மேதைகளும் மாபெரிய வீரர்களும்
மீண்டு வராமற்போன
மருத்துவமனைக் கட்டிலொன்றிலிருந்து
அதே தீர்க்கமான முடிவொன்றிலிருந்து
எழுந்து வந்துள்ளாய்


திருநாமங்களையெலாம்
உச்சாடனம் செய்து
எல்லாம் வல்லவனிடம்
உனை மீட்டுத் தரவேண்டி
ஏந்தித் தவித்த கரங்களை
அழுத்திக் கொண்டிருந்தது
அன்பின் கொடும் சுமை


உயிரோடு போராடிக் கொண்டிருந்த
இன்னுயிரைத்
தூர தேசத்தில் விட்டு விட்டு
ஊர்ந்தூர்ந்து வந்ததந்தக்
கொடிய காலம்


இருக்கும் இடத்தை
நொந்து போன எண்ணங்களால்
நிரப்பி விட்டுத்
துயரேறிய பொழுதுகளை
இழுத்தவாறு நொண்டி நகர்ந்தன
இரு பாதங்கள்


செல்லப் பறவையே....
இறுதியில் நீ வந்தாய்
உதிரமெங்கும் கலந்தோடிய நஞ்சிலிருந்து
உன் ஜீவனை மீட்டெடுத்து வந்தாய்


உறங்க மறந்த இரவின் மீது
ஆனந்தக் கண்ணீரைக்
கசிய விட்டவாறு
வாழ்விலிருந்து நழுவிப் போனதொரு
பெரும் வலி

என்ன வார்த்தையால் உனை வரவேற்பது
எந்தக் கரம் கொண்டு உனை அரவணைப்பது
எனத் தெரியாத கடலொன்றுக்கப்பாலிருந்து
கையசைக்கிறாய்


ஆருயிரே வருக
பாக்கியம் புரிந்தவர் நாம்
உனை மீளவும் பெற்றிருக்கிறோம்

-----------------------------------
*தம்பி ரிஷானுக்கு