முன்பு போல
எதுவித அறிமுகமுமற்றவளாக நான் போய் விடுகிறேன்:
உன் மனதிலெனக்கு
நன்மைகள் கொண்டோ தீடைகள் கொண்டோ
தீர்ப்பெழுதி விடாதே!

உய்த்துணர்வதால் மட்டுமே தெரிந்து கொள்ளத் தக்க
துயரங்களின் வலியை நானுனக்கு
உணர்த்திக் காட்ட முடியாது:
நிகழ்வுகளை விபரித்துச் சொல்வதனால்
சாக்காடாகிப் போன வாழ்வின் வேதனையை
வெளிப்படுத்தவுமேலாது!

உன் மனத்திரையினூடு சட்டமிட்டுப் பார்க்கும்
எல்லைகள் உள்ள வரை
எனது குரலின் நியாயத்தை நீயுணர முடியாது!

அனைத்துப் பூதங்களுக்கும் பயந்தவளாய்
எல்லாக் குற்றச் சாட்டுகளுக்கும் மௌனமாய்த்
தலையசைப்பவளாய்
எதிர்த்துச் சொல்ல எந்த வார்த்தைக்கும் உரிமையற்றவளாய்
தனதினத்தை மாத்திரமே நேசிப்பவளாய்
இருக்க வேண்டுமென எனக்குச் சாசனமேதுமில்லையே...!

உன் கொள்கைகளின் வழியே யாவரும் நடக்கவோ
நீ வெறுப்பவைகளை மற்றவரும் வெறுக்கவோ
அல்லது
வேண்டாம்,உனக்கிவைகளைக் கூற முடியாது
அறிவிலும் ஆற்றல்களிலும் முதன்மையானவன் நீ
அன்றியும் எனது மதிப்பு மிக்கவன்!

உனது உரையாடலின் தொனி
நான் தவறிழைத்து விட்டதென
உணர்த்திப் போவது அறிவாயா?
செய்யாததொன்றுக்காக உன்னெதிரில்
தண்டனை பெற்ற உள்ளமெனது!
நீ அறிந்தவைகளுக்கு அப்பாலுள்ள
கறைபடியாத ஆத்மாவின் கதையெனது!
உன் மனதின் பதிவுகளை மாற்றிக் கொள்வாயாக!

நாளை
எந்தவித அறிமுகமுமற்றவளாக நான் போய் விடுகிறேன்:
உனதுள்ளத்தில்
நன்மைகள் கொண்டோ தீமைகள் கொண்டோ
எனக்குத் தீர்ப்பெழுதி விடாதிருப்பாயாக!