அந்த வயல் வெளி மீது வாழ்வும் மொழியும் வேறுபிரிக்கப் பட்டது
வானமும் திசைகளும் விக்கித்து நின்றிட ,விதியெழுதப் பட்டது!

ஊரெங்கிலும் அச்சம் விதைக்கப் பட்டிருந்த இரவுப் பொழுதும்
வைத்தியசாலையும் மருந்து வாடையும்எனது நினைவை விட்டு
இன்னும் நீங்குவதாயில்லை!
மருத்துவ மனையின் விசாலமான முற்றவெளியெங்கும்
மின் விளக்குகளின் ஒளிக்கற்றைகள் பரவியிருந்தன.
கடலோர மணலும் காய்ந்த புற்களும் கால்களின் கீழே சரசரத்தன
ஆங்காங்கே ஆண்கள் பதற்றத்துடன் நின்றிருக்க.....
இவைதவிர்ந்த காற்று வெளியெங்கும் சோகத்துடன் அமைதி குடியிருந்தது!

தமது பண்பாட்டுச் சுமைகளைச் சூடிநின்ற பெண்கள்
நோயாளர் அறைகளெங்கிலும் நடமாடித் திரிந்தனர்
குசுகுசுத்துக் கதைக்கையில் அவர்தம் முக்காடுகளின் சரிவில் நகைகள் மின்னின.
தற்காலிகச் சவச்சாலையாக மாறிப் போன இடத்தில்-அவை
வெண்ணிறப் போர்வைகளால் மூடி வைக்கப் பட்டிருந்தன:
கண்ணீர் வற்றிப் போன உறவுகள் வெளியே காத்திருக்கக் கூடும்!
தாய்,பிள்ளை,மனைவியென்ற பாசங்கள் வீடுகளில் துடித்திருக்கக் கூடுமங்கே!

இன்று போல் எமது பெண்கள் அல்லாடி வாழ்ந்திடவில்லையன்று:
வயோதிகப் பெற்றோர் தமது புதல்வர்களுக்காக அழுது புலம்பவுமில்லை:
அனாதைகளான சிறுவர்கள் வீதிகளில் அலைந்து திரிந்திடவுமில்லையன்று ...!

மாலைப் பொன்னொளி கவியெழுத வரும் அழகிய வயல் வெளியைச்
சனியன்கள் தம் துயரப் போர்வை கொண்டு மூடின!
மரணப் பீதியுடனான ஓலம் திசைகளை உலுப்பிற்று:
வயல் வெளி கடந்து அவ்வதிர்வு
நீலம் பூத்த மலைகளையும் அடிவானையும் நீண்டு தொட்டது!

அறுவடைக்குச் சென்ற அப்பாவிகள் அறுவடை செய்யப் பட்டனர்:
பின் உழவு இயந்திரப் பெட்டிகளில் நெல் மூடைகளுக்குப் பதிலாகத்
துண்டாடப் பட்ட சடலங்கள் எடுத்துவரப்பட்ட போது எல்லாம் தடுமாறி நின்றன!
இவ்வாறு வன்மமும் வெறுப்பும் வாரியிறைக்கப் பட்ட
வரலாற்றுக் காயம் நிகழ்ந்தது!
எல்லாவற்றையும் வீழ்த்திச் சிதைத்து அள்ளிப் போனது பிரளயத்தின் பெருங் காற்று!