மனமுருகிக்கேட்ட பிரார்த்தனைகளின் முடிவில்
அடுத்துச் செய்வது
என்னவென்றறியாமல்
வலிமிகுந்த கேள்விகள்
வீடெங்கும் பரவிப் போயிருந்த
இன்றைய
அந்திப் பொழுதின் பளுவை நீக்கி
நீயழைத்தாய்


எஞ்சியிருக்கும் வலுவெலாம் திரட்டி
இரகசியக் குரலில் கதைத்தாய்
உயிர் பிழிபடும் வேதனையை
உச்சரித்த ஒவ்வொரு சொல்லிலும்
வழியவிட்டாய்

உன் சிரித்த முகம்
உன்து புன்னகைக் குரல்
எல்லாவற்றையும்
இந்தப் பயங்கர நாட்களிடம்
பசியாறக் கொடுத்துவிட்டாய்

உனது தோள் மீது வந்தமரும்
பட்சிகளெதுவும் பறந்து வராத
அடிவான மலைத் தொடர்களை... ...
உன் குருதியில் கலந்திருக்கும் நஞ்சை
வாங்கிக் கொள்ளத் தெரியாமல் பார்த்திருந்த
விசாலமிகு வான வெளியை ........
வேதனை நிரம்பியிருக்கும்
மிகப் பெரிய கடலொன்றை.....
எண்ணித் தவிக்கிறாய் .
இன்னும் நீ
நோவுகளில் இருந்து மீளவில்லை
இது வரையும் நீ
துயரத்தின் எல்லையைத் தாண்டவும் இல்லை

உனை ஆபத்தில் கிடத்திக் கொண்டு
அடுத்தவரின் நிம்மதிக்காக
அனைத்தையும் மறைத்தாய்
உன் உடலில் புகுந்த நஞ்சை
நாங்கள் பருகியிருக்கக் கூடாதா?
உனை வதைக்கும் வலிகளை
நாங்கள் ஏற்றிருக்கக் கூடாதா?

அதிகாலையின் மீதும் பத்து இரவுகள் மீதும்
வானத்தின் மீதும் விடிவெள்ளியின் மீதும்
அந்த மாபெரும் நகர்மீதும் மலை மீதும்
சத்தியம் செய்பவனே....
எங்கும் நிறைந்த இறைவனே
எல்லாம் வல்ல ஒருவனே

எங்கள் தம்பியை
சுகப்படுத்தித் தந்துவிடு
நகரமுடியாத வேதனையின் சுமையுடன்
கால்களைச் சுற்றியிருக்கும்
இந்தக் காலத்தைப் போக்கிவிடு