தென்னந் தோப்பினுள்
வழிதவறியலைகிறது
வாய் திறந்து பார்த்திருந்த
நீர் நிலைகளின்
கனவுகளை நிறைவேற்றிய பின்
மீன் கூட்டங்களைச்
சீதனமாகக் கொடுத்துச் செல்கிறது
யார் யாரோ
வரைந்த கோடுகளையெலாம்
தனது கால்களால்
தேய்த்து அழித்துச்
சேற்றில் புரண்டவாறு
வீதிகளைக் கழுவுகிறது
பெரும் கோட்டைகளையெலாம்
கரைத்தழித்திட நினைத்து
நிறைவேறாமற் போகவே
அவற்றின் வசீகரங்களை
கழுவிக் கொண்டு நகர்கிறது
ஆழ் மண் வரையும்
நீரிட்டு நிரப்பிய பின்
அடுத்துச் செய்வதென்ன?
என்ற வினாவுடன்
தரை மீது தேங்கி நிற்கிறது
ஓய்ந்திட மாட்டாமல்
இன்னொரு
வெப்ப மழை பெய்து கொண்டிருந்த
அவள் முகத்தில் வீழ்ந்த கணத்தில்
தனது ஆவேசமெலாம்
ஒடுங்கிப் போய்விடப்
பெய்வதை நிறுத்திப்
பெருமூச்செறிந்து போயிற்று
அந்த மழை
(நன்றி:மறுபாதி)

இருக்கும் இரு கரங்களும்
போதாதெனப் புலம்பும் அம்மாவின் முதுகின் பின்னால்
எப்பொழுதும் துரத்திக் கொண்டிருக்கும்
இரக்கமற்ற சொற்களும்
இங்கிதமில்லாக் கட்டளைகளும்
ஓய்ந்திருக்கும் இடந்தன்னைப் பறித்துக் கொண்டிருக்கும்
ஓராயிரம் பணிவிடைகளும்
மனமுடைந்து போன சொற்கள்
முட்டிமோதுகின்ற வீட்டில்
எப்பொழுதும் வெடித்துவிடத் தயாராக
நடமாடித்திரிகிறது பொறுமை
வலிய பாதங்களை அதிர வைத்து
நடந்து போகிறது
அனைத்தையும் மறுதலிக்கும்
ஒரு புறக்கணிப்பு
ஓங்கி வைக்கப் படும் பொருட்களிலிருந்தும்
அறைந்து சாத்தப் படும் கதவுகளிலிருந்தும்
புறப்பட்டு வருகிறது
அடுத்தவர் மீதான ஆத்திரங்கள்
கற்களை மாத்திரமே வைத்துக் கட்டப்பட்ட
வீட்டின்
விசாலமான கதவு , யன்னல்கள் வழியே புகுந்து
திரைச்சீலைகளை வீசியெறிந்து
முகஞ்சுழித்தவாறு வெளியேறிப் போகிறது
அன்பில் தோயாத ஒரு வெப்பக் காற்று
சிதறடிக்கப்பட்ட பிள்ளைகளின் வாழ்வையும்
உடைத்து வீசப்பட்ட அன்பின் வரைபடங்களையும்
வீடெங்கும் இறைந்து கிடக்கும்
ஒருவனின் வக்கிரங்களையும்
சேகரிப்பதிலேயே
களைத்துப் போகிறாள்
வருத்தம் கவிழ்ந்த உடலுடன்
என்றாவது அவள் வீழ்ந்து தூங்கும்
ஆழ்ந்த உறக்கத்தை அதிரவைத்துக் கலைக்கும்
தண்ணீர்க் குவளையொன்றுக்காகவோ
அற்பச் சொல்லொன்றுக்காகவோ
கூச்சலிடும் ஒரு குரல்
நடைப்பிணம் போல எழுந்து வரும்
அவளது பாதங்களில் பின்னும்
யுகங்களாகச் சிதைக்கப்பட்டுவரும் நிம்மதியொன்று
என்றோ விதியாகித் தொடரும்
நியதிகளில் நசுங்குண்டவாறு
இரவு நெடு நேரம் வரைத்
துயிலை விரட்டி விரட்டிக் காத்திருப்பாள்
எல்லோரும் உண்டு முடித்து எஞ்சும்
குளிர்ந்த உணவுக்காக
கருங்கல் சிலையொன்று
அதிகாரம் செய்த படி அலைகின்ற வீட்டில்
மோதி மோதியே செத்து விட்டன
அவள் வளர்த்த எல்லா மான்குட்டிகளும்
2009.01.02
(நன்றி: "கலைமுகம்"-49)
