உனது மகிழ்ச்சிகளையெல்லாம்
என்னிடமிருந்தே பெற்றுக் கொண்டாய்:
எனது துயரங்களையெல்லாம்
நீயன்றோ ஏற்படுத்தித் தந்தாய்?
தாங்க முடியா வலி தருகின்ற உன் தளைகளிலிருந்து
என்னை விட்டுவிடேன்-போகிறேன்!

எவருக்கும் புலப்படாத வெளிகளில் அலைந்து
ஏதோ ஒரு கடற் காற்றை என்னோடு எடுத்து வந்து
நாறிப் போன காற்று வெளியில் பதிலீடு செய்ய வேண்டும்!

கடந்த காலம் தந்த சொற்களை
வரி வரியாக விதைப்பது அலுத்துவிட்டது!
அடிச்சுவடுகளெல்லாம்
மிகுந்த துயரங்களைத் தேக்கிவைத்து
நான் மிதிக்கும் வேளை
பழங்காலத்துப் பாசி படிந்த நீரை
என் மீது வாரியிறைக்கின்றன!

எனைச் சூழ்ந்த பெருவெளியெங்கும்
நிரம்பித் தாக்கும் பேரிரைச்சல்
சகித்து வாழ முடியாச் செய்திகளைத் தருகின்றன:
நீ தந்த சிதைவுகளிலிருந்து தானே மீள
நான் உயிர்த்து வர வேண்டும்!

யாரை உதறி எறிந்து
யார் வெளியேறுவது?
வடபுலம் நான் தென் திசை நீ என்ற
நமதெல்லைகளைக் களைந்து
ஆண்டாண்டுகளாகச் சிக்கிவாழும்
பிம்பங்களிலிருந்து மெய்யன்பை
வெளிக் கொணர்வோம்!

உனது அதிகாரங்களையும்
எனது அண்டி வாழ்தலையும்
கீழிறக்கி வைத்துவிடுவது
சாத்தியப் படுமெனில் ஒன்று சேர்வோம்!

நீ அவனைக் காதலித்தாயா? எனத்
தொலை புலத்திலிருந்து கேட்கும்
அண்ணனுக்கு
நாளை பதில் எழுதுவேன்!