உயிர்வேலி




சூரியன் தனது வெக்கை மிகு கதிர்களால்
இலைகளை வீழ்த்திக் கொண்டிருந்த
மரமொன்றில் வந்தமர்ந்தது
பிரளயத்திலிருந்து தப்பித்து வந்த பறவை


கனிகளோ வித்துக்களோ இன்றி
ஒரு சத்திரம் போல
நின்றிருந்த மரத்திடம்
சின்னஞ்சிறு பறவைக்குக் கொடுத்திட
எதுவுமே இருக்கவில்லை


குருவி குந்தியிருந்த மரத்தின் கீழே
வீழ்ந்து கிடந்தது
இற்றுப் போன ஒரு நிழல்
தொலை தூர ஆற்றுப் படுகையில்
மறைந்து கொண்டிருந்தது கடைசிச் சூரியன்

அசைந்து வரும் கரிய யானைகளைப்
பார்த்தவாறு
கைவிடப்பட்ட தனது கூட்டை எண்ணிக்
கண்ணீர் உகுத்திடலாயிற்று


அடைகாத்த முட்டைகளைப்
பெருங்காற்றில் போட்டுடைத்த கரங்களில்
எல்லா அதிகாரங்களும் இருந்தது
“ஏன் செய்தாய்” எனக் கேட்க முடியாத
அடக்கு முறையில் காலம் சிக்கியிருந்தது


குருவியை உறங்க வைத்திட முடியாமல்
கிளைகளினூடே
பதுங்கிப் பதுங்கி அசைந்து கொண்டிருந்தது
இருண்ட இரவு


உள்ளேயொரு சூனியத்தை வைத்து
உயிர் வேலியொன்றைச் சுமந்தவாறு
முடிவற்ற இருளொன்றினூடாக
அந்தச் சிறு பறவை
பறந்து போயிற்று

எங்கள் நேத்திரனே




உனது முக வசீகரத்தைத்
துலக்கித் துலக்கித்
தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது
காலத்தின் அற்புதக் கரங்கள்


உனது சொற்களைப் பற்றியவாறு
வீடெங்கும் படர்கிறது
பாசத்தில் வேர் ஊன்றிய கொடியொன்று


அத்தனை இனிமையான
அவ்வளவு ஆனந்தமான
அந்த மாலைப் பொழுதிலிருந்து
மெல்லத் துளிர்விட்டது
எப்பொழுதும் வாடாத ஒரு பூ


மரணம் இயன்றவரை பந்தாடிக்
கை விட்டுச் சென்ற
பாலை நிலத்திலிருந்து
ஒளிர்விடும் முத்தெனத் திரும்பி வந்திருந்தாய்
எமைப் பரிதவிக்க விட்ட
காலத்தின் கண்ணீரைத் துடைத்தவாறு
நிகரிலா ஆவலுடன்
நேத்திரங்களில் நிறைந்தாய்


எவரும் வந்து போய்விடக்கூடிய
முடிவற்ற தெருவினூடாக
எவராலும் எடுத்துவரமுடியாத
ஆனந்ததை ஒப்படைத்த பெருமிதத்துடன்
விடைபெறத் தயாரானாய்


உன்னிடம் காண்பித்திட
ஒரு வெளி நிறைந்த காட்சிகள் இருந்தன
அவசர மனிதர்களும்
மாலைப் பொழுதும்
எமைக் கடந்து போய்க் கொண்டிருந்த
வீதியிலே நடந்தோம்


பெரு மழைக் காலத்தை எதிர்பார்த்து
தூரத்து வ்யல் வெளிகளில்
எரிந்து கொண்டிருந்தது தீ
மூங்கில்கள் தலைகுனிந்து
எதனையோ உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும்
அடர்ந்த மரங்களின் கீழே
ஓடிக் கொண்டிருந்தது ஆறு
கொடிகளை இழுத்து அசைத்தவாறு


நீலம் பூத்த மலைகளும் தென்னந்தோப்புகளும்
கரையத் தொடங்கிய இருளில்
எம்மீது படிந்து கொண்டிருந்தது
ஏதோவோர் ஒளி
ஆகாயத்தின் கிழக்கே
உன்னைப் போலவே ஒரு நட்சத்திரம்
மின்னத் தொடங்கியிருந்தது


நின்று இரசித்திட யாருக்கும் நேரமற்ற
அந்த அஸ்தமனத்தின் மெல்லிய ஒளியினூடாக
தெருமுனைவில் வழிபார்த்திருந்த
அம்மாவிடம் மீண்டோம்


இருளானதும் கூடு செல்லத் துடிக்கும்
பறவையின் சிறகுகளோடு உந்திப் பறந்தாய்
பரிமாறப்படாத இரவுணவையும்
தந்துசென்ற அன்பின் பரிசுகளையும்
எங்கள் உள்ளங்களில் சுமக்கவிட்டு

(2009.09.27 இன் நினைவாக)






வெளிவந்துள்ளது- அபராதி

எனது இரண்டாவது கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது.
இத் தொகுப்பை வெளியிட்ட தம்பி அகிலன், சயந்தன் உள்ளிட்ட "வடலி"க்கு எனது மனமார்ந்த நன்றிகள்

(இங்கே வாங்கலாம்)http://vadaly.com/shop/?page_id=231&category=27&product_id=88