வெறியேறிய நீசன்
அபராதி நீ
உனது சாக்கடைகளில் வளரும்
பன்றிகள் கூட்டத்தை
ஊடகப் பண்ணையொன்றில்
உள் நுழைய விட்டாய்
'மகாராஜாவின்' கழுத்தை நெரித்த
கைகளின் விறைப்புத் தணிய முன்பே
'லசன்த'வின் குருதியில்
இன்னுயிரை ஓடவிட்டு
அந்தப் பகற்பொழுதைப்
பதைபதைத்திட விட்டிருந்தாய்
வெறியேறிய நீசனன்றி
வேறென்ன பெயர் உனக்கு?
சொர்க்கத் தீவின் அற்புதக் கிரீடம்
அதிஷ்டம் தவறி உனது
தலையில் வீழ்ந்த கணம்
அனைத்தையும் இடம்மாற்றி இருத்தியது
மனிதாபிமானத்தைப் புதை குழியிலும்
காட்டுமிராண்டியைச் சிம்மாசனத்திலுமாக
காஸாவுக்குக் கருணைமனு எழுதும் நீ
வன்னிக்குள் ஏவிவிட்ட 'காவல் தெய்வங்கள்'
சிதறிக் கிடக்கும் உடலங்களின் மீதும்
சின்னாபின்னமான குழந்தைகளின் வாழ்வுமீதும்
ஏறிநடப்பதைப் பார்த்தவாறு
தினந்தோறும் உன்மத்தம் கொள்கிறாய்
இரத்தமும் சதையும் தின்றவாறு
மக்கள் கைவிட்டுச் சென்ற ஊர்கள்தொறும்
நாவைத் தொங்கவிட்டபடி அலைகிறது
நீ கட்டவிழ்த்து விட்ட பேரவலம்
கொடூரச் சாவுகளைக்
கண்டு கண்டு அதிர்ந்த மண்
பலி கொள்ளும் கண்களுடன்
உனையே பார்த்திருக்கிறது
உனது அரசியல்
சகித்திட முடியாத் துர்வாடையுடன்
வீதிக்கு வந்துள்ளது
சுபீட்சம் மிகுந்த தேசத்தின் ஆன்மா
கைவிடப் பட்ட களர் நிலமொன்றில்
புதையுண்டு அழுகிறது
(நன்றி: புகலி)
17 comments:
அன்பின் ஃபஹீமா ஜஹான்,
தற்கால நம் தேசத்தின் அவல நிலையை அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். சம்பந்தப்பட்டவனின் பெயரைக் குறிப்பிடாமலிருப்பது நன்று சகோதரி.
'அபராதி' தலைப்பே இன்னுமொரு கவிதையாக இருக்கிறது.
சுபீட்சம் மிகுந்த தேசத்தின் ஆன்மா
கைவிடப் பட்ட களர் நிலமொன்றில்
புதையுண்டு அழுகிறது
யதார்த்தமாக இருக்கிறது
வாருங்கள்
ரிஷான் ஷெரீப்,
இளைய அப்துல்லாஹ்,
இலங்கை வரலாற்றிலேயே மிக அதிகமான படுகொலைகளைச் செய்த ஒருவனுக்கான புகழ்பாக்களால் இந்த தேசமே மயங்கிக் கிடக்கிடது.
ஒரு மானிடப் பேரவலத்தை மறைத்துக் கொண்டு கொண்டாடும் வெற்றிகளால் சிறுபான்மை இனத்தின் தேவைகள் நிறைவேறிவிடுமா?
சகோதரி
உங்கள் கவிதை அளப்பரிய உணர்வுகளைத் தோற்றுவித்தது மனிதம் புதைக்கப்ப்ட்ட மண்ணில் நின்று பேரினவாத விருட்சங்களுக்கான விதைகளைத் தூவும் நீசனின் நிலையைட் தெளிவாகவே சொல்லியிருக்கிறீர்கள்
ஆசிப் மீரான்
வாருங்கள் ஆசிப் மீரான்,
"மனிதம் புதைக்கப்ப்ட்ட மண்ணில் நின்று பேரினவாத விருட்சங்களுக்கான விதைகளைத் தூவும் நீசனின் நிலையை"
எதிர்கால அமைதியின்மைக்கான எல்லா நிகழ்ச்சித் திட்டங்களும் இங்கு அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.உண்மையைச் சொல்ல முடியாதவாறு
வாய்கள் தைக்கப் பட்டு, பேனாக்கள் பிடுங்கப் பட்டு, கண்கள் கட்டப் பட்ட நிலையில் ஊடகங்கள் உள்ளன.
என்னினமான பெண்ணினத்தில்
இன்னொரு கவியரசியா
உம்மை இதுகாறும்
தொலைத்தது குறித்து
யாம் பின்ன வேண்டியது
கவலையா கவிவலையா?
புரியவில்லையே தோழி?!
நேரம் கிடைக்கும் போது
என் ப்ளாகில் சந்தியுங்கள்!
அறப்போரில் மிகச்சிறந்தது அநியாயம் புரியும் ஆட்சியாளர்களின் முன் அவர்களின் தவறுகளை தைரியமாக எடுத்துரைத்தலே என்பது அண்ணல் நபிகளாரின் அமுத மொழி. அந்த வரிகளுக்கேற்ப ஆட்சியாளர்களின் தவறுகளை தட்டி கேட்டிருக்கும் அருமை சகோதரி பஹிமா ஜஹான் அவர்களின் இந்த கவிதையும் அறப்போரின் ஒரு தொடக்கமே.
கொழும்புவின் கொடூர ஆட்சியாளர்களாக இருந்தாலும் யாழ்ப்பாணத்து குறுநில மன்னர்களாக இருந்தாலும் அவர்கள் செய்த அநீதிகளுக்கெல்லாம் இறுதி தீர்ப்பு நாளன்று ஆட்சியாளர்களுக்கெல்லாம் ஆட்சியாளனான அவனிடம் தண்டனை பெற்றே தீர வேண்டும் என்ற ஒரு ஆறுதலை தவிர வேறு எதையும் எம்மால் சொல்ல முடியவில்லை.
வாருங்கள் Atikkadayan,
"கொழும்புவின் கொடூர ஆட்சியாளர்களாக இருந்தாலும் யாழ்ப்பாணத்து குறுநில மன்னர்களாக இருந்தாலும் அவர்கள் செய்த அநீதிகளுக்கெல்லாம் இறுதி தீர்ப்பு நாளன்று ஆட்சியாளர்களுக்கெல்லாம் ஆட்சியாளனான அவனிடம் தண்டனை பெற்றே தீர வேண்டும் என்ற ஒரு ஆறுதலை தவிர வேறு எதையும் எம்மால் சொல்ல முடியவில்லை."
ம்..
இங்குள்ள பேரவலங்களுக்கு எந்த ஆறுதலும் இல்லை சகோதரா :(
உங்கள் வருகைக்கு நன்றி.
அதிகாரத்தின் மொழியின் முன்னால் நாவறுந்து கிடக்கும்
சபித்தலான வாழ்வு கொண்ட எல்லோருக்கும்
உங்கள் கவிதை வரிகள்
ஆறுதல் மருந்தை
தடவிச் செல்கின்றன.
'காவல் தெய்வங்களின்' எஜமானனுக்கும்
பயம் கொள்ளாத
துணிச்சல் ஒவ்வொரு வர்த்தைகளையும்
போராயுதமாக மாற்றியுள்ளது.
-பிரபா(நம்பிக்கைகளைச் சுமந்தபடி)
வாருங்கள் அம்பலம்- பிரபா
முதல் தடவையாக உங்கள் கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள்.
"அதிகாரத்தின் மொழியின் முன்னால் நாவறுந்து கிடக்கும்
சபித்தலான வாழ்வு"
ம். செய்திகளின் படியும் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங்களின் படியும் கிளியும் பருந்தும் ஒரே கூண்டில் வாழும் அற்புதத் தேசமிது.
அடுத்த கட்ட அழிவுகளின் நிழல் எம் மீது வீழ்ந்து கிடப்பதைக் கண்டு கண்டும் அமைதியாக வாழ்கிறோம் :(
இனிய சகோதரி,சுடும் வார்த்தைகள் நம் தேசத்தின் கனவு கலைந்த கதை சொல்லியிருக்கிறீர்கள்.
வலிக்கிறது.
நன்றாக எழுதியிருக்கிறீர்கள். கவிதையை வாசிக்கும்போதே கண்முன் விரிகிறது அவலம். கையாலாகதவனாக உலகமும் தாய் தமிழகமும்.
வாருங்கள் ஹயா ரூஹி,
"வலிக்கிறது"
ம்.
வருகைக்கு நன்றி சகோதரி
வாருங்கள் ஆடுமாடு,
"கையாலாகதவனாக உலகமும் தாய் தமிழகமும்"
இங்குள்ள மக்களும் தான்.
சூனியமாய்ப் போன ஒரு காலத்துள் தள்ளப் பட்டிருக்கிறோம்.அடக்குமுறை என்பது எங்கெங்கும் வியாபித்துள்ளது.
அரசுக்கு விரும்பிய சொற்களை மாத்திரமே ஊடகங்களும் மனிதர்களும் உச்சரிக்க வேண்டியள்ளது.
மொழிச்செயற்பாடுகளில் ஒரு பகுதியை இலக்கியம் என்ற குடும்பத்துக்குள் வரையறுப்பதை நாமறிவோம். கவிதை, சிறுகதை, நாவல், போன்ற வரைப்படுத்தலுக்குள் மொழி இடமாற்றப்படும் போது இலக்கியம் என்ற நிலைப்பாட்டை இலகுவில் அடைந்துவிடுகிறது. இது கடந்த ௨௫ நூற்றாண்டுகளாக மொழி குறித்த ஒரு நிலைப்பாட்டிற்கு தள்ளிவிடுவதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. மொழியின் பிற செயற்பாடுகளான (இலக்கியமற்றது என கருதப்படுபவை) வற்றிலிருந்து இலக்கியம் வேறுபடுத்தப்படுவதற்கான காரணங்களை அறிய முற்படும் வாசிப்புக்கள் இல்லாமலே போயிற்று. இலக்கியம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகவும், இதுதான் இலக்கியம் என்று முற்று முழுதான அர்த்தம் கிடைத்துவிட்டதுமான ஒரு நிலை பாதுகாக்கப்படுவதை அவதானிக்கலாம்.விரிந்த அளவில் உனது கவிதைகள் உரையாடப்படவேண்டியவை.
www.maatrupirathi.blogspot.com
வாருங்கள் ரியாஸ் குரானா,
முதல் தடவையாகப் பின்னூட்டம் இட்டுள்ளீர்கள்.
"இலக்கியம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகவும், இதுதான் இலக்கியம் என்று முற்று முழுதான அர்த்தம் கிடைத்துவிட்டதுமான ஒரு நிலை பாதுகாக்கப்படுவதை அவதானிக்கலாம்"
பின்னவீனத்துவத்தை ஆதரிப்போர் இதனை மறுக்கின்றனர் என்பதைக் கூற வருகின்றீர்கள்.
"விரிந்த அளவில் உனது கவிதைகள் உரையாடப்படவேண்டியவை"
யாராவது உரையாடலைத் தொடக்கி வைக்கட்டும்.
Post a Comment