பிஞ்சுப் பாதங்கள்
செல்லக் கனவுகளின் மீது தத்தி நடந்த வேளை
உனது சாட்டை அடிகளால்
சின்னவளின் கால்களில் பதித்த
இரத்தக் கோடுகளின் மீதிருந்து
உனது குரூரத்தின் பாதையைத் தொடங்கினாய்
அந்தச் சிறுமியின் உலகில்
பிசாசின் உருவெடுத்து உலவலானாய்
அவள் வளர வளர
விஷப் பற்களின் கூர்மையைத் தீட்டியவாறே
அந்தச் சின்னவளின் காலங்களை
அச்சுறுத்துபவனாக நடமாடித் திரிந்தாய்
உனது காலடியோசைகளில்
அவளது பாடல்கள் மெளனித்துப் பதுங்கிக் கொண்டன
தீவைத்த மலரெனப் பொசுங்கிவிழும்
அவளது புன்னகையை மிதித்தவாறு
நித்தமும் வலம் வந்தாய்
அவள் ஒளியினைத் தரிசித்த
எல்லா வாசல்களையும்
வாளேந்தியவாறு அறைந்து சாத்தினாய்
மலையென அழுத்தும் இம்சைகளை
அந்த வீடெங்கும் அவிழ்த்து விட்டிருந்தாய்
அவளைக் காப்பாற்றிடவெனப் பொங்கி வந்த
ஒரு காதலின் பிரவாகத்தை
எந்தச் சுவடுமின்றித் தூர்ந்திட வைத்தாய்
நடைப்பிணமானவளை
உனது அரங்குகளிலிருந்து ஓரம்கட்டி
இருளொன்றின் பள்ளத்தாக்கில் அலையவிட்டாய்
அந்தச் சிறுபெண்
உணர்வுபெற்றெழுந்த ஒவ்வொரு வேளையிலும்
உன் கோரப்பற்களால் தீண்டித் தீண்டித்
துடிதுடிக்க விட்டாய்
எக்காலத்திலும் கருணையைச் சிந்தாத கண்களில்
தீயினைக் காவித்திரிந்தாய்
கேள்
நீயாரென்பதை அவளிடம்
அடையாளப் படுத்துவாள்
நாசகாரன்
கொடூரன்
காட்டுமிராண்டி
மன்னிப்பேதுமற்ற மாபாதகனின் வடிவமென
இறைவனே,
இம்முறை உனது வானவர்களை அனுப்பாதே
ஏழு ககனம் விட்டு நீயே இறங்கி வா
உனை வழிபடும் துரதிஷ்டத்தின் புதல்வியை
பேய்களின் தலைவனின் நிழலில்
வதைபட விட்டிருப்பது உனக்குத் தகுமெனில்
தடுப்பதற்கில்லை
எந்த ஆலயத்தை வேண்டுமானாலும் நீ
தரைமட்டமாக்கிப் போகலாம்
14 comments:
கவிதை மிக அருமை..நீண்ட காலமாக உங்கள் வலைப்பூவை வாசித்து வந்திருக்கிறேன்.உங்கள் கவிதைகளைப் படிக்கும் போது ஏனோ அன்னா அக்மதோவாவை நினைத்துக் கொள்கிறேன்...அன்புடன்..ஸ்ரீராம் பொன்ஸ்.
அன்பின் ஃபஹீமா ஜஹான்,
வாழ்க்கையின் துயர்மிகுந்த வலியொன்றினைச் சோகம் ததும்பக் கவியாக்கியிருக்கிறீர்கள்.
உங்கள் அழகிய வரிகளில் உருப்பெற்றது அருமையான கவிதையாகியிருக்கிறது.
தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி !
இன்று தான் உங்களின் கவிதைகளை வாசிக்க கிடைத்த்து...
மிகவும் சிறப்பாகவும் கருத்தாளம் மிக்கனவாகவும் உள்ளன...
வாழ்த்துகள்...!!!
நல்லா இருக்கு கவிதை..
//இறைவனே,
இம்முறை உனது வானவர்களை அனுப்பாதே
ஏழு ககனம் விட்டு நீயே இறங்கி வா
உனை வழிபடும் துரதிஷ்டத்தின் புதல்வியை
பேய்களின் தலைவனின் நிழலில்
வதைபட விட்டிருப்பது உனக்குத் தகுமெனில்
தடுப்பதற்கில்லை
எந்த ஆலயத்தை வேண்டமானாலும் நீ
தரைமட்டமாக்கிப் போகலாம்//
ஆமாம்.. ஆமாம்.. அதுதான் சரி..
காட்டுமிராண்டியின் பொருளை நன்றாகவே அறியத் தந்திருக்கிறீர்கள் கவிதையில். படம் வெகு அருமை, பொருத்தம்.
வாருங்கள் ஸ்ரீராம் பொன்ஸ்
"உங்கள் கவிதைகளைப் படிக்கும் போது ஏனோ அன்னா அக்மதோவாவை நினைத்துக் கொள்கிறேன்"
அவரது எழுத்துக்களை நான் இன்னும் படித்ததில்லை. நீங்கள் குறிப்பிட்டபின்னர் எப்படியாவது படிக்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது.
உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது
வாருங்கள் ரிஷான்
"வாழ்க்கையின் துயர்மிகுந்த வலியொன்றினைச் சோகம் ததும்பக் கவியாக்கியிருக்கிறீர்கள்"
ஆம். உண்மை.
நீங்கள் தான் நான் எந்தக் கோணத்தில் இருந்து எழுதினாலும் அதைச் சரியாகக் கண்டபிடித்துவிடுறீங்களே.
வாருங்கள் நிமல்
"இன்று தான் உங்களின் கவிதைகளை வாசிக்க கிடைத்த்து"
முதன் முறையாக வந்திருக்கிறீங்க.
உங்கள் வரவையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்
வாருங்கள் saravana kumar
//இறைவனே,
இம்முறை உனது வானவர்களை அனுப்பாதே
ஏழு ககனம் விட்டு நீயே இறங்கி வா
உனை வழிபடும் துரதிஷ்டத்தின் புதல்வியை
பேய்களின் தலைவனின் நிழலில்
வதைபட விட்டிருப்பது உனக்குத் தகுமெனில்
தடுப்பதற்கில்லை
எந்த ஆலயத்தை வேண்டமானாலும் நீ
தரைமட்டமாக்கிப் போகலாம்//
"ஆமாம்.. ஆமாம்.. அதுதான் சரி.."
துயரத்தின் இறுதி நிலை அது.
வாருங்கள் கவிநயா
"படம் வெகு அருமை, பொருத்தம்"
இப்போது ஒரு "பெரியவரின்" ஆலோசனைப் படி படத்தை மாற்றிவிட்டேன்- இது தான் பொருத்தமான படம் என்று அவர் சொல்கிறார்.
வணக்கம் அக்கா
உங்கள் கவிதையின் ஜீவன்
என் கண்களில் இப்படியாகவிருக்கிறது
"அவள் ஒளியினைத் தரிசித்த
எல்லா வாசல்களையும்
வாளேந்தியவாறு அறைந்து சாத்தினாய்"
நீங்கள் எந்தக்கோணத்தில் இருந்து
எழுதியிருந்தாலும்,
ஒடுக்கப்படும் ஒரு சமுகத்தின்
வலியையும்
மென்மையாக வருடுகிறது இந்தக்கவிதை
மீண்டும் வாழ்த்துக்களோடு
வாருங்கள் அருள்
"மீண்டும் வாழ்த்துக்களோடு"
உங்கள் வருகைக்கு மிகவும் நன்றி.
///அவரது எழுத்துக்களை நான் இன்னும் படித்ததில்லை. நீங்கள் குறிப்பிட்டபின்னர் எப்படியாவது படிக்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது.////
மிக அவசியம் படிக்கப்பட வேண்டிய கவிகளில் அன்னா அக்மதோவாவும் ஒருவர்.ருஷ்ய பெண் கவிஞர் என்பதை அறிந்திருப்பீர்கள்.அவரது கவிதைகளின் தொகுப்பு லதா ராமகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பில் உயிர்மை வெளியீடாக வந்திருக்கிறது.
நேரம் கிடைக்கும் போது எனது வலைப்பூ பக்கமும் எட்டிப் பார்க்கவும்.
//உனது காலடியோசைகளில்
அவளது பாடல்கள் மெளனித்துப் பதுங்கிக் கொண்டன
தீவைத்த மலரெனப் பொசுங்கிவிழும்
அவளது புன்னகையை மிதித்தவாறு
நித்தமும் வலம் வந்தாய்//
நல்ல வரிகள்.. உவமை ரசித்தேன்..
வலிகொண்ட வாழ்வின் சோக பக்கங்களை கவிதையாக சொல்கிறீர்கள்.. நன்று..
Post a Comment